spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்ருஷி வாக்கியம் (89) - பேராசை பெருநஷ்டம்!

ருஷி வாக்கியம் (89) – பேராசை பெருநஷ்டம்!

rv1 13

நம்முடைய பழமொழிகள், சொலவடைகள் போன்றவற்றில் கூட ருஷி வாக்கியங்களே ஒலிப்பதைக் காண்கிறோம். உதாரணத்திற்கு பேராசை பெரு நஷ்டம் என்ற பழமொழி. துராசை என்னும் பேராசை அனைத்து பாவங்களுக்கும் காரணமாகிறது. எதன் மேலும் ஆசைப்படக் கூடாது என்று கூறவில்லை. ஆசை இருக்கலாம். பேராசை கூடாது.

ஆசையில் இரண்டு விதங்கள். துராசை. சதாசை. தீய விருப்பம், நல்ல விருப்பம். பேராசை என்றால் கூடாத ஆசை என்ற பொருள். ஆனால் எந்த ஆசை நல்லது? எது கெட்டது? யார் முடிவெடுப்பது? “எனக்கு ஒரு ஆசை எழுந்துள்ளது! என்னிஷ்டம்!” என்று யாராவது கூறினால் அதில் விவாதிப்பதற்கு ஒன்றுமில்லை.

ஆனால் மனதில் எழும் ஆசைகள் எல்லாமே உயர்வானவை என்று கூறுவதற்கில்லை. சில நல்லவை சில கெட்டவை இருக்கும். எனவே எவற்றை பேராசை என்று பிரிப்பது? எவற்றை பேராசை அற்றது என்று கூறுவது? சற்று யோசித்துப் பார்த்தால் துன்பத்தை அளிப்பது துராசை என்பது புரியும். இதனை எடுத்துக் காட்டுவதற்கு சாஸ்திரங்கள் உபநிஷத்துகள் இவற்றிலிருந்து உதாரணம் கூறத் தேவையில்லை. வாழ்க்கையைக் கூர்ந்து பார்த்தாலும் உலகை ஆழ்ந்து நோக்கினாலும் புரிந்துபோகும். கூடாத ஆசை என்பது தர்மத்திற்கு விரோதமானதும் அளவுக்கு அதிகமானதுமான பேராசை. அத்தகைய பேராசையால் துயரம் விளைகிறது.

பேராசை பாவச் செயல்களை செய்விக்கிறது. பாவத்தினால் துன்பம் ஏற்படுகிறது. இதனை அறிய வேண்டும். பேராசைக்கும் பெருநஷ்டதிற்கும் இடையில் இன்னொன்று உள்ளது. அதன் பெயர் தீய செயல் அல்லது பாவச்செயல். பேராசை கொண்டவன் செய்யக் கூடாதவற்றைச் செய்யத் துணிவான். எப்படியாகிலும் ஆசையை தீர்த்து கொள்ள வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்வான். அது தர்மத்திற்கு எதிரானதாகவும் சாஸ்திரத்திற்கு விரோதமானதாகவும் இருக்கும். அவற்றை செய்வதால் அது பாவமாகிறது. பாவத்தின் பலன் துன்பமே! பேராசை – பாவம் – துன்பம்… இவை மூன்றும் வரிசையில் இருக்கும்.

“ஆசாயா: யே தாசா: தே தாசா: சர்வ லோகஸ்ய !”
“யார் ஆசைக்கு அடிமையாகிறானோ அவன் உலகத்திற்கு அடிமையாகிறான்”. அவன் ஒவ்வொருவரிடமும் அடிமை பூண்டு அலைய வேண்டிவரும். காரணம் பேராசையே! ஆசை இல்லையென்றால் மகாராஜாவைப் போல் தலைநிமிர்ந்து வாழலாம்! யார் பின்னாலும் அலையத் தேவையில்லை! யாருக்கும் கூழைக் கும்பிடு போட வேண்டிய அவசியமில்லை! மகாராஜா கூட ஆசைக்கு அடிமையானால் பிறரிடம் சேவகனை போல் கைகட்டி தலை குனிய வேண்டி வரும். அதனால் ஆசையை கட்டுப்படுத்திக் கொண்டால்தான் மனசாந்தி கிடைக்கும். மனதில் அமைதி இருந்தால்தான் நம்முள் இருக்கும் பரமாத்மாவை தரிசிக்க முடியும்!

கலங்கிய நீரில் உள்ளே என்ன உள்ளது என்பது தெளிவாகத் தெரியாது. நீர் ஆடாமல் நிலையாக இருந்தால் அதன் உள்ளே இருக்கும் வஸ்துவைப் பார்க்க இயலும். அதே போல் மனம் அலை பாயும் நீர் போல பேராசையால் சலனம் பெற்றிராமல் நிலையாக அசைவின்றி இருக்குமானால் பேராசையை வெற்றி கொண்டு உள்ளே இருக்கும் பரமாத்மாவைக் காண முடியும்.

அதனால் பேராசையை வெல்வது இவ்வுலக அமைதிக்கு மட்டுமின்றி உள்ளே உள்ள பரமாத்மாவை காண்பதற்குக் கூட பயன்படுகிறது. வயதோ பெருகி வருகிறது. ஆனால் ஆசை மட்டும் குறைவதில்லை. அது இன்னும் பெருகிக்கொண்டே போகிறது. அதனால்தான்,

“அங்கம் கலிதம் பலிதம் முண்டம்
தசன விஹீனம் ஜாதம் துண்டம்
வ்ருத்தோ யாதி க்ருஹீத்வா தண்டம்
ததபி ந முன்சத் யாசா பிண்டம் !!” என்றார் ஆதிசங்கரர்.

“பல்லெல்லாம் விழுகின்றன. தலை நரைத்துப் போகிறது. ஆசை என்னும் பிண்டம் மட்டும் விடுவதில்லை மனிதனுக்கு!” என்கிறார். யோசித்துப் பார்க்க வேண்டிய உயர்ந்த விஷயம் இது.

“யல்லப சே நிஜ கர்மோ பாத்தம்
வித்தம் தேன விநோதய சித்தம் !” என்கிறார் அற்புதமாக!

“உன் செயல்களால், உன் சக்தியால், உன் அருகதையைக் கொண்டு எதனை சம்பாதிக்கிறாயோ அதைக் கொண்டு திருப்தியாக இருப்பதற்குக் கற்றுக் கொள்! அதுவே பேராசைக்கு மருந்து!” என்கிறார். மிக அழகான வார்த்தை. இதனை நீதி வாக்கியமாக படித்து விட்டு சும்மா இருக்கக்கூடாது. வாழ்க்கைக்கான வழிமுறையாக எடுத்துக் கொண்டு கடைபிடிக்க வேண்டும்.

“அக்ருத்வா பர சந்தானம் அகத்வா கல மந்திரம்
அக்லேசயித்வா சாத்மானம் யதல்பமபி தத் பஹு: !”

அற்புதமான வார்த்தைகள் இவை! “பிறருக்கு வருத்தம் ஏற்படுத்தாமலும் உனக்கு நீயே மிக அதிக சிரமத்தை ஏற்படுத்திக் கொள்ளாமலும்….!”. இதனை அறிய வேண்டும். உன்னை நீயே மிக அதிக சிரமத்திற்கு உட்படுத்திக் கொள்ளக் கூடாது. அதற்காக சிரமப்படாமல் உட்கார்ந்துகொண்டு கிடைத்ததைத் தின்பேன் என்றால் அவனை சோம்பேறி என்பார்கள். உடலை பாழ் செய்யும் அளவுக்கு சிரமப்பட்டு உழைக்க வேண்டாம். சிலர் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொள்ளாமல் மிக அதிக கஷ்டப்பட்டு சம்பாதிப்பார்கள். ஆனால் அவ்விதம் சம்பாதித்தது என்ன மீந்திருக்கும்? கடைசியில் அதுவரை ஆரோக்கியத்தை கவனிக்காமல் விட்டதால் உடல் நிலை கெடும். அதற்கான சிகிச்சைக்கு அதுவரை உடலை வாட்டி சம்பாதித்த செல்வம் செலவாகி விடும். அதனால் உடலை எந்த அளவுக்கு, எதற்கு பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்று கூறும் அற்புதமான வாக்கியம் இது.

“அக்ளேச யித்வா ச ஆத்மானம்” – உன்னை நீ ‘க்ளேச’ படுத்திக் கொள்ளாமல் இரு. சிரமப்படுவது வேறு. க்ளேசப்படுவது வேறு. உடலை அளவுக்கு மீறி வருத்தவும் கூடாது. உடலை சோம்பேறியாக்கவும் கூடாது.

அனைத்து புலன்களையும் எப்போதும் சைதன்யத்தோடு வைத்திருக்க முயற்சிக்க வேண்டும். அது தர்மத்தோடு கூடிய உழைப்பாக இருக்க வேண்டும். தர்மத்தோடு கூடிய கோரிக்கையை தீர்த்துக் கொள்வதற்காக முயற்சிக்க வேண்டும். தர்மத்தை நிலைநாட்டுவதற்கு முயற்சிக்க வேண்டும். இந்த மூன்றிற்கும் உழைத்தால் அது நன்மை பயக்கும். அவ்வாறு வந்த செல்வம் நல்லது. அதற்கான ஆசைகள் கூட நலமானவையே!

“இல்லை…! இல்லை….! எனக்கு இன்னும் நிறைய வேண்டும்!” என்று கூறிபவரிடம் ‘இன்னும்’ என்பதற்கு ஏதாவது எல்லை இருக்கிறதா? என்று கேட்கிறது சாஸ்திரம்.

“யத் ப்ருதிவ்யாம் வ்ரீஹியவம் ஹிரண்யம் பசவ ஸ்த்ரீய:
நால மேகஸ்ய தத் சர்வம் இதி மத்வா ஸ்ரமம் வ்ரஜேத் !!”

வேதாந்த சாஸ்திரத்திலும் பாகவதம் முதலிய நூல்களிலும் இதே ஸ்லோகம் காணப்படுகிறது. “இந்த பூமியில் உள்ள செல்வம் அனைத்தையும் கொடுத்தாலும், தனம், சுவர்ணம் அனைத்தையும் கொடுத்தாலும் கூட ஆசை இறப்பதில்லை” என்கிறார்.

ஆசைக்கு ஏது எல்லை? ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றினால் சற்று நேரத்தில் நிரம்பிவிடும். ஆனால் மனித மனதில் ஆசை இருந்தால் எத்தனை நிரப்பினாலும் தீராது. இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று கோரிக்கை எழுந்து கொண்டே இருக்கும். அதனால்தான் அன்னமய்யா கூறுகிறார்….

“சாலுனண்டே இன்சுகந்தே சாலுனு ஜன்மமுனகு
சாலகுண்டே லோக மெல்ல சாலது !”

எத்தனை வந்தாலும் மீதி இருப்பது என்னவென்றால் துயரமே! வருத்தத்தைத் தவிர எதுவும் வரப்போவதில்லை! இதனை நினைத்துப் பார்க்க வேண்டும்.

துராசையே துன்பத்திற்குக் காரணம். அதனால் புத்திசாலியானவன் என்ன செய்ய வேண்டுமென்றால் ஆசையின் இயல்பை புரிந்து கொண்டு கிடைத்ததைக் கொண்டு திருப்திப்பட்டு பேராசையை நீக்கிக்கொள்ள வேண்டும். அதுவே ‘சமம்’ எனப்படும். சமம் என்றால் ‘அந்தர் இந்திரிய நிக்கிரகம்’. மனக்கட்டுப்பாடு.

பேராசையை நீக்குவதே புலனடக்கம்! இதைச் செய்ய முடியுமானால் பாவமும் இல்லை, துயரமும் இல்லை! ஆசை இருந்தால் தானே பாவமும் துயரமும்? எனவே துராசையை நீக்கி தர்மமயமான ஆசை கொண்டிருந்தால் அது ஒரு நியமத்தோடு கட்டுப்பாட்டையும் ஏற்படுத்துகிறது. மனதிற்கு அமைதியை அளிக்கிறது. அதன் மூலம் பரமாத்மாவை தரிசிப்பதற்குத் தேவையான ஓய்வு கிடைக்கிறது.

ஆசைகளை தீர்த்துக் கொள்வதற்கு நேரம் போதாமல் இருபத்து நான்கு மணி நேரமும் சிலர் வேலை செய்து கொண்டேயிருப்பார்கள். சற்று நேரம் இறை சிந்தனை செய்யுங்கள்…! தினமும் சில பகவத்கீதை ஸ்லோகம் படியுங்கள்…! என்று யாரிடமாவது கூறினால், ‘நேரமே இல்லை’ என்பார்கள். எதனால் நேரமில்லாமல் போகிறது?

பேராசையை தீர்த்துக் கொள்வதற்காக தீய செயல்கள் செய்வதில் ஓய்வு ஒழிச்சலின்றி கஷ்டப்படுகிறார்கள். அதனால் அவர்கள் ஆத்ம விசாரணை செய்வதற்கு கூட வாய்ப்பில்லாமல் போகிறது.

பேராசையை அடக்குவதில்தான் ‘சமம்’ எனும் மனக் கட்டுப்பாடு உள்ளது. அதன் வழியாகவே மனசாந்தி கிடைக்கும் என்று கூறியருளிய ருஷி வாக்கியங்களுக்கு வந்தனம்!

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

1 COMMENT

  1. அது என்ன சொல்வடை? வழக்கத்தில் இருக்கும் சொல் என்பது சொல்வழக்கு என்றுதானே இருக்க வேண்டும். ஏன் இந்த சொல்வடை?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe