ராஜாவுக்குப் பிறந்த நாள்.
பிரஜைகள் நிறைய பேர் வந்தார்கள்
உங்களுக்காக நாங்கள் ஏதாவது செய்யணும் துரை
உங்கள் பிறந்த நாளுக்கு சிறப்பாக…
மந்திரிகள் எல்லோரும் சொன்னார்கள்
ஏதாவது ஒன்று செய்தே தீருவோம்
மிட்டாய் வழங்கலாமா?… ஐயையோ… போதாது…!
நோயாளிகளுக்குப் பழங்கள்?
கரோனா காலத்தில் மருத்துவமனைக்கா…?
ஊரில் எல்லோருக்கும் பட்டு வஸ்திரம் வாங்கி கொடுத்தால்…?
செலவு எந்த கஜானாவிலிருந்து?
இலவசமாக குடிநீர் வழங்கினால்….?
சும்மா இரு…
பானைக்கும் கண்ணை நனைப்பதற்குமே நீர் இல்லை
உனக்காக ரத்தம் கொடுப்போம் தொர…!
ஊரெல்லாம் ஏரி போல் பாய விடுவோம்
சரி சரி… சும்மா இரு…
பிரஜைகளைப் பார்
சிதறி ஓடி விட்டார்கள்
பின், என்ன செய்யலாம்…?
மரம் நடுவோம்! அதுதான் சரி!
அவற்றுக்கு வாயில்லை… நரம்பு இல்லை…
வலி தெரியாது… பணம் கேட்காது…
பின், வருவதோ வேனிற்காலம்…
அதனாலென்ன?
வயலெல்லாம் காயவில்லையா என்ன?
பின், நீர்த்துளி இன்றி அந்த உயிர்?
நமக்கு எதற்கு? நாம் நட்டு விட்டுப் போவோம்
அதுதான் சரி… செய்து விடுவோம்
பசுமை ராஜ்யம்! ஆரோக்கிய ராஜ்யம்!
துரை குடையின் கீழ் குளுமையான ராஜ்யம்!
இதுதான் முழக்கம்…!
மக்களிடம் கூறி விடு…
குழி தோண்டுவதற்கு ஆணை அளித்து விடு!
மந்திரியிடம் ஒரு வார்த்தை சொல்லிவிடு
செடி நடும் திட்டத்தை செவியில் போட்டுவிடு
இருங்கப்பா….! பிசியா இருக்காரு…
மாலை மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யுங்கள்…!
மேடைக்குத் தடையாய் இருக்குதாம்..
நூறு செடிகளை வீசி எறியுங்கள்…
ராஜா மகிழ்ச்சி… பிரஜைகளும் குஷி!
நித்யகல்யாணம்….! பச்சைத் தோரணம்….!
ஏனென்றால்…. செடிகளுக்கு நரம்பு கிடையாது….
வரங்கள் கேட்காது… அதுதான்…! அதுதான்…!
தெலுங்கில் – உஷா துரகா ரேவல்லி
தமிழில் – ராஜி ரகுநாதன்