புது தில்லி: இந்த ஆண்டு நாதுலா கணவாய் வழியாக கைலாஷ் மானசரோவர் யாத்திரையை மீண்டும் தொடங்க இந்தியாவும் சீனாவும் முடிவு செய்துள்ளன.
வழக்கமாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை என்பது, ஆண்டு தோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரை நடைபெறும். இந்த யாத்திரையை மேற்கொள்ள, உத்தராகண்ட் மாநிலம் லிபுலெக் கணவாய் மற்றும் சிக்கிம் மாநிலத்தில் உள்ள நாதுலா கணவாய் என இரண்டு வழிகள் உள்ளன. இந்த இரண்டு வழிகளில் கைலாஷ் செல்ல பக்தர்கள் இந்தியா, சீனா என இரு நாடுகளாலும் அனுமதிக்கப்படுகிறார்கள்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிக்கிமில் டோக்லாம் பகுதியில் பதற்றம் ஏற்பட்டதால் எல்லைப் பகுதியில் இந்தியா – சீனா இரு நாட்டுப் படைகளும் குவிக்கப்பட்டன. எல்லையில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக இந்தியாவில் இருந்து பக்தர்கள் நாதுலா கணவாய் வழியே கைலாஷ் யாத்திரை செல்ல சீனா அனுமதிக்க மறுத்தது. பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, கடந்த ஜூன் 28-ஆம் தேதி இரு நாட்டு படைகளும் எல்லையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டன.
இந்நிலையில், ளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சீனாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். பெய்ஜிங்கில் அவர் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ உடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, இந்த ஆண்டு நாதுலா கணவாய் வழியே மானசரோவர் யாத்திரையை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் முடிவு செய்தன. இதை இரு நாட்டு அமைச்சர்களும் கூட்டாக செய்தியாளர்களிடம் அறிவித்தனர். இது குறித்து சுஷ்மா ஸ்வராஜ் கூறுகையில், ‘‘இந்தியாவில் இருந்து நாதுலா கணவாய் வழியாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு சீன தரப்பில் இருந்து முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்று கூறினார்.
எனவே இந்த வருடம் நாது லா கணவாய் வழியாகவே கைலாஷ் மானசரோவர் யாத்திரை மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.