
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி மதுரை – தூத்துக்குடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகளால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பகுதிகளில் சுமார் 40-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் தற்போது வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
கடந்த ஏழு ஆண்டுகளாக காரியாபட்டி தாசில்தார் மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம்
தமிழ்நாடு அரசின் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு தொடர்ந்து மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் சக மனிதர்களைப் போல் வாழ்வதற்கும், வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளவும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி இன்று 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் காரியாபட்டி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு தாசில்தார் சுப்பிரமணியத்திடம் மனு கொடுத்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட தாசில்தார் புறம்போக்கு இடத்தை தேர்வு செய்து இடம் வழங்கப்படும் என உறுதி அளித்தார்.
ஏழு வருடமாக இதைதான் சொல்கிறீர்கள் என ஆத்திரமடைந்த திருநங்கைகள் தாலுகா அலுவலகம் முன்பு மதுரை- தூத்துக்குடி நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கு விரைந்து வந்த காரியாபட்டி காவல்துறையினர் திருநங்கைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பின்னர் காரியாபட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், தாசில்தார் சுப்பிரமணியம் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இன்னும் ஒரு வார காலத்தில் புறம் போக்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு இடம் வழங்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.