கொரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முன்னணிப் பணியாளர்களான மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்கள், உள்ளாட்சித்துறை ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் மாத்திரைகள் நாளை முதல் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
கொரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முன்னணிப் பணியாளர்கள் நலனுக்காகவும், பொதுமக்கள் நலனுக்காகவும் ஆரோக்கியம் எனும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கபசுரக் குடிநீர், நிலவேம்பு உள்ளிட்டவற்றை பொதுமக்கள் அருந்தலாம் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா முன்னணிப் பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் மாத்திரைகளை நாளை முதல் அளிக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்ட அறிவிப்பு:
‘கொரோனா நோய்த் தடுப்புப் பணியில் தன்னலம் கருதாது களப் பணியாற்றுகின்ற, பொது சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை, காவல்துறை மற்றும் அனைத்துத் துறைப் பணியாளர்களுக்கும், நோய்த் தொற்றில் இருந்து பாதுகாக்கத் தேவையான முகக் கவசங்களும், உரிய பாதுகாப்பு உடைகளும் அரசால் வழங்கப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வரும் மேற்கண்ட அனைத்துத் துறை களப் பணியாளர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் நோக்கத்தோடு, ஜிங்க் மாத்திரைகளும் (Zinc Tablets), மல்டி வைட்டமின் மாத்திரைகளும் ((Multi Vitamin Tablets) நாளை முதல் 10 நாட்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும்’. இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.