திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையைச் சேர்ந்த சிற்பியும், ஜனாதிபதி விருது பெற்ற கலைஞருமான டி.கே.பரணி (50). இவர் ஒற்றை அரிசியில் சிலை, சந்தன மரங்களில் நுண்வேலைப்பாடுகளுடன் சிலைகள் செய்து வருகிறார்.
இவர் 9-ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். இவரது மனைவி ரேணுகா, மகன் திலீபன் வயது 20, மகள் திவ்யா வயது 18 ஆகியோரும் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பரணி இந்த தொழிலை அவரது தந்தையிடம் இருந்து கற்று கொண்டார். ஆனால் அவரது தந்தைக்கு குரு ஒருவருமில்லை. இதை அவராகவே கற்று கொண்டார். சந்தன மரங்களில் செய்துவரும் நுண்வேலைப்பாடுகள் காரணமாக குடியரசுத் தலைவரின் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
தற்போது காஞ்சி அத்திவரதரை சந்தன மரத்தில் உருவாக்கியுள்ளார். 5 அங்குல உயரம், 4 அங்குல அகலம், 2 அங்குல குறுக்களவுடன் இந்த சந்தன மரச் சிலை நுண்ணிய வேலைப்பாடுகளுடன் உருவாகியுள்ளது. 25 நாட்களில் இந்தச் சிலையை உருவாக்கியுள்ளார் டி.கே.பரணி. இந்த சிலையை முதல்வரின் பார்வைக்குக் கொண்டு செல்ல அவர் திட்டமிட்டுள்ளார்.
எனக்கு ஆண்டுக்கு 5 கிலோ சந்தனமரங்கள் தேவைப்படுகிறது. இத்தனை ஆண்டுகளாக தேனாம்பேட்டையில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் அரசு மானியத்தில் எங்களை போன்ற தொழிலாளிகளுக்கு வழங்கி வந்தது. ஆனால் தற்போது சந்தன மரங்களை வழங்குவது தடை செய்யப்பட்டுவிட்டதால் எங்கள் தொழில் வெகுவாக பாதிக்கிறது
எனது தந்தை வைத்திருந்த சந்தன கட்டைகள் மூலம் நான் வேலை செய்து வருகிறேன். அதுவும் தீர்ந்து விட்டால் என்ன செய்வது என தெரியவில்லை. இதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கருணையுள்ளதுடன் பரிசீலனை செய்ய வேண்டும்.சந்தன மரங்களை எங்களுக்கு மானியத்தில் வழங்க வேண்டும். மற்ற மாநிலங்களில் இது போன்ற தடை இல்லை. சந்தனமரங்களை டெண்டர் எடுத்துக் கொள்ளுமாறு கூறுகின்றனர். ஒரு ஆண்டுக்கு 5 கிலோ தேவைப்படும் எனக்கு, நான் லட்சக்கணக்கில் டெண்டர் எடுக்க தேவையில்லை. மேலும் அவ்வளவு பணத்துக்கு நான் எங்கே போவது என கேள்வி எழுப்பியுள்ளார்.
இவரது பொருட்கள் சென்னை பூம்புகார் கடையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு குஜராத்தில் நர்மதை மாவட்டத்தில் சர்தார் வல்லபாய் படேலின் 182 மீட்டர் உயர சிலை திறக்கப்பட்டது.
இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் பூம்புகாரில் விற்பனைக்கு இருந்த டிகே பரணியின் பாரத்மாதா சிலையை வாங்கி சென்று பிரதமர் மோடிக்கு பரிசளித்தனர்.2018-ஆம் ஆண்டு இவரது அழகிய வேலைப்பாடுகளுக்காக கமலா விருது வழங்கப்பட்டது. விருதை பரணிக்கு அமெரிக்க பிரதிநிதி ஒருவர் வழங்கியுள்ளார். டெல்லியில் உள்ள தாஜ் கசானா என்ற கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள இவரது கைவினை பொருட்களில் ராதாகிருஷ்ணன் சிலையை பிரதமர் மோடி வாங்கி, அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு அளித்தார்.
அண்மையில் போப் ஜான் பாலுக்கு ஒரு அடியிலான சந்தன கட்டையில் சாந்தோம் தேவாலயத்தை செதுக்கி அது விஜிபி சகோதரர்களால் பரிசாக அளிக்கப்பட்டது. 1987-ஆம் ஆண்டு இலங்கை ஒப்பந்தத்தின்போது சிவன் கோயிலில் உள்ள நந்தி சிலையையும், அறுபடை வீடு சிலையையும் ராஜீவ் காந்திக்கு எம்ஜிஆர் பரிசளித்தார்.