
ராஜபாளையம் அருகே உடல் உறுப்பு தானம் செய்த தூய்மை காவலரின் உடலுக்கு அரசு சார்பில், ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் டிஎஸ்பி இறுதி மரியாதை செலுத்தினர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முகவூரை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் முத்துசாமிபுரம் ஊராட்சியில் தூய்மை காவலராக பணியாற்றி வந்தார். கடந்த 7ம் தேதி சாலை விபத்தில் சிக்கிய இவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 2 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இவர் மூளை சாவு அடைந்து நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது உறவினர்கள் சம்மதத்துடன் இவரது உடலில் இருந்து கல்லீரல், சிறுநீரகம் மற்றும் கண்கள் ஆகிய உறுப்புகள் மதுரை மற்றும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழக அரசின் அறிவிப்பு படி இவரது உடலுக்கு இன்று அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
உயிரிழந்த மாரியப்பனின் உடல் இன்று பிற்பகல் 3 மணி அளவில் அவரது சொந்த ஊரான முகவூருக்கு கொண்டு வரப்பட்டது. அவரது வீட்டின் முன்புறம் அவசர ஊர்தியில் வைக்கப்பட்டபடி மாரியப்பன் உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டது.
பின்னர் அவரது உடல் தகனத்திற்காக மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், வட்டாட்சியர் ராமச்சந்திரன், டிஎஸ்பி ப்ரீத்தி, சேத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் ஜெயலட்சுமி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்தும், மலர் மாலை வைத்தும் அரசு மரியாதை செலுத்தினர்.
இறந்த மாரியப்பனின் முதல் மனைவி இறந்து விட்டதால் அவர் 2 வதாக திருமணம் செய்துள்ளார். முதல் மனைவியின் 3 குழந்தைகளும் வாலிப வயதில் இருக்கும் நிலையில், இரண்டாவது மனைவியின் 3 குழந்தைகளும் 5 வயதுக்கு உட்டபட்ட சிறுவர்களாக உள்ளனர்.
எனவே குழந்தைகளின் படிப்புக்கும், மனைவியின் வாழ்வாதாரத்திற்கும் அரசு சார்பில் உதவி செய்ய வேண்டும் என மாரியப்பனின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





