இலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபட்ச வெற்றி! பிரதமர் மோடி வாழ்த்து!

Published:

srilanka election - 2026

இலங்கை அதிபர் தேர்தலில் 52 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கும் கோத்தபய ராஜபட்ச, அந்நாட்டின் அடுத்த அதிபராக உள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சஜித் பிரேமதாச தனது தோல்வியை ஏற்றுக் கொண்டிருக்கிறார். அதிபர் தேர்தலில் வாகை சூடிய கோத்தபயவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இலங்கையின் தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறீசேனவின் பதவிக்காலம் வரும் ஜனவரி 9இல் முடிவடைகிறது. இதை அடுத்து, அடுத்த அதிபரை தேர்ந்தெடுக்க நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 81.52 சதவீத வாக்குகள் பதிவாகின.

இதை அடுத்து பலத்த பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. பொதுஜன பெரமுனா கட்சியின் சார்பில் போட்டியிட்ட கோத்தபய ராஜபட்சவுக்கும், ஆளும் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாசவுக்கும் இடையே தான் போட்டி நிலவியது.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான திரிகோணமலை, கண்டி, வன்னி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்ட மாவட்டங்களில், பதிவான மொத்த வாக்குகளில், 75 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குகளை, சஜித் பிரேமதாச பெற்றார். தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கோத்தபயவுக்கு குறைவான வாக்குகளே கிடைத்தன.

எனினும் சிங்களர்கள் அதிகம் வசிக்கும், கொழும்பு, பொலன்னறுவை, கம்பஹா, ஹம்பன்தோட்டா, நுவராஎலியா, புத்தளம், மொனராகலை உள்ளிட்ட மாவட்டங்களில் கோத்தபய ராஜபட்ச அதிகளவிலான வாக்குகள் கிடைத்தன.

ALSO READ:  போதைப் பழக்கத்துக்கு எதிரான இயக்கத்துக்கு வலு சேர்ப்போம்! மனதின் குரலில் பிரதமர்!

50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் வேட்பாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். அதன் படி, 52 சத வாக்குகள் பெற்றுள்ள கோத்தபய ராஜபட்ச அந்நாட்டின் அடுத்த அதிபராக தேர்வாகிறார்.

42 சத வாக்குகளைப் பெற்ற சஜித் பிரேமதாச தமது தோல்வியை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள கோத்தபய ராஜபட்சவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்தினைப் பதிவு செய்துள்ள பிரதமர் மோடி, அதிபர் தேர்தல் அமைதியாக நடைபெற்றதை உறுதிப்படுத்திய இலங்கை மக்களை பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், கோத்தபயவுக்கு தெரிவித்துள்ள வாழ்த்தில், தங்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம், இரு நாடுகளுக்கு இடையே நெருக்கமான, சகோதரத்துவ உறவுகளை மேலும் ஆழமானதாக்க முடியும்! நமது பிராந்தியத்தில் அமைதி, நல்லிக்கணக்கம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்பதை தாம் எதிர்நோக்கியிருப்பதாக தமது டிவிட்டர் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

இந்நிலையில், பிரதமர் மோடியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து கோத்தபய ராஜபட்ச தமது டிவிட்டர் பதிவில் பதில் அளித்துள்ளார்.
அதில், வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நமது இரு நாடுகளும், வரலாறு மற்றும் பொது நம்பிக்கையில் பிணைக்கப்பட்டுள்ளன. நமது நட்பை பலப்படுத்தவும், எதிர்காலத்தில் உங்களை சந்திக்கவும் ஆர்வமாக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கோத்தபய ராஜபட்சவின் வெற்றி, இந்திய, சீன, இலங்கை தொடர்பில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற விரிவான அலசல்கள் தற்போது இலங்கையில் பேசப்பட்டு வருகிறது. அது போல், இந்திய ஊடகங்களிலும், கோத்தபய ராஜபட்சவின் வெற்றி குறித்தும், எதிர்கால அரசியல் நிலவரம் குறித்தும் பலரும் விவாதித்து வருகின்றனர்.

ALSO READ:  செங்கோட்டை- நெல்லை பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்!

Related articles

Recent articles

spot_img