மதுரை:
மதுரை வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக, மதுரை ரயில்வே இருப்புப்பாதை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதன் அடிப்படையில், போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த நிலையில், மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கு ஒரு எக்ஸ்பிரஸ் ரயில், இன்று காலை 2-வது பிளாட்பாரத்துக்கு புறப்பட்டு வந்தது. அப்போது ,அங்கு 2 பேர் 7 சாக்குகளுடன் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டு இருந்தனர்.
எனவே, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, ரயில்வே போலீசார், அன்னாரின் உடமைகளை சோதனை செய்து பார்த்தனர். இதில், தடை செய்யப்பட்ட 248 புகையிலை பாக்கெட்டுகள் இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து , மேற்கண்ட 2 பேரையும் போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
இதில் அவர்கள், தென்காசி, பொய்கைமேடு, தெற்கு தெருவை சேர்ந்த கருப்பசாமி (வயது 33), வடக்கு தெரு பாண்டி மகன் பசும்பொன் (வயது 33) என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மைசூர்- தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயிலில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்ததாக, மேற்கண்ட 2 பேரையும் மதுரை ரயில்வே போலீசார் கைது செய்து, அவர்களிடம் இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.