பத்திரிகைத் துறைக்கு வந்த புதிதில் செய்தியாளர் சந்திப்புக்கு சென்றிருக்கிறேன். பின்னர் பணி முழுதும் டெஸ்கிலேயே அமைந்துவிட்டதால்… கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக… செய்தியாளர் சந்திப்புக்கு எட்டிப் பார்க்கும் பழக்கமும் வாய்ப்பும் எனக்கு இல்லாமல்போய்விட்டது…
20 வருட சென்னை வாசத்துக்குப் பின்னர் கடந்த வருடம் இங்கே செங்கோட்டைக்கு வந்த நேரம்… அண்ணே நாஞ்சில் சம்பத் குற்றாலம் வாறாரு… நாங்க போறோம்.. வாறீகளா? இசக்கி சுப்பையா அண்ணன் காட்டேஜ்லதான்.. இடம் ரொம்ப நல்லா இருக்கும். வாங்க பாத்துட்டு வருவோம் என்றார்கள் சக பத்திரிகைத் தோழர்கள்.
வைகோ.,வுக்குப் பிறகு… சிறு வயதில் அதிகம் நமக்குள் பாதிப்பை ஏற்படுத்திய குரலுக்கு சொந்தக்காரர் நாஞ்சிலார் என்பதால்… சரி வருகிறேன் என்றேன்…
குற்றாலம் – ஐந்தருவி சாலையில் உள்ள இசக்கி சுப்பையாவின் ரிசார்ட்ஸை அப்போதுதான் உள்ளே சென்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.அருமையாக இருந்தது. நல்ல வசதிகளுடன்!
நாஞ்சில் சம்பத்திடம் வழக்கமான கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள் தோழர்கள். நிறைவுறும் நேரத்தில் நான் சில கேள்விகளை எழுப்பினேன். என் முகம் அவருக்கு பழக்கமில்லாதது என்பதாலும், தோற்றம் அவருக்கு ஏதோ செய்ததாலும் முகத்தில் சற்று கடுப்புடனே என் கேள்விகளுக்கு பதில் சொன்னார்.
நான் கேட்டதில் முக்கியமான கேள்வி… – இரட்டை இலைதான் நோக்கு என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது, ஏன் தனிக் கட்சி பேச்சு, ஏன் தனி சின்னம்..? இது நோக்கத்தை திசை மாற்றிவிடாதா?!
இன்னும் சில கேள்விகள். அதற்கு நாஞ்சில் சம்பத் சொன்ன பதில்கள்.. இந்த வீடியோவில் உள்ளது. அதன் சுருக்கத் தொகுப்பு இந்த வீடியோ பதிவு.
அதன் பின்னர் இன்ஃபார்மலாக, என்னைப் பற்றிய அறிமுகத்தை தோழர்கள் நாஞ்சிலிடம் செய்து வைத்தார்கள். அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது நான் சிலவற்றைக் கூறினேன். இந்த நடவடிக்கைகள் சரியாக அமையாது என்று கூறி அதற்கான காரணத்தையும் சொன்னேன்…
அதன்படி…
நாஞ்சில் சம்பத்கூட அமமுக தொடக்கவிழாவில் இல்லாமல் போனார். பின்னும் சிலர் கடந்து போனார்கள்…
குறிப்பாக …. எந்த பத்திரிகையாளர் சந்திப்பை ஆர்வத்துடன் நடத்தி முழு நேரமும் தினகரன் ஜபம் செய்தாரோ… அந்த இசக்கி சுப்பையா இப்போது 6ஆம் தேதி அவருடைய இடத்திலேயே அதிமுக., இணைப்பு விழாவுக்கு பிரமாண்ட ஏற்பாட்டை செய்து வருகிறார்.