மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் வாழ்க்கை வரலாற்றை, 4 அல்லது 5ம் வகுப்பு பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து, அரசிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்,” என கர்நாடக தொடக்க கல்வி துறை அமைச்சர் நாகேஷ் தெரிவித்தார்.
கன்னட திரைப்பட நடிகர் புனித் ராஜ்குமார், கடந்தாண்டு மாரடைப்பால் மரணமடைந்தார். இவர், சிறு வயது முதலே பல திரைப்படங்களில் நடித்து தேசிய விருது பெற்றுள்ளார்.
திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி, 26 ஆதரவற்ற இல்லங்கள், 19 கோ சாலைகள், 16 முதியோர் இல்லம், 4,800 குழந்தைகளின் படிப்பிற்கான செலவையும் ஏற்றுள்ளார்.
இந்நிலையில், புனித் வாழ்க்கை பற்றிய ஒரு அத்தியாயத்தை 4 அல்லது 5 ம் வகுப்பு மாணவர்களின் பாடப்புத்தகத்தில் சேர்க்குமாறு அரசை வலியுறுத்தி, பல தொண்டு நிறுவனங்களும், மக்களும் பெங்களூரு மாநகராட்சியின் கல்வி துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இது தொடர்பாக, தொடக்க கல்வி துறை அமைச்சர் நாகேஷ் கூறுகையில், ”பள்ளி பாடப்புத்தகத்தில் புனித் வாழ்க்கை வரலாறு சேர்ப்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் எனது கவனத்துக்கு கொண்ட வந்துள்ளனர். இது குறித்து, அரசிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்,” என்றார்