உங்களை உயர்த்தும் மேலாண்மை-4: அக்பருக்கு பீர்பால் அழகாய்ச் சொன்ன தீர்வு!

அக்பர் தன் அரச முத்திரையை எடுத்து அவனிடம் காட்டினார். அவனோ, அதை வெடுக்கென்று பிடுங்கி தன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு ஓட்டமெடுத்தான்.

நவீன மேலாண்மை  தத்துவமாகப் பேசுகிறது. நம் நாட்டிலும் ஒரு அறிவாளியின் கதை ஒன்று இருக்கிறது. அது, பாதகமான சூழ்நிலையில் எப்படி நடந்துகொள்வது என்ற ‘சிச்சுவேஷன்’ சிக்கலை வெகு அழகாக அவிழ்த்துவிடும். அது, அக்பர் – பீர்பால் கதைதான்!

மன்னர்- நாட்டின் நிலை அறிய நகர்வலம் வரவேண்டியதுதான்; அதுவும் மந்திரி பிரதானிகள் உடன்வர! ஆனால், அக்பருக்கு ஒரு விபரீத எண்ணம் ஏற்பட்டது. நடுப்பகலில் ஆக்ராவின் தெருக்களில் தான் மட்டும் தனியே நகர்வலம் வருவது என்று. அதுவும் மாறுவேஷத்தில்.

ஆனால், அக்பரின் இந்த முடிவுக்கு பீர்பால் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். ‘‘அரசே, ஒரு நாட்டுக்கு ஆள்பவனின் பாதுகாப்பு மிகவும் முக்கியம். அது கௌரவமானதும் பாதுகாக்கப்பட வேண்டியதும்கூட! எனவே இந்த முடிவைக் கைவிடுங்கள்.’’ என்றார். அக்பர் கேட்பதாக இல்லை.

தெரு வழியே ஒரு வழிப்போக்கனைப் போலச் சென்ற அக்பர், தன்னை ஒருவன் பின்தொடர்வதைப் போன்று உணர்ந்தார். பின்னால் திரும்பிப் பார்த்தால் அவன் வேறு ஏதோ செய்தான். அவன் அருகில் சென்ற அக்பர், ‘‘உன் பெயர் என்ன?’’ என்று கேட்டார்.

‘‘நான் வழிப்போக்கன்’’
‘‘வாழ்வதற்கு என்ன செய்கிறாய்?’’
’’ஏதோ செய்கிறேன்’’
‘‘நீ வசிக்கும் இடம் எங்கே?’’
‘‘எல்லா இடத்திலும்தான்!’’
‘‘அப்படியா. நீ யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறாய் தெரியுமா?’’
‘‘ஓ தெரியுமே! ஒரு மனிதனிடம்தான்!’’
‘‘சாதாரண மனிதனில்லை, நாட்டின் சக்ரவர்த்தியிடம்! சந்தேகம் இருந்தால் இதோ என் முத்திரையைப் பார்…’’

அக்பர் தன் அரச முத்திரையை எடுத்து அவனிடம் காட்டினார். அவனோ, அதை வெடுக்கென்று பிடுங்கி தன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு ஓட்டமெடுத்தான்.

வேறு வழி!? அக்பர், ‘‘திருடன் திருடன்’’ என்று கூவினார். சுற்றிலும் இருந்து ஆட்கள் திரண்டார்கள். ஓடி வந்தவனைப் பிடித்துக் கொண்டார்கள்.

பிடிபட்டவன் சொன்னான்… ‘‘முட்டாள்களே, நான் நாட்டின் சக்ரவர்த்தி. இதோ பாருங்கள் என் முத்திரை. நான் நகர்வலம் வந்தேன்…’’ என்று சொல்ல, வந்தவர்கள் பெரிய ‘சலாம்’ போட்டு ஒதுங்கிக் கொண்டார்கள்.

மக்கள் தன்னைத் தாக்குவதற்குள் அரண்மனையில் சரண்புகுந்துவிட வேண்டும் என்று அக்பரும் ஓட்டமெடுத்தார் அரண்மனை நோக்கி.

பீர்பால் சொல்லச் சொல்லக் கேட்காமல் இப்படி வந்துவிட்டோமே! எப்படி அவர் முகத்தில் விழிப்பது என்று குற்றவுணர்ச்சி மேலோங்க தலை குனிந்தபடி வந்தார் அக்பர்.

தன் அறையில் ஒரு மேஜையில் ஒரு பார்சல் இருப்பதைக் கண்ட அவருக்கு திடீர் அதிர்ச்சி. அதைப் பிரித்துப் பார்த்தபோது ஒரு கடிதமும், அரசு முத்திரையும் இருந்தது.

‘‘மக்களோடு சரிசமமாக இருந்து, நாட்டின் நாடி பிடித்துப் பார்க்க தனியே போகிறேன் என்றீர்களே… இப்போது ஒரு முத்திரையை மட்டும்தான் இழந்தீர்கள். இனி, மோசமான எதுவும் நடக்கலாம் என்பதைப் புரிந்துகொண்டிருப்பீர்கள்…’’ என்றது கடிதம்.

அக்பருக்கு பீர்பால் சொன்னதன் பொருள் நன்கு புரிந்தது.

நமக்கு..? மேலாண்மை சொல்கிறது – எந்த நிலையிலும் உணர்ச்சிப் பிழம்பாக நடந்து கொள்ளக்கூடாது. முக்கியமான முடிவுகள் எடுக்கும் முன் நன்கு தீர்மானிக்க வேண்டும். உடன் பணிபுரிபவரோ அல்லது கீழ்நிலை பணியாளரோ சொல்லும் முக்கிய ஆலோசனைகளைப் புறந்தள்ளக்கூடாது. அவற்றில் ஏதோ ஒரு சூட்சுமம் இருக்கும். இரண்டாவது கருத்துக்கு இடம்தராமல், அவற்றை ஏற்கலாம் & மாறுபட்ட உங்கள் முடிவு உங்களை குப்புறத் தள்ளாதபடி!

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...