திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு தினந்தோறும் பெரும்பாலான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.
இந்த கோவிலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) நிர்வகித்து வருகிறது. இதனிடையில் கோவில் பராமரிப்பு, பக்தர்களுக்கான வசதிகள் மட்டுமின்றி பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துதல், இந்து சனாதன தர்மத்தை பரப்பும் நடவடிக்கைகளில் தேவஸ்தானம் ஈடுபட்டு வருகின்றது.
மேலும் ஆந்திரா, தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் தேவஸ்தானத்தின் கீழ் பெரும்பாலான கோவில்கள் இருக்கின்றன. தற்போது கொரோனா ஒமிக்ரான் பரவல் அச்சம் காரணமாக பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் வரும் ஜனவரி 13-ஆம் தேதியன்று திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி தரிசனம் நடைபெறவுள்ளது. ஆகவே 13 முதல் 22ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.
இதில் 13-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 2 மணி வரை திருப்பாவை பாமாலை, அர்ச்சனை, நெய்வேத்தியம் சமர்பித்து பூஜைகள் நடைபெறும். 2 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டு முக்கியமான பிரமுகர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.
இதனையடுத்து காலை 9 மணி முதல் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட், இலவச தரிசன, கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரமோற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை டிக்கெட் ஆன்லைனில் பெற்றவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.
இதனையொட்டி சிறப்பு கட்டண தரிசன டிக்கெட்களானது விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது.
இதேபோன்று தேவஸ்தானத்திற்கு உட்பட்ட நாராயணவனம், நாகலாபுரம், கார்வேட்டி நகரம், நகரி உள்ளிட்ட கோயில்களிலும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைகுண்ட வாயில் திறக்கப்பட இருக்கிறது. இதை பார்க்க பெரும்பாலான பக்தர்கள் வருகை புரிவர்.
தற்போது ஒமிக்ரான் வைரஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது. ஆகவே திருப்பதி தேவஸ்தான கோவில்களில் வைரஸ் பரவலுக்கு எதிராக முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதாவது பக்தர்கள் கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் அல்லது கோவிட் பரிசோதனை மேற்கொண்டதற்கான நெகடிவ் சான்றிதழை தங்களுடன் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்று கோவில் நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.
இதற்காக அனைத்து கோவில்களிலும் பாதுகாப்பு அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். அவர்கள் பக்தர்களிடம் தடுப்பூசி சான்றிதழை சரிபார்த்த பிறகே, கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆகவே தடுப்பூசி செலுத்தாத பக்தர்கள் உடனடியாக அதற்கான நடவடிக்கையில் இறங்க வேண்டியது அவசியமாகிறது.