தெலங்காணா மாநிலத்திலுள்ள பத்ராசலம் தக்ஷிண அயோத்தியாக போற்றப்படுகிறது. இன்று ஸ்ரீராம நவமி உற்சவத்தின் பாகமாக ஸ்ரீசீதாராம கல்யாண மகோற்சவம் அங்கு வெகு விமரிசையாக நடந்தேறியது. சைத்ர மாதம் சுத்த நவமியன்று காலை பத்தரை மணி முதல் பன்னிரண்டு மணிக்குள் அபிஜித லக்ன சுப முகூர்தத்தில் சீதாராம கல்யாணம் வைபவமாக கண்ணிற்கு விருந்தாக நடந்தது. அர்ச்சகர்களின் வேத மந்திர உச்சாரணையால் நகரம் முழுவதும் பவித்திரச் சூழல் நிலவியது.

கோதாவரி நதிக் கரையில் அமைந்திருக்கும் பத்ராசலம் கோவில் பக்தர்களால் நிரம்பி வழிந்தது.

ஞாயிறு காலை ஒன்பதரை மணியளவில் தெய்வீக தம்பதிகளின் உற்சவ மூர்த்திகளை மிதிலா மைதான மண்டபத்திற்கு எழுந்தருளச் செய்தார்கள். மணப்பெண்ணாக நாணத்தோடு புன்னகை மிளிர அருள்பாலித்தபடி சீதா தேவி வந்தமர்ந்தாள்.

மேள தாளங்களும் ராம நாம கோஷங்களும் முழங்க இன்று காலை 9.30 மணிக்கு சீதா ராம விவாஹ உற்சவம் ஆரம்பமானது.

பத்ராசல ராமதாசர் சமர்பித்திருந்த அணிகலன்களை பக்தர்களுக்குக் காண்பித்து பின் மணமக்களுக்கு அணிவித்தனர்.

நேற்று சனிக்கிழமை இரவு ராமாயலத்தில் எதுர்க்கோலு உற்சவமும் கருட சேவையும் கண்ணிற்கு விருந்தாக நடந்து முடிந்தன.

கோதாவரி நதியிலிருந்து சிறப்பாக குடத்தில் நீரெடுத்து வந்து அங்குரார்ப்பணம் செய்தார்கள்.

மாப்பிளை ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி கல்யாண சுப முகூர்த்தத்தில் மணப்பெண் சீதா தேவியின் தலை மேல் ஜீரகவெல்லக் கலவையை வைத்து பின்னர் மாங்கல்ய தாரணம் செய்தார்.

தெலங்காணா அரசு தரப்பில் அமைச்சர் இந்திர கிரண் ரெட்டி வந்திருந்து தெய்வீக மணமக்களுக்கு பட்டு வஸ்திரங்களும் முத்யால தலம்பராலுவும் சமர்ப்பித்தார்.

நாளை 15ம் தேதி திங்கட்கிழமை ஸ்ரீ ராம பட்டாபிஷேகத்தை சம்பிரதாய வைபவத்தோடு தேவஸ்தானம் முன்னின்று நடத்த இருக்கிறது.

ஆலயம் மின் விளக்கு அலங்காரத்தோடு வைகுண்டம் போல் ஜொலித்தது.

உற்சவ ஏற்பாடுகளை தெலுங்கானா மாநில அறநிலையத் துறை கமிஷனர் அனில்குமார் கவனித்து வருகிறார்.

ஆண்டுக்கொருமுறை ஸ்ரீராம நவமியன்று பத்ராசலத்தில் மிக மிக வைபவமாக நடக்கும் ஸ்ரீசீதாராமசந்திர மூர்த்தியின் கல்யாணத்திற்காக அதிகாரிகள் அனைத்தும் சித்தமாக ஏற்பாடு செய்திருந்தார்கள். பெரிய அளவில் திரண்டு வந்திருந்த பக்தர்களுக்கு எந்த வித சிரமமும் ஏற்படாத வகையில் முன்னேற்பாடு செய்திருந்தனர். நாளை நடக்க இருக்கும் மகா பட்டாபிஷேகத்திற்கும் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்கள்.

வெயில் அதிகமாக இருந்ததால் மிதிலா மைதானத்தில் ஏர்கூலர்களும் மின் விசிறி வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.

நகரில் எங்கு நோக்கினும் பக்தர்களின் கோலாஹலம். பத்ராசலத்தில் நேற்று சனிக்கிழமை முதலே எங்கு பார்த்தலும் பக்த ஜனங்களே! ராமாலய சுற்றுப் புரங்கள், கோதாவரி குளியல் துறைகள், கரைக்கட்டு, பேருந்து நிலையம், அம்பேத்கார் செண்டர், பிரிட்ஜ் செண்டர்…. இப்படி எங்கு பார்த்தாலும் பக்த ஜனங்களால் நகரம் பொங்கி வழிகிறது. எங்கு நோக்கினும் பச்சைத் தோரணங்கள், தண்ணீர் பந்தல்கள்.

மிதிலா ஸ்டேடியம் நிரம்பி வழிந்ததால் வெளியில் நின்று பார்ப்பதற்கு ஏதுவாக பெரிய டிவி திரைகளை அமைத்திந்தார்கள். பக்தர்களுக்கான வசதி நிலையங்கள், குடி நீர் வசதிகள் எல்லாம் சிறப்பாக செய்திருந்தார்கள்.

கோதாவரி ஸ்நான கட்டங்களிலும் விஸ்தா காம்ப்ளெக்ஸ் அருகிலும் ஹாமியானா பந்தல்களை பெரிய அளவில் கட்டியிருந்தார்கள். மாட வீதிகளிலும் மற்றும் எல்லா இடங்களிலும் பதர்களின் தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல்கள் அமைத்திருந்தார்கள்

கல்யாணத்தைக் கண்டுகளிக்க தெலங்காணா, ஆந்திரப் பிரதேஷ், சத்தீஸ்கட், ஒடிஸா, தமிழ்நாடு முதலான மாநிலங்களிலிருந்து மட்டுமின்றி பாரத தேசத்தின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் லட்சக் கணக்கில் திரண்டு வந்திருந்தனர். திருமணத்தைக் கண்டு பக்திப் பரவசத்தில் மூழ்கினர். சகல பக்த ஜனங்களும் லோக கல்யாணமாக பாவித்து பார்த்து மகிழும் ஸ்ரீசீதா ராம கல்யணம் கண்ணிற்கு விருந்தாக நடந்து முடிந்தது. ஜெய் ஸ்ரீராம்.

-ராஜி ரகுநாதன்

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...