இன்று உலக மக்கள் தொகை தினம்! இன்றைய தினத்தில், உலகில் இரண்டாவது பெரிய நாடாக, மக்கள் தொகைப் பெருக்கத்தால் திணறிக் கொண்டிருக்கும் நாடாகத் திகழும் நம் நாட்டின் சிக்கல்களையும் சேர்த்தே நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது.

இறைவனின் படைப்பில் 84 லட்சம் ஜீவராசிகள் உள்ளன. அதில் மனிதனும் ஒருவன். ஜீவராசிகள் பிறப்பதும் இறப்பதும் இயற்கையின் சகஜம். பிறப்பில்லை என்றால் சிருஷ்டி நின்றுபோய்விடும்.

முன்பெல்லாம் பிறப்பும் இறப்பும் இயற்கையாகவே நிகழ்ந்தன.  ஆனால் தற்போது அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றம் அடைந்தால் அதன் தாக்கம் பிறப்பிறப்பிலும் கூட முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் தாக்கம், மக்கள்தொகைப் பெருக்கத்தில் வந்து நிற்கிறது.

சில மதங்களின் கோட்பாடுகள் குடும்ப கட்டுப்பாட்டிற்கு எதிராக இருப்பது கூட மக்கள்தொகை பெருக்கத்திற்கு ஒரு காரணமாகக் கருதப்படுகிறது.

தற்போது, நம் நாட்டின் மக்கள் தொகை 137 கோடியாக உள்ளது. உலக மக்கள் தொகையில் ஆறு பேரில் ஒருவனாக இந்தியன் இருக்கிறான். ஆனால் உலகிலேயே இளைஞர்கள் அதிகம் உள்ள நாடாக நம் நாடு இருப்பது நமக்கு பெருமிதமளிக்கிறது.

பாகவதத்தில் ஒரு கதை உள்ளது. பூமிக்கு பாரம் அதிகமாகும் போதெல்லாம் பூமாதேவி பசுமாடு வடிவத்தில் வைகுண்டத்திற்கு சென்று முறையிடுகிறாள். கொடிக்குக் காய் பாரமா என்ன? பூமாதேவி மக்கள் தொகை பெருகியதற்காக சென்று முறையிட வில்லை. அதர்மம் செய்பவர்களும் அசுர குணம் கொண்டவர்களும் அதிகமாகிவிட்டால் அவள் பாரத்தை உணர்கிறாள்.

மகாவிஷ்ணுவும் உடனே அவதரித்து அசுர வதம் செய்து பாரத்தை குறைக்க உதவுவார். ஆனால் துவாபர யுகத்தில் அசுரர்கள் என்று தனியாக வடிவம் பெறாமல் அரசர்களின் வடிவத்திலேயே மக்களைத் துன்புறுத்தி வந்ததால் கண்ணபிரான் இறங்கி வந்து மகாபாரத யுத்தம் செய்து அதர்மிகளான அரசர்களை அழித்தார்.

இது இயற்கை நியதியாக பின்னாளில் மாறிப் போனது.

யார்தான், அதிக மக்கள்தொகை வேண்டும் என்று விரும்புகிறார்கள்? ஏழை மக்கள், பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் சொத்தாக பார்க்கிறார்கள். குடும்பத்துக்குக் கைகொடுக்கும் ஆஸ்தியாக எண்ணுகிறார்கள்.

பிறக்கும் குழந்தை ஒரு வாயோடு மட்டுமல்ல இரண்டு கைகளோடும் இரண்டு கால்களோடும் பிறக்கின்றன. தங்கள் பங்குக்கு உழைத்துக் குடும்பத்திற்கு வருமானம் ஈட்டுத் தருவார்கள் என்று ஆசைப்படுகிறார்கள்.

உலக மக்கள் தொகையில் முதலிடம் வகிக்கும் சீனா என்ன செய்தது? 1970இல் இருவர் வேண்டாம். ஒருவரே போதும் என்றது. இரண்டாவது பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டுமென்றால் அரசாங்கத்திற்கு ஒரு பெரிய தொகையை அபராதமாக செலுத்த வேண்டும். மூன்றாவது குழந்தை ?மூச்….! அரசு அனுமதிக்கவே அனுமதிக்காது.

ஆனால் 2013 இல் சட்டத்தைத் தளர்த்தி இரண்டாவது குழந்தைக்கு அரசு அனுமதித்தது. ஏன் என்றால் ஒரே பிள்ளையாக இருந்தபோது வயதான பெற்றோரை பார்த்துக் கொள்வதில் சிரமம் இருந்தது. இருபுறமும் ஒரே குழந்தையாவதால் இருபுறத்துப் பெற்றோரையும் ஒரே குடும்பம் பார்த்துக் கொள்ள வேண்டி வந்தது.

அதோடு கிராமத்தில் இருந்து நகரங்களுக்கு மக்கள் வருவதை தடுக்கவும் சீன அரசு பெருமளவு தடைகளை விதித்தது. கிராமத்திலிருந்து நகரங்களில் வேலை பார்ப்போரின் பிள்ளைகளை நகரப் பள்ளிகளில் சேர்க்க கூடாது என்று சட்டம் இயற்றியது.

சீனாவின் குடும்பக் கட்டுப்பாடு விதிகள் தீவிரமாக இருப்பதால் தற்போது சீனாவில் ஏஜிங் ப்ராப்ளம்… அதாவது வயதானோர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. சராசரி சீன மனிதனின் வயது ஐம்பதாக உள்ளது.

ஜப்பானில் ஓர் எழுத்தாளர் ஒரு பிரம்மச்சாரியிடம் வினவினாராம்… “நீங்கள் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை ?” என்று கேட்டாராம்.

“நான் வசதியானவன் இல்லை. திருமணம் செய்து கொண்டால் பிள்ளைகள் பிறப்பார்கள். அவர்களை வளர்த்து கல்வி கற்பித்து வளர்க்க என்னிடம் பணம் இல்லை” என்று பதிலளித்தாராம்.

அதே எழுத்தாளர் இந்தியாவுக்கு வந்தார். ஒரு ரயில்வே பிளாட்பாரத்தில் ஆறு குழந்தைகளோடு ஒரு குடும்பம் படுத்து உறங்குவது கண்டு, “வீடு கூட இல்லை. ஏனய்யா இத்தனை பிள்ளைகளைப் பெற்றாய்?” என்று கேட்டாராம்!

அதற்கு நம்மாள், “நான் ஏழைதான். அதனால் என்ன? இந்த என் குழந்தைகளில் யாரேனும் ஒருவன் வளர்ந்து பெரியவனாகி எங்கள் அனைவரையும் காப்பாற்றுவான்” என்றானாம்.

மக்கள்தொகைப் பெருக்கம் பற்றி மல்தூசியன் தியரி மிகவும் பிரசித்தி பெற்றது.

இவர் வருங்கால சமுதாயத்தின் முன்னேற்றத்தை பாதிக்கும் மக்கள்தொகைப் பெருக்கம் என்ற சிறிய நூலை எழுதினார். அதுவரை யாரும் அறியாத ஒரு சிறிய ஊரில் மதபோதகராக இருந்த தாமஸ் ராபர்ட் மல்தூஸ் இந்த நூலை எழுதி வெளியிட்டதும் திடீரென்று உலகப் புகழ் பெற்றவரானார்.

உணவு உற்பத்தியை விட மக்கள்தொகை அதிகமாக உள்ளது என்பதே அவருடைய பிரதான கொள்கையாக இருந்தது.

அதற்கு மூன்று நிவாரணங்களை எடுத்துரைத்தார்.
* ஆணும் பெண்ணும் வயது முதிர்ந்தபின் மணம் புரிந்து கொள்வது.
* திருமணத்திற்கு முன் ஆணும் பெண்ணும் கற்பைக் காப்பாற்றுவது.
* திருமணத்திற்குப் பின் தாம்பத்தியத்தில் கட்டுப்பாட்டோடு இருப்பது.

இதனையே கற்போடு கூடிய குடும்ப கட்டுப்பாடு விதிகளாக அவர் குறிப்பிட்டார். சத்துணவு கிடைக்காமல் போவது பசிப்பிணி மருத்துவ வசதி குறைவு சுத்தம் சுகாதாரக் குறைவு போன்றவற்றால் ஏழைகளின் மரண சதவீதம் அதிகமாகிறது.

மக்களுக்கு அடிப்படை வசதிகளான, இருக்க இடம், உடுக்க உடை, சத்தான உணவு அளிக்க முடியாத போது குடும்பக் கட்டுப்பாடு ஒன்றே இதற்கு சரியான பதிலாக இருக்க முடியும்.

– ராஜி ரகுநாதன்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...