ஸ்வீடனைச் சேர்ந்த DSruptive Subdermals என்ற ஒரு நிறுவனம் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை ஒரு மைக்ரோ சிப்பில் பதிந்து நம் உடலிலேயே அந்த மைக்ரோசிப்பை வைத்துக் கொள்ளும் வசதியை உருவாக்கி உள்ளது.
உலகம் முழுவதுமே தற்போது மால், தியேட்டர், ஹோட்டல் போன்ற பல இடங்களில் நுழைவதற்கு கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் கேட்கப்படுகிறது.
இப்படி மைக்ரோ சிப்பில் அந்த சான்றிதழைப் பதிந்து வைத்துக்கொண்டால் தேவைப்படும் நேரத்தில் அந்த சிப்பை சப்போர்ட் செய்யும் எந்த டிவைஸ் மூலம் ஸ்கேன் செய்தாலும் சான்றிதழைக் காட்டிவிடுமாம். இந்த புதிய முறையைச் சிலர் வரவேற்றிருக்கிறார்கள். ஆனால் சிலர் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
இந்த முறையில் ஆவணங்களை ஒரு மைக்ரோசிப்பில் வைத்து அதனை நம்முடைய உடலில் செலுத்திக் கொள்ளும் முறையை கோவிட் சான்றிதழுக்காக இந்த நிறுவனம் உருவாக்கவில்லை.
இதனைக் கடந்த சில ஆண்டுகளாகவே ஸ்வீடன் மக்களில் சிலர் தாங்களாகவே முன்வந்து பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். ஆவணங்களைச் சேமிக்க உடம்பில் மைக்ரோசிப்பை செலுத்திக் கொண்டவர்கள் ஸ்வீடன் நாட்டில் பல்லாயிரக்கணக்கில் உள்ளனர்.
நம்முடைய அலுவலக ஐடி, பயண அட்டைகள், மெம்பர்ஷிப் கார்டுகள், டிஜிட்டல் பூட்டைத் திறப்பதற்கான அனுமதிச் சீட்டுகள் என எல்லா விதமான ஆவணங்களையும் இந்த மைக்ரோசிப்பில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
ஆவணங்கள் நமக்குத் தேவைப்படும் நேரத்தில் நம்முடைய மொபைல் மூலம் சிப்பை ஸ்கேன் செய்தால் சிப்பில் நாம் பதிந்து வைத்துள்ள ஆவணத்தை மொபைலில் பார்க்க முடியுமாம்.
இந்த சிப்பை உருவாக்கிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஹான்ஸ் ஜாப்லெட்(Hannes sjoblad) இந்த சிப் குறித்துக் கூறும்போது, “நான் கூட என்னுடைய கையில் ஒரு மைக்ரோசிப்பை செலுத்தியிருக்கிறேன்.
நான் என்னுடைய தடுப்பூசிச் சான்றிதழை இதில் வைத்திருப்பதால், தேவையான போது என்னுடைய மொபைலில் ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ள முடிகிறது. என்னுடைய தேவைக்கு என்று மட்டுமில்லாமல் மால், ஹோட்டல் போன்ற பொது இடங்களுக்கு நான் செல்லும் போது என் கையை நீட்டினால் போதும் என் சிப்பை ஸ்கேன் செய்து தடுப்பூசி சான்றிதழைச் சரிபார்த்துக் கொள்வார்கள்.
இப்படி சிப் பொருத்திக் கொள்வதற்கு 100 யூரோக்கள் செலவாகும். இது நீங்கள் சாதாரணமாகக் கையில் அணிந்திருக்கும் உடல் குறித்த விவரங்களைக் கண்காணிக்கும் ஹெல்த்பேன்டு போன்றவற்றை விட இரண்டு மடங்கு விலை அதிகம் தான். ஆனால் நீங்கள் ஒரு தடவை மைக்ரோ சிப் வைத்துக் கொண்டால் 30 முதல் 40 ஆண்டுகள் பயன்படுத்தலாம்.
ஹெல்த் பேண்ட் மூன்று அல்லது நான்கு வருடம் பயன்படுத்த முடிவதே அதிகம். இப்போது இந்த சிப்பில் கோவிட் தடுப்பூசி சான்றிதழை இணைத்தது தற்போதைய பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் இருக்கிறது, அவ்வளவுதான். இது தவிரப் பல விஷயங்களையும் இந்த சிப் செய்யும்.” என்கிறார்.
இந்த சிப்பை உடம்பில் பொருத்துவது மிக எளிதுதானாம். அரிசி அளவே இருக்கும் மைக்ரோசிப்பை ஒரு ஊசி மூலம் தோலுக்கு அடியில் செலுத்திவிடுவார்கள். ஒரு முறை உடலில் செலுத்திவிட்டால் இதில் ஆவணங்களைப் பதிவு செய்ய அல்லது அப்டேட் செய்ய, ஒரு மொபைல் செயலியைப் உபயோகித்து சிப்பில் தேவையான ஆவணங்களைப் பதிந்து கொள்ளலாம் என்று கூறுகிறார்கள்.
இந்த மைக்ரோ சிப் நம்முடைய தனிப்பட்ட தகவல்களான நம் இருப்பிடம் போன்றவற்றைக் கண்காணிக்க வாய்ப்பாக அமையும் எனவும் சிலர் கருதுகின்றனர். இது அவர்களின் தனியுரிமையைக் கெடுத்துவிடும் என அச்சப்படுகிறார்கள்.
இதுகுறித்து ஜோப்லெட் கூறுகையில், “நீங்கள் இந்த சிப் செயல்படும் முறையைப் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு பேட்டரி என்ற ஒன்று கிடையாது. அது உங்கள் தோலுக்கு அடியில் செயல்பாடு எதுவுமின்றி அமைதியாகவே இருக்கும். நீங்கள் உங்கள் மொபைலை வைத்து ஸ்கேன் செய்யும் போது மட்டுமே பயன்பாட்டில் இருக்கும்.
இதன் மூலம் உங்களின் இருப்பிடத்தைத் தெரிந்து கொள்ள வாய்ப்பே கிடையாது. அதுமட்டுமில்லாமல் இந்த சிப் முற்றிலும் சுய விருப்பத்தோடு தான் பொருத்தப்படுகிறது.
வற்புறுத்தலின் பேரில் யாரும் இந்த சிப்பை செலுத்திக் கொள்ள நாங்கள் நிர்ப்பந்திக்கவில்லை. இந்தச் சிப்பைப் பொருத்திக் கொள்ளும் முடிவு அவரவரின் தனிப்பட்ட விருப்பமே” என்கிறார்.
இந்த மைக்ரோ சிப்பைப் பொருத்திக் கொண்ட ஸ்வீடனைச் சேர்ந்த அமெண்டா பேக் (Amanda back) என்பவர் இந்தச் சிப்பைப் பற்றிக் கூறும்போது, “இப்படி மைக்ரோ சிப் பொருத்திக் கொண்டு என்னுடைய தனிப்பட்ட விவரங்களை நான் சேமித்து வைத்துக்கொள்வது முற்றிலும் என் விருப்பத்தில் நான் செய்தது. அது சரியென்று தான் நினைக்கிறேன். இந்த சிப்பில் என்னுடைய ஆவணங்களைச் சேமித்து என்னுடைய உடலுக்குள் செலுத்திக் கொண்ட பிறகு, என்னுடைய தகவல்கள் எல்லாம் என்னுடைய கட்டுப்பாட்டில் இருப்பது போல் எனக்குத் தோன்றுகிறது” என்றார்.
சிப்பில் ஆவணங்களைப் பதிவது முற்றிலும் நம் கட்டுப்பாட்டில் தான் இருக்குமாம். அதில் என்னென்ன ஆவணங்களைப் பதிகிறோம் என்பது நமக்கு மட்டுமே தெரியும். இதற்கும் சிப் நிறுவனத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றே கூறப்படுகிறது.