பிரான்ஸில் இருந்து, ஐந்து ரபேல் போர் விமானங்கள் இந்திய வான் எல்லைக்குள் வந்தன. அந்த விமானத்தை சுகோய் போர் விமானங்கள் உடன் அழைத்து வந்தன.
ஐரோப்பிய நாடான பிரான்சில் இருந்து ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பில் 36 அதி நவீன ரபேல் போர் விமானங்களை வாங்க நான்கு ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இவற்றில் முதல்கட்டமாக ஐந்து ரபேல் விமானங்கள் பிரான்சில் இருந்து ஜூலை 27 அன்று புறப்பட்டு, 7,000 கி.மீ., பயணித்து, ஹரியானாவில் உள்ள அம்பாலா விமானப்படை தளத்துக்கு வந்தடைந்தன.
இந்திய வான் பரப்புக்குள் இந்த விமானங்கள் புகுந்ததும், அரபிக்கடலில் பாதுகாப்புப் பணியில் இருந்த ஐஎன்எஸ் கோல்கட்டா டெல்டா 63, ஐஎன்எஸ் டெல்டா போர்க் கப்பல்களை தொடர்பு கொண்டன. இதை அடுத்து ஐந்து ரபேல் போர் விமானங்களுக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டு, தொடர்ந்து இந்திய வான் பரப்புக்குள் அழைத்துவரப்பட்டன.
இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சுகோய் சூ 30 எம்கேஐ விமானங்கள் அந்த ரபேல் விமானங்களை அழைத்து வந்தன. அம்பாலாவில், நடக்கும் நிகழ்ச்சியில், இந்திய விமானப்படை தளபதி கலந்து கொண்டு விமானங்களை விமானப்படையில் சேர்க்கிறார்.
இதை முன்னிட்டு அம்பாலாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுற்று வட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் ஆளில்லா குட்டி விமானங்களான ட்ரோன்களை இயக்குவதும், புகைப்படம், வீடியோக்கள் எடுப்பதும் தடை செய்யப் பட்டிருக்கிறது.