தாங்கள் கேட்டுக் கொண்ட படி, தேவேந்திர குல வேளாளர்களை பட்டியல் பிரிவில் இருந்து நீக்கவில்லை என்றால், தனித்துப் போட்டியிடுவோம் என்றும், அல்லது தங்கள் கோரிக்கையை உறுதி செய்யும் வகையில் நம்பிக்கையளிக்கும் கூட்டணியில் இடம்பெறுவோம் என்றும் புதிய தமிழகம் கட்சியின் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக, திங்கள் நேற்று கூடிய கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதனை தனது டிவிட்டர் பதிவில் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகன் ஷ்யாம் தெரிவித்துள்ளார். அதில்…

தேர்தல் தொடர்பாக பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
16-வது நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் மற்றும் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சம்பந்தமாக பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

25-02-2019 (திங்கள்கிழமை) அன்று சென்னையில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் – தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி, MD,Ex.MLA அவர்கள் தலைமையில்

தேவேந்திர குல வேளாளர் அரசாணை மற்றும் பட்டியல் பிரிவிலிருந்து வெளியேறுவது ஒன்றே இந்த சமூகத்தின் வளர்ச்சிக்கான முதல்படி என, இலட்சோப இலட்சம் தேவேந்திரகுல மக்கள் எண்ணுகிறார்கள். அவர்கள் கடந்த 3 ஆண்டுகாலமாக, பட்டியல் வெளியேற்றத்தின் மூலம் தங்களது அடையாளத்தை மீட்டெடுக்க, புதிய தமிழகத்தின் பின்னால் அணிதிரண்டு, மாநாடு, பேரணி, உண்ணாவிரதம் என பலமுனைப் போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள்.

*அண்மையில், மதுரை வந்த பாரதப் பிரதமர் மோடி அவர்களின் அறிவிப்பு ஓரளவிற்கு நம்பிக்கை அளிப்பதாக இருந்தது. ஆனால், மத்திய அரசும் அதற்கு செயல் வடிவம் கொடுக்க தொடர் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை; எடப்பாடி தலைமையிலான மாநில அரசும் காலம் தாழ்த்துவது, தேவேந்திரகுல வேளாளர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதங்கத்தையும், கொதிப்பையும் உண்டாக்கியிருக்கிறது. *

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு இன்னும் ஒருசில தினங்களே இருக்கும் இந்த வேளையில், தமிழ்நாடு அரசின் இந்த மெளனம் மிகப்பெரிய அளவிற்கு சந்தேகத்தை எழுப்புகிறது.

எனவே தேர்தல் அறிவிப்பதற்கு இருக்கக்கூடிய ஒருவார காலத்திற்கு முன்பாக, பட்டியல் வெளியேற்றக் கோரிக்கைக்கு மத்திய, மாநில அரசுகள் செயல் வடிவம் கொடுக்க முன் வந்தால் அதற்குத் தகுந்தாற்போல் கூட்டணி அமைக்கவும், அல்லது அது நடைபெறாத பட்சத்தில், அதை அமலாக்குவதற்குண்டான தகுதி படைத்த பிற அரசியல் கட்சிகள், தங்களது தேர்தல் அறிக்கையில் நமது கோரிக்கைக்கு உத்திரவாதம் அளிக்கவும், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் கெளரவமான இடங்களை ஒதுக்கவும் முன்வரும் பட்சத்தில் அதைப் பரிசீலிக்கவும், அல்லது தேவேந்திரகுல மக்கள் அடர்த்தியாக வாழும் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம், தேனி, நாகப்பட்டினம், பெரம்பலூர் உள்ளிட்ட 20 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், இடைத்தேர்தல் நடைபெறும் ஓட்டப்பிடாரம், விளாத்திக்குளம், சாத்தூர், பரமக்குடி, திருவாரூர், மானாமதுரை உள்ளிட்ட 12 சட்டமன்றத் தொகுதிகளிலும் புதிய தமிழகம் தலைமையில் அரசியல் இயக்கங்களை ஒருங்கிணைத்து தேர்தல் களமாட உரிய வியூகங்களை வகுக்க புதிய தமிழகம் நிறுவனர் தலைவர் டாக்டர் அய்யா அவர்களுக்கு இப்பொதுக்குழு முழு அதிகாரம் அளிக்கிறது… என்று தெரிவித்துள்ளார்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...