நடிகர் சங்கம் மீது அவதூறு: 27ம் தேதி நடிகர் வடிவேலு ஆஜராக உத்தரவு

நாமக்கல்:

நடிகர் சங்கத்தை அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், நடிகர் வடிவேலு, வரும், வரும் 27ஆம் தேதி நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு, கடந்த, அக்டோபர், 18ஆம் தேதி தேர்தல் நடந்தது. தேர்தலுக்கு முன், சரத்குமார் அணியும், விஷால் அணியும் ஒருவர் மீது ஒருவர் காரசாரமாகக் குற்றம் சாட்டினர். விஷால் அணிக்கு ஆதரவாகக் களம் இறங்கிய நடிகர் வடிவேலு, தேர்தலுக்கு முன், கடந்த, அக்டோபர், 12ம் தேதி மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, ‘தென்னிந்திய நடிகர் சங்கத்தை காணவில்லை’ என, தெரிவித்த்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைக் கண்டித்து, அக்டோபர், 15ம் தேதி, நாமக்கல் மாவட்ட நாடக நடிகர் சங்கத் தலைவர் ராஜா, நாமக்கல் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், நடிகர் வடிவேலு மீது, சங்கத்தைக் குறித்து அவதூறாகப் பேசியதாக வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மோகனம்பாள், நடிகர் வடிவேலு, ‘நவ., 20ம் தேதி ஆஜராக வேண்டும்’ என, உத்தரவிட்டார். அதன்படி, நேற்று நடிகர் வடிவேலு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் ஆஜராகவில்லை.

அவரது வக்கீல் ராமசாமி, ‘சென்னையில் தொடர்மழை பெய்து வருவதால், நடிகர் வடிவேலு நேரில் ஆஜராகவில்லை’ என, வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மோகனம்பாள், ‘வரும், 27ம் தேதி, நடிகர் வடிவேல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்’ என, உத்தரவிட்டார்.