கோவை கொடிசியாவில் மாபெரும் புத்தகத்திருவிழா இன்று துவங்கி 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
கோவை அவிநாசி சாலை பீளமேடு பகுதியில் உள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பான கொடிசியா வளாகத்தில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்துடன், கொடிசியா இணைந்து நடத்தும் 5வது புத்தகத்திருவிழா இன்று முதல் 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை 10 நாட்கள் நடக்கிறது.
கடந்த 4 ஆண்டுகளாக கோவை புத்தக திருவிழா கொடிசியாவில் நடத்தப்பட்டு வருகிறது. மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள இந்தப் புத்தகத் திருவிழா தற்சமயம் ஐந்தாவது ஆண்டாக நடத்தப்படுகிறது.
இன்று தொடக்க விழா நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்து சென்றதில், 1.5 கோடி ரூபாய் அளவிற்கு புத்தகங்கள் விற்பனையானது. இந்த வருடம் 2.5 லட்சம் பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் ரூ.3 கோடி வரை புத்தக விற்பனை நடைபெற வாய்ப்புள்ளது.
10 நாட்கள் நடைபெறும் இந்தப் புத்தகத் திருவிழாவில் 20ம் தேதி மாலை 3.30 மணி அளவில், கோயமுத்தூர் ரோட்டரி சங்கங்களுடன் இணைந்து பள்ளி மாணவர்களுக்காக நடத்திய கட்டுரைப் போட்டியின் பரிசளிப்பு விழா நடைபெற உள்ளது.
தொடர்ந்து, 21, 22, 23, 24, 25, 26, 27 ஆகிய தேதிகளில் சிறப்பு சொற்பொழிவுகள், கலைநிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், படைப்பாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
28 ஆம் தேதி காலை சொல்முகம் வாசகர் சந்திப்பு நிகழ்ச்சியும் மாலை 3 மணிக்கு நிறைவு விழா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்த புத்தக திருவிழாவில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, பஞ்சாப், குஜராத், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து 150 பதிப்பாளர்களின் 250 நூல் விற்பனை மையங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் இடம்பெற உள்ளது




