மலையாள திரையுலகின் பிரபல இசையமைப்பாளரான கைத்தபுரம் விஸ்வநாதன் நம்பூதிரி காலமானார். அவருக்கு வயது 58. புற்று நோயால் பாதிக்கப்பட்டு கோழிக்கோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கைத்தபுரம் விஸ்வநாதன் நம்பூதிரி, சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அவருக்கு கௌரி என்ற மனைவியும், அதிதி, நர்மதா என்ற மகள்களும், கேசவன் என்ற மகனும் உள்ளனர்.
கைத்தபுரம் விஸ்வநாதன் நம்பூதிரி, மலையாள திரையுலகின் பிரபல முன்னணி பாடலாசிரியரும், இசையமைப்பாளருமான கைத்தபுரம் தாமோதரன் நம்பூதிரியின் இளைய சகோதரர் ஆவார்.
மலையாளத்தில், 1997ல் ஜெயராஜ் இயக்கிய தேசிய விருது பெற்ற ‘களியாட்டம்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்த கைத்தபுரம் விஸ்வநாதன் நம்பூதிரி, ‘கண்ணகி’, ‘திலகம்’, ‘ஒர்ம மாத்திரம்’ என கிட்டத்தட்ட 23 படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
கைத்தபுரம் விஸ்வநாதன் நம்பூதிரி மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.