வரதட்சணை கொடுமை காரணமாக இளம் பாடகி சுஷ்மிதா( 27), தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கன்னட திரைப்படத் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் சரத் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்ட பாடகி சுஷ்மிதாவின் வாழ்க்கை அதற்குள் முடிந்து விட்டதே என்று திரைப்படத் துறையினரும் தொலைக்காட்சித் துறையும் தீவிர மன வருத்தத்தில் ஆழ்ந்தனர்.
திங்களன்று பெங்களூருவில் நகரபாவி என்ற இடத்தில் தன் தாய் மீனாட்சியின் வீட்டில் சுஷ்மிதா மின்விசிறியில் தூக்கு போட்டுக் கொண்டு இறந்து போனார் .
திருமணமான நாளிலிருந்து மாமியார் வீட்டில் கொடுமையை அனுபவித்து வருவதாக தற்கொலைக்கு முன் எழுதி வைத்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மிகவும் மன வேதனைக்கு உள்ளான சுஷ்மிதா தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் தன் தாய்க்கும் சகோதரனுக்கும் வாட்ஸ்அப் மெசேஜ் கொடுத்து தன் மன வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.
தன் இறப்புக்கு காரணம் தன் கணவனும் மாமியாரும் நாத்தனாரும் என்று அவர்கள் பெயரை குறிப்பிட்டு உள்ளார். மாமியார் வீட்டில் இறப்பதற்கு விருப்பமில்லாமல் ஞாயிறு அன்று அம்மா வீட்டுக்கு வந்ததாக தெரிவித்துள்ளார். அவர் சகோதரன் இரவு ஒன்றரை மணிக்கு கொடுக்கப்பட்ட மெசேஜை காலை ஐந்தரை மணிக்குத் தான் பார்த்தார். பார்த்தவுடன் சுஷ்மிதாவின் அறைக்கு சென்று பார்த்தபோது அதற்குள்ளாகவே அவர் தூக்கில் தொங்கி மரணித்திருந்தார்.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் சுஷ்மிதாவுக்கும் சரத்குமார் என்னும் தனியார் கம்பெனியில் வேலை செய்பவருக்கும் திருமணமாகியது. அவர் ஒரு கார் ஷோரூமில் மேனேஜராக பணிபுரிகிறார். திருமணம் ஆன நாள் முதலே அதிக வரதட்சணை கேட்டு கணவரும் அவருடைய சகோதரியும் மாமியாரும் கொடுமை செய்து வருவதாகவும் தன் மரணத்திற்கு தன் கணவரும் மாமியாரும் நாத்தனாரும் காரணம் என்றும் கடிதம் எழுதியுள்ளார்.
மாமியார் வைதேஹி யும் நாத்தனார் கீதாவும் காரணமின்றி தன்னை அடிப்பதாகவும் பலர் முன்னால் அவமானப்படுத்துவதாகும் அதைத் தன் கணவருக்கு எத்தனை முறை எடுத்துச் சொன்னாலும் அவர் கேட்காமல் தன் மனிதர்களையே சப்போர்ட் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
தன் இறப்புக்கு காரணமானவர்களை சும்மா விடக்கூடாது என்று தன் தாயிடம் குறிப்பிட்டுள்ளார். இவருடைய தற்கொலையை அறிந்த கணவன் வீட்டார் ஓடிப் போனார்கள். போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள்.