விபத்தில் சிக்கியவரை மீட்டு தனது காரிலேயே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த ஆட்சியர்!

விபத்தில் சிக்கியவரின் ரத்த இழப்பைத் தடுக்கும் வகையில் காயமடைந்த இடங்களில் அரசுப் பணியாளர்கள் மூலம் கட்டுப்போடச் செய்தார்.

darmapuri collector

தருமபுரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேரிட்ட சாலைவிபத்தில் படுகாயம் அடைந்தவரை அவ்வழியே சென்ற மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தமது அலுவலக பிஆர்ஓ காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் நடைபெற்று வரும் அரசு திட்டப் பணிகளை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் மலர்விழி வந்தார். ஆய்வுகளை முடித்த பின்னர், தருமபுரிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது காரிமங்கலம் அடுத்த மாரவாடி கூட்டு ரோடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதி சாலை விபத்து ஏற்பட்டு அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் பயணித்தவர் பலத்த காயமடைந்து சாலையில் விழுந்து கிடந்தார்.

darmapuri collector1விபத்து குறித்து அறிந்த ஆட்சியர் மலர்விழி, விபத்தில் சிக்கியவரை மீட்டு முதலுதவிக்கு ஏற்பாடு செய்ததுடன் அவரை சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்தார். ஆனால் ஆம்புலன்ஸ் வர தாமதமாகலாம் என்ற நிலையில், விபத்தில் சிக்கியவரின் ரத்த இழப்பைத் தடுக்கும் வகையில் காயமடைந்த இடங்களில் அரசுப் பணியாளர்கள் மூலம் கட்டுப்போடச் செய்தார். பின்னர் உடன் வந்திருந்த மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலரின் வாகனத்தில் அவரை ஏற்றி தருமபுரி அரசு மருத்துவமனைக்கு விரைவாக அனுப்பி வைத்தார்.

விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், விபத்தில் உயிரிழந்தவர் மாட்லாம்பட்டி அடுத்த கெங்குசெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காசி(50) எனவும், பலத்த காயமடைந்து சிகிச்சைக்கு அனுப்பப்பட்டவர் காரிமங்கலம் அடுத்த பள்ளத்துகொல்லை கிராமத்தைச் சேர்ந்த மாது(55) என்பதும் தெரிய வந்தது.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.