Homeஇந்தியாஒரே பேச்சில்... தேசிய 'ஹீரோ' ஆன லடாக் எம்.பி.,! ஆவேச அதிரடிப் பேச்சை கொண்டாடுகிறார்கள்!

ஒரே பேச்சில்… தேசிய ‘ஹீரோ’ ஆன லடாக் எம்.பி.,! ஆவேச அதிரடிப் பேச்சை கொண்டாடுகிறார்கள்!

Jamyang Tsering Namgyal MP of Ladakh wins heart in his parliament speech watch full video - Dhinasari Tamilதனது ஒரே பேச்சில் தேசிய ஹீரோ ஆகி விட்டார் லடாக் பகுதி பாஜக., எம்பி.,! இன்று தேசம் உச்சரிக்கும் பெயர்… ஜாம்யாங் ஸேரிங் நாம்க்யால்! பலரது வாயில் உச்சரிக்க நுழைகிறதோ இல்லையோ ‘லடாக்’ என்ற பெயர் மட்டும் ‘படக்’ என்று மக்கள் மனத்தில் சிம்மாசனம் இட்டு ஒட்டிக் கொண்டிருக்கிறது!

சட்டப்பிரிவு 370-வது நீக்கத்திற்கு எதிராக கார்கிலில் எவ்வித போராட்டமும் நடைபெறவில்லை; 70% மக்கள் இந்த முடிவை வரவேற்கின்றனர் என்று லடாக் எம்.பி. ஜாம்யாங் ஸேரிங் நாம்க்யால் நாடாளுமன்றத்தில் பேசிய பேச்சுக்கு அப்படி ஒன்றும் பெரிய ஈர்ப்பு இல்லை என்றாலும், காஷ்மீர் மாநிலத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப் பட்டிருந்த லடாக் இப்போது யூனியன் பிரதேசம் ஆகி, அதன் 70 ஆண்டு போராட்டத்துக்கு ஒரு முடிவு கிடைத்திருப்பதை ஜாம்யாங் ஸேரிங் நாம்க்யால் சொன்ன விதம்தான் தேசத்தை ஈர்த்திருக்கிறது.

இவர் தான் இப்போது ஹீரோ. இந்த ஹீரோவை உடனே இனம்கண்டு கொண்டு அதை வெளிப்படுத்தியவர், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி. உடனே அவர் நாம்க்யாலை தன்னுடன் அருகே நிற்க வைத்து ஒரு படம் எடுத்து, தனது டிவிட்டர் பதிவில் போட்டு… இதோ இன்றைய ஹீரோ என்று பறைசாற்றி விட்டார்.

காஷ்மீர் விவகாரத்தில், தமிழகத்தில் திராவிட இயக்க பிரசாரங்களுக்காகப் போடப் பட்டிருக்கும் புத்தகங்களைப் படித்தும், திராவிட இயக்கங்களின் ஊடகங்களில் வெளியாகும்  தகவல்களையும் கேட்டும், திமுக., எம்.பி., கனிமொழி, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் அவையில் பேசியபோது, அதற்கு சரியான வகையில் பதிலளிக்கும் வகையில் பேசியுள்ளார் லடாக் எம்.பி.,!

நீங்கள் எங்கே எழுதியதைப் படித்துக் கொண்டு, லடாக் என்பது எங்கே இருக்கிறது என்பது தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்… நான் அந்த இடத்தில் இருந்து வருகிறேன்.. மண்ணின் மைந்தன். எனக்குத்தான் அதன் உணர்வு தெரியும்… என்ற வகையில் பதிலடி கொடுத்தார்.

அவரது ஆவேசப் பேச்சு அவையில் பெரும் அதிர்வலைகளையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.  அதே நேரம், இந்த இளம் எம்.பி.,யின் பேச்சை ரசித்துக் கேட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா.,வின் கவனமும் இவர் மீது குவிந்துவிட்டது.

அவர் அவையில் பேசியதைக் கேட்டு இப்போது சமூக வலைத்தளங்கள் முழுதும் இவரது பேச்சின் காணொளிதான் வைரலாக சுற்றிச் சுற்றி வருகிறது. தமிழர்களால் உச்சரிக்க சிரமமாக இருந்தாலும் இவரது பெயரை லடாக் எம்பி., என்று குறிப்பிட்டுச் சொல்கிறார்கள்.

என் தொகுதியை, யூனியன் பிரதேசமாக, மத்திய அரசு அறிவித்துள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதும் வரவேற்க தக்க ஒன்று. இதுவரை, ஜம்மு – காஷ்மீரின் வளங்களை இரண்டு குடும்பத்தினர் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். அதற்கு, இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. லடாக் பகுதி மக்கள் தங்கள் பகுதியை, யூனியன் பிரதேசமாக அறிவிக்கும்படி 1948லிருந்தே வலியுறுத்தி வந்தனர். அதற்கு, இப்போது தான் பலன் கிடைத்துள்ளது என்று பேசினார் நாம்கியால். இப்படிச் சொன்னால் அது சாதாரணம். ஆனால் அவரது பேச்சின் உட்கருத்தை உணர்வுப் பூர்வமாகக் கேட்கும் போதுதான், மண் சார்ந்த ஒருவரின் மனக்குமுறல் எத்தகையது என்பது நமக்குத் தெரியவரும்.

காஷ்மீரில் 370ஆம் பிரிவு திரும்பப் பெறப்பட்டது. அதை வரவேற்று நாடாளுமன்றத்தில் லடாக்கின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜாம்யாங் சேரிங் நாம்க்யால் (Jamyang Tsering Namgyal Namgyal) 6-ஆகஸ்ட்-2019 அன்று ஆற்றிய உரை:

”பண்டிட் ஜவாஹர்லால் நேருவின் தவறான முடிவால் நேர்ந்த பிழையை இன்றைய அரசு சரிசெய்துள்ளது. அதை நாங்கள் வரவேற்கிறோம். இங்கே பேசிய பலரும் லடாக்கிலே, கார்கிலிலே என்று பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் லடாக் என்றால் என்ன, எங்கிருக்கிறது என்று தெரியுமா? கார்கில் என்றால் என்ன என்று தெரியுமா? இவற்றின் முழு விவரம்தான் தெரியுமா?

jamyang tsering namgyal - Dhinasari Tamil

இப்படிப் பேசிய பலரும் லடாக்கைத் தூக்கி ஓரமாகப் போட்டிருந்தார்கள். அங்கே உண்மையில் என்ன நடந்தது, என்ன நடக்கிறது என்று கொஞ்சம் கூடக் கவலைப்படவில்லை.

இதே நாடாளுமன்றத்தில் லடாக்கில் புல் கூட முளைப்பதில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். லடாக்கின் மொழி, உணவு, கலாசாரம், வேலைவாய்ப்பு, வாழ்க்கை முறை எல்லாம் அவர்களுக்குத் தெரியுமா? லடாக்கைக் குறித்துப் பேசிய அவை உறுப்பினர்களில் எத்தனை பேர் நேரில் லடாக்கை பார்த்திருக்கிறார்கள்? அவர்களுக்குத் தெரிந்த லடாக்கெல்லாம் புத்தகங்களில் வாசித்த லடாக் மட்டுமே!

லடாக் கடந்த 71 வருடங்களாக யூனியன் பிரதேசமாக மாற போராடிக் கொண்டிருக்கிறது. 1948ல் உருவான லடாக் ஜனசங்கத்தின் தலைவர் நேருவிடம் லடாக்கை, தனி யூனியன் பிரதேசமாக மாற்ற கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையில் லடாக்கை யூனியன் பிதேசமாக மாற்றுங்கள் அல்லது இந்தியாவின் இதர பகுதிகளோடு இணையுங்கள்; ஆனால் ஜம்மு காஷ்மீரோடு மட்டும் இணைத்து விடாதீர்கள் என்று கோரியிருந்தார்.

அன்றைய நேரு அரசு எங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல, அதைப் பற்றி யோசிக்கக்கூட தயாராக இல்லை. காஷ்மீரத்தோடு சேர்த்ததால்தான் எங்கள் மொழி, வாழ்க்கை, கலாசாரம், வளர்ச்சி எல்லாம் தடைபட்டுப் போனது.

Jamyang Tsering Ladakh MP - Dhinasari Tamilடாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, ஜம்மு காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து கொடுப்பதை எதிர்த்ததோடு, லடாக் ஜம்மு காஷ்மீரோடு இணைக்கப் படக்கூடாதென்றும் போராடினார். அவரை நாங்கள் இன்று நன்றியோடு நினைவு கூர்கிறோம்.

இன்னொன்றையும் மறந்து விடாதீர்கள். பாகிஸ்தானோடு நடந்த அனைத்துப் போர்களிலும் லடாக் தனது பங்களிப்பையும் பலிதானத்தையும் இந்திய நாட்டிற்காக வழங்கியுள்ளது.

1948, 1972 மற்றும் 1999 வருடங்களில் நடந்த அனைத்துப் போர்களிலும் லடாக் மக்கள் தங்கள் இன்னுயிரை அளித்திருக்கிறார்கள். இதற்குக் காரணம் லடாக்கியர்கள் இந்தியாவைத்தான் தனது நாடாகக் கருதினார்கள். தங்களை இந்தியர்களாகத்தான் கருதினார்கள். இந்தியாவுக்கே தங்கள் வாழ்வையும் சாவையும் அர்ப்பணிக்க ஆசைப்பட்டார்கள். ஆனால் எங்கள் விருப்பத்திற்கு மாறாக வலுக்கட்டாயமாக ஜம்மு காஷ்மீரோடு நாங்கள் இணைக்கப் பட்டோம்.

இங்கே, காஷ்மீரைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏ இவற்றை நீக்குவதால் என்ன ஆகிவிடும் என்று கேட்டார்.

இதற்கு என்னுடைய பதில்…  இந்த சட்டப் பிரிவுகள் நீக்கத்தால் மக்களுக்கு சேர வேண்டிய பணத்தை, இரு குடும்பங்கள் மட்டுமே தின்று கொண்டிருப்பது இனி நிற்கும். அடுத்து.. ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகிய மூன்றுமே வளர்ச்சி பெறும்.

அதே உறுப்பினர்கள் இனி கார்கில் என்ன ஆகும் என்றெல்லாம் கவலை தெரிவித்தனர். ஆனால் கார்கிலின் 70% மக்கள் யூனியன் பிரதேசமாக ஆவதை முழு மனதுடன் வரவேற்கிறார்கள்.

2014 தேர்தல் அறிக்கையிலேயே யூனியன் பிரதேசமாக மற்றுவதை சேர்க்கச் சொல்லியிருந்தோம். 2019 தேர்தல் அறிக்கையிலும் இதே கோரிக்கையைச் சேர்க்க வைத்தோம்.

நாங்கள், பெளத்தர்கள், கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள் என்ற பாகுபாடில்லாமல்  கார்கில் மற்றும் லடாக்கின் ஒவ்வொரு கிராமத்தின் ஒவ்வொரு வீடுகளிலும்… அனைவரிடமும் சென்று யூனியன் பிரதேசமாக ஆவதின் அவசியத்தையும், அதன் நன்மையையும் எடுத்துச் சொல்லியிருந்தோம்.

அவர்கள் அனைவரும் ஒருமனதாகவும் முழுமனதுடனும் இதுவரை லடாக் பகுதியிலிருந்து தேர்வான எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைக் காட்டிலும் அதிகபட்ச வாக்கு வித்தியாசதில் என்னை தேர்வு செய்து அவைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மக்கள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை முழுமையாக நம்பினார்கள். இந்த தனி யூனியன் பிரதேசத்து அறிவிப்பை முழுமனதுடன் வரவேற்கின்றனர்.

கார்கிலைப் பற்றிப் பேசும் அவை உறுப்பினர்களுக்கு கார்கிலைப் பற்றி என்ன தெரியும்? நாடாளுமன்ற கூட்டுக் குழுவினர் ஜம்மு மற்றும் காஷ்மீருக்குச் சென்றனர். உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அப்போது லே பகுதிக்கு  வந்திருந்தார். அப்போது அவர் அவர்களிடம், ‘உங்களுக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்டார்.

அதற்கு நாங்கள், லடாக்கை தனி யூனியன் பிரதேசமாக மாற்றுங்கள்” என்றோம். அதுவே எங்கள் கோரிக்கையாக இருந்தது.

வேறு என்ன வேண்டும் என்ற கேள்விக்கு, ‘லடாக்கைத் தனி யுனியன் பிரதேசமாக மாற்றுவது மட்டுமே எங்கள் கோரிக்கை; வேறு எதுவும் வேண்டாம்’ என்றோம்.

லடாக்கின் அனைத்து மத அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் அனைவரும் ஒரே குரலில் லடாக்கை தனி யூனியன் பிரதேசமாக்க கையெழுத்திட்டு மனு அளித்தோம். இந்த மனுவில் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் கையெழுத்திட்டிருந்தன.

ஆனால் ஜனநாயகம் பேசும் காங்கிரஸ் என்ன செய்தது தெரியுமா? அந்த மனுவில் கையெழுத்திட்ட காங்கிரஸ் தலைவர்களை உடனடியாக கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டது. இதுதானா உங்கள் ஜனநாயகம்? இதுதானா உங்கள் பேச்சுரிமை?

namgyal jamyang tsering - Dhinasari Tamilநேற்று (ஆக.5) காலை 11 மணியில் இருந்து அவை உறுப்பினர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இந்த சட்டப் பிரிவுகளை நீக்குவதால் காஷ்மீர மக்களின் நிலைமை என்ன ஆகும்? அவர்களின் உரிமை என்ன ஆகும்? இப்படி தொண்டை கிழிய கத்திக் கொண்டிருந்தனர். இந்த அவை மூலமாக அப்படிப் பேசுபவர்களைப் பார்த்துக் கேட்கிறேன்… அவர்கள் மூலமாக ஜம்மு காஷ்மீரத்தை ஆட்சி செய்பவர்களைப் பார்த்துக் கேட்கிறேன்… இந்திய அரசாங்கத்திடம் இருந்து வரும் பணம், ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் இரண்டுக்கும் சேர்த்து வழங்கப் படும் பணம். ஆனால் நீங்கள் லடாக்கின் வளர்ச்சிக்கு என்ன செய்தீர்கள்? லடாக்கிற்கான பணத்தையும் சேர்த்துத்தானே காஷ்மீருக்குச் செலவு செய்தீர்கள். இதுவா உங்கள் சம உரிமை?

அடுத்து… ஜம்மு மற்றும் காஷ்மீரத்திற்கு இரு தலைநகரங்கள். குளிர்காலத் தலைநகரம் மற்றும் கோடைகாலத் தலைநகரம். அதில் லடாக்கிற்கான பிரதிநிதித்துவம் என்ன என்பதைப் பாருங்கள்.

தலைமைச் செயலகத்தில் 1000 வேலைவாய்ப்புகள் உருவாகிறதெனில் காஷ்மீரிகள் எடுத்துக்கொண்டது போக, ஜம்மு மக்கள் சண்டையிட்டுப் போராடிப் பெற்றுக் கொண்டது போக, மீதம் உள்ளதில் எத்தனை இடங்கள் லடாக்கிகளுக்கு தந்தீர்கள்? இதுவா உங்கள் சம உரிமை?

அத்னான் என்ற உறுப்பினர் மத்தியப் பல்கலைக்கழகம் குறித்துப் பேசினார். காஷ்மீரிகளுக்கு ஒன்றும், போராடிப் பெற்ற ஜம்மு மக்களுக்கு ஒன்றும் என கிடைத்தது. ஆனால் லடாக்கிற்காக… நான் மாணவர்கள் தலைவனாக, அனைத்து மாணவர்களையும் ஒன்று திரட்டி தலையில் கருப்புத் துணி கட்டிக் கொண்டு ஒரு பல்கலைக்கழகம் வேண்டும் என போராடினேன். கொடுத்தீர்களா? இதுவா உங்கள் சம உரிமை?

இப்போது லடாக்கின் வளர்ச்சியைப் பற்றிக் கவலைப்படும் காங்கிரஸ் உறுப்பினர்கள், முதலமைச்சராக இருந்தபோது லடாக்கின் வளர்ச்சிக்காக என்ன செய்தீர்கள்? புதிய மாவட்டங்களைப் பிரிக்கும்போதும் பாதி காஷ்மீருக்கும் மீதி ஜம்முவிற்கும் கொடுத்தீர்கள். லடாக்கிற்கு என்ன கொடுத்தீர்கள்? இதுவா உங்கள் சம உரிமை?

வரிவடிவமே இல்லாத காஷ்மீர மொழிக்கு அந்தஸ்து கொடுத்தீர்கள். ஜம்முவின் மொழிக்கும் அந்தஸ்து கொடுத்தீர்கள். ஆனால் வரிவடிவமும், பேச்சு வடிவமும் கொண்ட தனித்துவம் வாய்ந்த லடாக்கிய மொழிக்கு இன்றுவரை மொழி அந்தஸ்து கொடுக்கவில்லை. இதுவா உங்கள் சம உரிமை?

உறுப்பினர்கள் அனைவரும் மதச்சார்பின்மை மற்றும் மக்களாட்சி குறித்துப் பேசினார்கள். அது குறித்தும் நான் பேச விரும்புகிறேன்.

சட்டப் பிரிவு 370 இருக்கும் தைரியத்தில் காஷ்மீர் பண்டிட்டுகளை இரவோடு இரவாக அடித்து விரட்டினீர்களே… இதுவா உங்கள் மதசார்பின்மை? இதுவா உங்கள் சம உரிமை?

அவை உறுப்பினர் ஒருவர் சொல்கிறார்… லடாக்கில் இஸ்லாமியர்களின் மக்கள்தொகை அதிகமுள்ளது! அவர்களின் நிலை என்ன ஆகும்? என்று கவலைப்படுகிறார்.

நான் சொல்கிறேன், இதே சட்டப் பிரிவுகளைத் தவறாகப் பயன்படுத்தித் தான் லடாக்கிய பெளத்தர்களைப் படுகொலை செய்து, திட்டமிட்டே இஸ்லாமியர்களின் எண்ணிக்கை உயரும்படி செய்தீர்கள். இதுவா உங்கள் மதசார்பின்மை?

நான் சொல்கிறேன்… இந்த இரு குடும்பங்கள்…  அவர்கள் ஆட்சி செலுத்தவில்லை, ராஜாங்கம் நடத்தினார்கள்! இதே குடும்பம் 1979ல் லடாக்கை இரு பகுதிகளாகப் பிரித்தது. பெளத்தர்கள் பெரும்பான்மையுடன் லே மாவட்டம்… இஸ்லாமியர்கள் பெரும்பான்மையுடன் கார்கில் மாவட்டம் எனப் பிரித்தீர்கள். லடாக்கிய சகோதரர்களுக்குள் சண்டையை மூட்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள். இதுவா உங்கள் சம உரிமை? இதுவா உங்கள் மதசார்பின்மை?

இங்கு அமர்ந்து கொண்டு கார்கிலில் முழு அடைப்பு எனச் சொல்லிக் கொண்டிருக் கிறீர்கள். உங்களுக்கு யார் சொன்னது கார்கிலில் முழு அடைப்பு என்று..?

புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்! நான் இருக்கிறேன்… லடாக்கிலிருந்து வந்திருக்கிறேன். எந்தப் புத்தகத்தையும் பத்திரிகைகளையும் படித்து விட்டு பேசிக் கொண்டிருக்கவில்லை. கள நிலவரத்தை நான் லடாக்கியனாகப் பேசுகிறேன். நீங்கள் லடாக்கிலிருந்து வரவில்லை. நான் வந்திருக்கிறேன். இதுவரை நீங்கள் பேசி நாங்கள் கேட்டோம். இன்று நாங்கள் பேசுகிறோம், நீங்கள் கேளுங்கள். வசதியாக நன்றாக  அமர்ந்து கொண்டு  கேளுங்கள்….

jamyang namgyal - Dhinasari Tamilஇவர்கள் அனைவரும் ஏதோ ஒரு சாலையையும், சந்தையையும் கார்கில் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சகோதரரே… உங்களுக்கு கார்கிலைப் பார்க்க வேண்டுமெனில் சம்ஸ்கர் செல்லுங்கள், வாகா முல்கோட் செல்லுங்கள், ஆர்யன் பள்ளத்தாக்கிற்குச் செல்லுங்கள், த்ஸ்தி கர்கோன்னைப் பாருங்கள்.

70 சதவீதம் பகுதிகளும், மக்களும் அரசின் இந்த முடிவுக்கு வரவேற்பு அளிக்கின்றனர். இந்த சட்டத் திருத்தத்துக்கு நன்றி சொல்கின்றனர். கார்கிலில் இன்று நடப்பதாகச் சொல்வதெல்லாம் உண்மையில் நடக்கவில்லை… இங்கிருப்பவர்கள் அங்கே செல்போன் மூலம் பேசி, அவற்றைச் செய்ய வைக்கின்றனர். அவர்களுக்கே தெரியாது, தாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று!

கார்கில் மக்கள் தங்கள் நலனைக் குறித்து யோசிக்க வேண்டும், இங்கிருந்து உத்தரவு கொடுப்பவர்களின் பேச்சுக்களைக் கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது.

ஜன சங்கத்தின் நிறுவனர் டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி ஒரு தீர்மானம் எடுத்தார். ஒரு நாட்டில் இரு அரசு, இரு அடையாளங்கள், இரு தலைமைகள் இருக்கக் கூடாது… இருக்கவே கூடாது, கூடாது என்றார்.

இதே உறுதியுடன் நானும் கர்வத்துடன் சொல்கிறேன்… இவர்களுக்கே தெரியாது… இதுவரை லடாக்கியர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்று!

இன்று இவர்கள் ‘எங்கள் கொடி போகிறது’ என ஒப்பாரி வைக்கிறார்கள். ஆனால் சகோதரா… லடாக்கியர்களான நாங்கள் 2011லேயே உங்கள் கொடியை அகற்றி விட்டோமே! லடாக் ஹில் அட்டோனமஸ் டெவலப்மெண்ட் கவுன்சில் சேர்மன், கவுன்சிலர், டெபுடி மினிஸ்டர் ஒரு தீர்மானம் கொண்டுவந்து, ஜம்மு காஷ்மீர் கொடியை அகற்றிவிட்டு இந்திய மூவர்ணக் கொடியை அல்லவா பயன்படுத்தி வருகிறோம்! ஏனெனில் நாங்கள் இந்தியாவின் பகுதியாகவே இருக்க விரும்புகிறோம். இதுதான் லடாக்.

நான் இரு குடும்பங்களைப் பற்றிப் பேசி வருகிறேன். காஷ்மீரின் கௌரவம் காஷ்மீரின் கௌரவம் என தண்டோரா அடித்துக்கொண்டிருக்கிறார்களே… அவர்கள் சமாதானம் பேசுபவர்களல்லர்…! அவர்கள்தான் பிரச்னையே! அந்தப் பிரச்னை முடிவுக்கு வருகிறது. காஷ்மீர் தனது பாட்டன் சொத்து என்ற திமிரில் அவர்கள் அதிகார போதையில் இருக்கிறார்கள். அப்படி இல்லை… இல்லவே இல்லை.

எனது பேச்சை முடிக்கும் முன்னர் இந்திய அரசுக்கும், மதிப்புக்குரிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், அமித்ஷா அவர்களுக்கும், மற்றும் இந்த அவை உறுப்பினர்களுக்கும், இன்று எதிர்ப்பு தெரிவித்துவிட்டு நாளை இதன் பலனை அனுபவிக்கப் போகிறவர்களுக்கும் எனது முழு நன்றிகளை லடாக்கியர்கள் சார்பாகத் தெரிவிக்க விரும்புகிறேன்!

ஏனென்றால், இந்திய சரித்திரத்தில் முதன்முறையாக லடாக்கியர்களின் தேவைகளை, எண்ணங்களை இந்த அரசு கேட்கிறது. கார்கிலிலும், சீனத்தை ஒட்டியுள்ள பகுதியிலும் சொல்லவொண்ணாத் துயரங்களை அனுபவிக்கும் லடாக்கியர்களின் கஷ்டங்களை இந்த அரசு புரிந்து கொள்கிறது.

Jamyang Tsering Namagyan amitsha - Dhinasari Tamilஇந்த சட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். இதற்குப் பின்னரும் குழப்பத்தில் இருப்பவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன்…. நாட்டின்மீது அன்பு இருப்பின் அதை வெளியில் சொல்லுங்கள்! யாருக்காகவும் காத்திருக்காதீர்கள்!  கர்வத்துடன் சொல்லுங்கள்… ஜெய் ஹிந்த்! அபிமானத்துடன் சொல்லுங்கள்… நாங்கள் இந்தியர்கள் என!”

–இவ்வாறு நாம்க்யால் பேசியது, இன்று சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விவரம் எதுவும் தெரியாமல் வேண்டுமென்றே அரசியலுக்காக தங்கள் அறியாமையை வெளிப்படுத்துபவர்களுக்கு நல்ல சவுக்கடி கொடுத்தார் என்று சமூக வலைத்தளங்கள் நாம்க்யாலை கொண்டாடி வருகின்றன.

நாம்க்யாலின் பேச்சை வெகுவாக ரசித்துக் கேட்டார் அமித் ஷா. உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் முகங்களிலும் பெரும் மகிழ்ச்சி. இதை அடுத்து நாம்க்யாலை தனியாக அழைத்து அமித் ஷா பாராட்டியுள்ளார். பிரதமர் மோடியும் அவரது பேச்சை வெகுவாகப் பாராட்டியுள்ளார். இளைய தலைமுறையின் வேகமும் விவேகமும் அவர் பேச்சில் வெளிப்பட்டுள்ளதாக இன்று நாடே அவரைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,140FansLike
377FollowersFollow
67FollowersFollow
74FollowersFollow
2,865FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

ஆஸ்கர் விருது கலை அறிவியல் குழுவில் உறுப்பினராக நடிகர் சூர்யா..

ஆஸ்கர் விருது கலை மற்றும் அறிவியல் குழுவில் உறுப்பினராக அழைப்புவிடுவிக்கப்பட்ட முதல் தென்னிந்திய நடிகர்...

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனாவுக்கு பலி..

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா வால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .நுரையீரல்...

அஞ்சலி-பூ படத்தில் அறிமுகமான குணச்சித்திர நடிகர் ராமு காலமானார்..

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குணச்சித்திர நடிகர்...

தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் நடிகர் பாடகர் விஜய்..

தமிழ் சினிமா மட்டுமில்லாது தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் தமிழ் சினிமா குடும்பத்தில்...

Latest News : Read Now...