மேற்கத்திய கொள்கை என்னவென்றால், “யாருக்கும் உதவி செய்யத் தேவையில்லை. உன் சுயநலமான வாழ்க்கைப் பயணத்தில் யாரேனும் நன்மை பெற்றால் பெறட்டும்” என்பது.
இத்தகைய சுயநலத்தோடு பிரிட்டிஷார் நமக்கு செய்ததாக கூறிக்கொள்ளும் ‘உபகாரம்’ பற்றி அறிந்து கொள்வோம்.
“Trains and Transportation is our contribution to India” என்பது அவர்களின் வம்புப் பிரச்சாரம்.
தொலைதூர இடங்களுக்குக் கூட நடந்து சென்றுகொண்டிருந்த இந்தியர்களுக்கு நன்மை செய்வதற்காக ரயில் சேவை ஏற்பாடு செய்தோம் என்பது அவர்களின் பிரச்சாரம்.
இது ஒரு பொய்ப் பிரச்சாரம்.
ஒரே கோர்ட், ஒரே இரயில்வே, ஒரே மொழி… உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்த எங்களை விரட்டுவீர்களா? என்று வாதிப்பதற்கு இந்த சேவைகள் பயன்பட்டன.
கோர்ட்டுகள் மூலம் தூக்கு தண்டனையை அமல்படுத்துவதற்கும் ரயில்கள் மூலம் நம் செல்வங்களை கொள்ளை அடிப்பதற்கும் ஆங்கிலத்தின் மூலம் நம்முடைய மொழிகளை அழிப்பதற்கும் கங்கணம் கட்டிக் கொண்டார்கள்.
1853 இல் கிறிஸ்தவ ஆட்சியாளர்கள் ரயில்வேயை தொடங்கினார்கள். அவை கூட சரக்கு போக்குவரத்துக்குப் பயன்படும் கூட்ஸ் ரயில்கள்.
1897 இல் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு அனுமதி கிடைத்தது.
அப்போதைய கவர்னர் ஜெனரல் லார்ட் ஹார்டிங் இவ்வாறு உரைத்தார்: “ரயில் மார்க்கம் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு பொருளாதார ரீதியாகவும் வியாபார ரீதியாகவும் பயன்படுத்தப்படும். இது பிரிட்டிஷாரின் ராணுவ தேவைகளைத் தீர்க்கும். இது இந்தியர்களின் பயன்பாட்டுக்காக அல்லவே அல்ல!”
பிரிட்டனில் இருந்து வரும் சரக்குகளை பாரத தேசத்தில் மார்க்கெட் செய்வதற்கும் அதேபோல் பாரதத்தில் விளைந்த உணவு வகைகளை இலண்டனுக்கு ஏற்றிச் செல்வதற்கு ரயில் மார்க்கம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்றார் டல்ஹௌசி. பிரிடிஷ் ஷேர் ஹோல்டர்கள் லாபம் பெறுவதற்கு ரயில் மார்க்கம் பயன்பட்டது என்றார் அவர்.
பாரத தேசத்தின் நான்கு புறங்களில் இருந்தும் வனச் செல்வம், வாசனை திரவியங்கள், தாதுகள் கனி வளங்கள், உணவுப் பொருட்கள்… கப்பல் மூலம் தம் நாட்டிற்கு எடுத்துச் செல்வதே முக்கிய நோக்கமாக வந்தேறிகள் ரயில்களை தொடங்கினார்கள்.
ரயில்கள் நமக்காகவா?
எந்த விதமான வசதிகளும் இல்லாத மர பெஞ்சுகள் கொண்ட மூன்றாம் வகுப்பு பெட்டிகள் நமக்காக. சரக்கு போக்குவரத்துக்கு அதிகளவு பெட்டிகள்.
பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு முதல் வகுப்பு பெட்டிகள்.
சரக்குகளின் போக்குவரத்துக்கு ஆகும் செலவை இந்திய பயணிகளிடமிருந்து வசூலிப்பது அவர்களின் சாமர்த்தியங்களில் ஒன்று.
சாலைகள், பேரேஜ்கள் போன்றவற்றுக்குத் தேவையான கருவிகள், மூலப்பொருட்கள் இவற்றினை எடுத்துச் செல்வதற்கு இந்த ரயில் மார்க்கம் பயன்பட்டது.
துறைமுகங்களுக்கே ரயில்பாதை போடப்பட்டதை கவனித்தால் இது புரியும் .
பந்தர், காகிநாடா, கல்கத்தா, பம்பாய், சென்னபட்டணம் முதலான கடற்கரைத் துறைகளிலிருந்து நம் செல்வங்கள் கொண்டு செல்லப்பட்டன.
ஈஸ்ட் இந்திய கம்பனி முதலில் ஏற்படுத்திய இந்த ரயில் மார்க்கத்தில் அவர்களுக்கு பயன்படும் இடங்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.
உதாரணமாக வாசனை திரவியங்களை கொண்டு செல்வதற்கு தமிழ்நாட்டின் போடி நாயக்கன் பாளையம் என்ற சிறிய ஊருக்கு ரயில் மார்க்கம் போட்டார்கள்.
இந்த ரயில் பிரச்சாரத்தால் இப்போதும்கூட அற்ப சந்தோஷிகளான நாம் பாட புத்தகங்கள் மூலம் பிரிட்டிஷார் செய்த சிறந்த உபகாரமாக இதனை பயின்று வருகிறோம்.
அவர்கள் செய்த அக்கிரமங்களையும் கொலைகளையும் பற்றி மறந்து போனோம்.
நம் பணியாளர்களின் விரலை வெட்டினாலும் கிராமிய பாரதத்தை ஏழ்மையில் மூழ்கடித்தாலும் போராட்டங்களை அடக்கும் முயற்சியில் ஆயிரக்கணக்கானோரைத் தூக்கிலிட்டாலும் செயற்கைப் பஞ்சம் ஏற்படுத்தி இலட்சக்கணக்கானோரைக் கொன்றாலும் பிரிட்டிஷாரை மன்னித்து விட்டோம்.
இன்றைக்கும் அவர்களுக்கு அடிமைகளாக வேலை செய்பவர்களுக்கு நம் நாட்டில் குறைச்சலில்லை.
1765 முதல் 1815 வரை ஒரு கோடியே 80 லட்சம் பவுண்டுகளுக்கு மேலாக மதிப்புள்ள செல்வங்களை நம் நாட்டிலிருந்து பிரிட்டிஷார் கொள்ளையடித்துள்ளனர்.
An era of darkness – The British empire in India என்ற பெயரில் திரு சசிதரூர் எழுதிய 325 பக்ங நூலில் இத்தகைய சோக கதைகள் பலவற்றை விவரித்துள்ளார். இந்நூலைப் படித்து கண்ணீர் விடாதவர்கள் யாரும் இருக்க முடியாது.
உலக யுத்தங்கள் கொண்டுவந்து அளித்த நோய்கள், பஞ்சங்கள், தோற்றுவித்த மதக்கலவரங்கள், ஜாலியன்வாலா பாக், தேடுதல் என்ற பெயரில் நடந்த தூக்கு தண்டனைகள்… சுமார் மூன்றரை கோடி இந்தியர்களை பலி வாங்கியது…. என்று வந்தேறிகளின் அரசாங்கம் செய்த அராஜகம் கொஞ்சநஞ்சமல்ல!
இவற்றை மறக்கடிக்கும் மார்க்கமே ரயில் மார்க்கம்.
இங்கிலாந்தில் உள்ள எஃகு தொழிற்சாலைக்கு இந்தியன் ரயில்வே உதவி செய்தது. ரயில்வேக்கு தேவையான சரக்கு அனைத்தும் இங்கிலாந்திலிருந்து வந்தன. தண்டவாளங்கள் போகிகள் , வேகன்கள்… எல்லாம் அங்கிருந்து வந்தவையே.
ஒருவிதத்தில் கூறவேண்டுமென்றால் இந்தியன் ரயில்வேயை வரி செலுத்தும் இந்தியர்களும் தொழிலாளர்களும் சேர்ந்து கட்டிக்கொண்டார்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இங்கிலாந்தை விட இருமடங்கு செலவில் இந்தியன் ரயில்வே என்ற பெயரில் பாரதியார்கள் விலைக்கு வாங்கினார்கள் என்ற உண்மையை தெளிவுபடுத்தியுள்ளார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
தேசிய தொழிலாளிகளை பலவிதங்களிலும் வேதனைக்கு உள்ளாக்கினார்கள். பாரதிய ஊழியர்களுக்கு விவேகம் இல்லை என்றும் அவர்களுக்கு ஒருமித்த புத்தி இல்லை என்றும் கூறி தாழ்ந்த உத்தியோகங்களும் குறைவான சம்பளமும் அளித்தார்கள். அவர்களிடம் அதிக வேலை வாங்கினார்கள். பதவி உயர்வுக்கு அருகதை இருந்த போதிலும் பாரதியர்கள் மேல் பாரபட்சம் காட் டி அவமதிப்பது தொடர்ந்து கொண்டே இருந்தது.
பிரிட்டிஷ் ஊழியர்களின் அலட்சிய போக்கால் நடந்த விபத்துகளுக்கு நம்மவர்களையே பொறுப்பாக்கி தண்டனைக்கு உள்ளாகிய சம்பவங்கள் பலப் பல.
பிரிட்டிஷாரின் மற்றுமொரு துரோகத்தைப் பற்றி கூட சசிதரூர் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
பெங்கால், ராஜபுதனத்தில் உள்ள ரயில்வே ஒர்க்ஷாப்கள் 1862 ல் தொடங்கப்பட்டன. இங்கு வேலை செய்யும் இந்திய இன்ஜினியர்கள் தம் திறமையை பயன்படுத்தி 1878ல் சொந்தமாக ரயில்வே பெட்டிகளை தயார் செய்ய தொடங்கினார்கள். அதைக் கண்டு பொறுக்க இயலாத ஆங்கிலேயர்கள் பார்லிமென்டில் சட்டமியற்றி ரயில்வே பெட்டிகள் தயாரிப்பை இந்தியர்கள் செய்யவிடாமல் தடுத்து நிறுத்தினார்கள். இந்தியர்களின் திறமைக்கு எடுத்துக்காட்டாக இந்த ரயில்கள் இருந்தன.
இந்த தடையின் காரணமாக 1854 முதல் 1947 வரை 14,400 போகிகளை இங்கிலாந்திலிருந்து வாங்க வேண்டி வந்தது.
சுதந்திரத்திற்குப் பின் கூட சுமார் 35 ஆண்டுகள் பிரிட்டிஷாரை சார்ந்திருக்கும்படியாயிற்று.
அவர்களின் தொழில் நுட்ப அறிவை கடன் வாங்கி நம் தொழிற்சாலைகளை நிர்மாணம் செய்வது அதனால் வந்த விளைவே!
இந்தியாவுக்கு இரும்புத் தண்டவாளம் என்பது இரும்பு விலங்கே!
இது 30-4-1884 அன்று வெளியான பெங்காலி பத்திரிக்கை ‘சமாச்சார்’ செய்தி: “வெளிநாட்டு பொருட்கள் வெள்ளமாக பெருக்கெடுக்கிறது.. தேசிய தொழில்களின் நாடி முறிந்து போகிறது. பாரததேசம் மேலும் மேலும் ஏழை நாடாக மாறுகிறது”. கோபால கிருஷ்ண கோகலே, ஜி எஸ் அய்யர்,ஜி வி ஜோஷி, தாதாபாய் நவ்ரோஜி போன்ற தேசியவாதிகளின் கூற்று இது.
நினைத்ததை விட அதிகமாகவே நடந்தது. இந்த ரயில்வே மூலம் அதிக லாபம் அடைந்தவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களும் அவர்களின் அதிகாரிகளுமே!
அவர்கள் செய்த அக்கிரமங்களை மறந்து பாரதிய மேதாவிகள் அவர்களுக்கு பஜனை பாடினார்கள்.
“பிரிடிஷார் அமைக்கும் ரயில் மார்க்கத்தின் பின்னால் ஒரு சதி திட்டம் மறைந்துள்ளது. இது இங்கிலாந்திலுள்ள வியாபாரிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் லாபம் அளிக்கக்கூடியது. இந்தியாவிலுள்ள இயற்கைச் செல்வங்களைக் கொண்டு செல்வதற்கான சதித்திட்டத்தின் ஒரு பாகமே இது!” என்று விபின் சந்திரபால் கூறினார்.
தெலுங்கில் – பி எஸ் சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்
(Source: ருஷிபீடம் ஆன்மீக மாத இதழ் டிசம்பர் 2019)