தமிழக அரசியல் தலைவர்கள் ஈழத் தமிழர்கள் மீது அக்கறை இருப்பதுபோல் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர் என்று குறிப்பிட்டு, இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்ச மகன் நாமல் ராஜபட்ச கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சவின் இளைய சகோதரர் கோத்தபய ராஜபட்ச வெற்றி பெற்று அடுத்த அதிபராக பதவி ஏற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாச தோல்வி அடைந்துள்ளார். தமிழர்கள், முஸ்லிம்கள் என சிறுபான்மையினரின் வாக்குகள் பெற்றும், சஜித் தோல்வி அடைந்தது குறித்து இலங்கையில் விவாதங்கள் கிளம்பியுள்ளன.
இந்நிலையில், நவ.18, திங்கள் நேற்று கோத்தபய ராஜபட்ச அதிபராக பதவியேற்றதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் தங்கள் விமர்சனத்தை முன்வைத்தனர். குறிப்பாக, வைகோ., திருமாவளவன், பழ.நெடுமாறன், ராமதாஸ் ஆகிய தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கைகள் வெளியிட்டனர்.
இது குறித்து தனது அதிருப்தியை வெளியிட்டுள்ள இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அதிபர் ராஜபட்சவின் மகனுமான நாமல் ராஜபட்ச, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், இலங்கைத் தமிழர்கள் நலனின் அக்கறை இருப்பது போல் முதலைக் கண்ணீர் வடித்து அரசியல் செய்கின்றனர் என்று கூறியுள்ளார்.
அவரது அறிக்கையில்….
தமிழகத்தில் தமது சுயநலவாத சந்தர்ப்பவாத அரசியலை தக்க வைப்பதற்காக எமது நாட்டில் தமிழ் மக்களைப் பற்றி அக்கறை உள்ளவர்களாக காட்டி முதலைக்கண்ணீர் வடிக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ், தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழநெடுமாறன் ஆகியோரின் அறிக்கைகளை கண்ணுற்றேன். அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியலை தவிர அவற்றில் வேறு எதுவும் இல்லை.
எமது மக்களை பகடைக் காய்கள் ஆக்கும் எம் மக்களிடையே பகைமையையும் துவேசத்தையும் தூண்டிவிடும் மூன்றாம்தர அரசியலைத் தவிர வேறு என்ன ஆக்கப்பூர்வமான விஷயத்தை செய்து இருக்கிறீர்கள் என்ற கேள்வி என்னுள் எழுவதை என்னால் தடுக்க முடியவில்லை.
2009 இல் யுத்த காலத்தில் மறைந்த தமிழகத்தின் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் பாராளுமன்ற குழு இலங்கைக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டு வடக்கு கிழக்கு பகுதிகளை பார்வையிட்டதுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபட்சவுடன் சினேக பூர்வமான சந்திப்பிலும் ஈடுபட்டிருந்தமை உலகமறிந்த விஷயம்.
அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் அவர்கள் கலந்து கொண்டதுடன் எம்முடன் சினேக பூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் எமது நிலைப்பாடுகளையும் தெளிவுற அறிந்து கொண்டிருந்தார். அத்தகையவர் இன்று இவ்வாறு சந்தர்ப்பவாத அறிக்கை விடுவது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது.
எமது ஜனாதிபதி உட்பட எமது எதிர்கால அரசாங்கமானது அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெளிப்படைத் தன்மையுடனும் எண்ணத்துடனும் செயற்படும்!
தமிழகத்தின் அரசியல் தலைவர்களுக்கு நான் அன்புடன் கூறிக்கொள்ள விரும்புவது என்னவென்றால் நீங்கள் அனைவரும் அறிக்கையில் நிகழ்கால ஜனாதிபதி முதல் அரசை விமர்சிப்பதை விட்டு விட்டு நடைமுறை அரசியலில் இலங்கைத் தமிழ் மக்களைப் பற்றி சிந்திப்பது சால சிறந்தது!
ஊடகங்களில் சுயநல சந்தர்ப்பவாத அறிக்கைகளை மட்டுமே விட்டு பரபரப்பை ஏற்படுத்துவதை விட்டு, எமது நாட்டு தமிழ் மக்களை உணவு பூர்வமாக நேசிக்கும் தமிழக தலைவர்கள் ஆக நீங்கள் இருந்தால், எமது மக்களது எதிர்கால வாழ்வு சுபிட்சமாக அமைய முடிந்தவரை பொறுப்புடன் செயல்படுவது காலத்தின் கட்டாயம் என தமிழகத்தின் அரசியல் தலைவர்களை அன்புடனும் மரியாதையுடனும் கேட்டுக்கொள்கிறேன் என்று நாமல் ராஜபட்ச தனது அறிக்கையில் விமர்சனம் செய்துள்ளார்.