வசூல்ராஜாவாக மாறிய ஹானஸ்ட் ’போலீஸ்காரர்’! விருது பெற்ற மறுநாளே ’லஞ்சம்’ வாங்கி…!

அப்போது அவர் பெயருக்கு பொருத்தமாகத்தான் செயல்பட்டார் என்றும் கேலி கிண்டல்கள் சமூகத் தளங்களில் பகிரப்பட்டன... அவர் பெயருக்கு ஏற்ப ‘லஞ்ச லாவண்யா’ ஆகிவிட்டார் என்று!

வசூல் ராஜாவாக மாறிவிட்டார் உத்தமமான கான்ஸ்டபிள் ஒருவர்! விருது பெற்றுக் கொண்ட மறுநாளே லஞ்சம் வாங்கி பிடிபட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மாநில அரசால் உத்தம கான்ஸ்டபிள் விருது பெற்ற திருப்பதி ரெட்டி, மறுநாளே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடம் சிக்கிக் கொண்டார்.

மணல் கொள்ளை வியாபாரியிடம் இருந்து லஞ்சம் வசூல் செய்த போது, கையும் களவுமாக அவரை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் பிடித்துள்ளனர்.

நாட்டின் 73வது சுதந்திர தின விழா கொண்டாடப் பட்ட போது, காவலர்களுக்கு விருது கொடுத்து கௌரவித்தது மாநில அரசு. அந்த விழாவில் நேர்மையான போலீஸாருக்கான விருது பெற்றார் போலீஸ் கான்ஸ்டபிள் திருப்பதி ரெட்டி. ஆனால் விருது பெற்று 24 மணி நேரம் கடப்பதற்குள் லஞ்சம் வாங்கி பிடிபட்டு மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்!

மகபூப்நகர் ஒன் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் கான்ஸ்டபிள் திருப்பதி ரெட்டி ஆகஸ்ட் 15ஆம் தேதி அமைச்சர் சீனிவாசகௌட் கைகளிலிருந்து உத்தம கான்ஸ்டபிள் விருது வாங்கினார். அவரே மறுநாள் லஞ்சம் பெறும் போது லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடம் பிடிபட்டார்.

அதனால் ‘நேர்மையாளர் விருது’க்கு தேர்ந்தெடுக்கப் படும் நபர்கள் குறித்த முறைகேடு தற்போது வெளிப்பட்டுவிட்டதாக மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கான்ஸ்டபிள் திருப்பதி ரெட்டி மணல் வியாபாரிகளிடம் அடிக்கடி பணம் வசூல் செய்து ஊழல் சொத்து சேர்ப்பதில் பழக்கப் பட்டவராகத் தெரிகிறது. வெள்ளிக் கிழமை வெங்கடாபூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் சட்ட விதிகளுக்கு உட்பட்டே மணல் எடுத்துச் சென்றுள்ளார். ஆனாலும் கான்ஸ்டபிள் திருப்பதி ரெட்டி அவரை வழிமறித்து 17 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால்தான் விடுவேன் என்றும் இல்லாவிட்டால் பொய் வழக்கில் உள்ளே தள்ளிவிடுவேன் என்று அச்சுறுத்தி உள்ளார். அதனால் ரமேஷ் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அளித்த ரொக்கத்தை ரமேஷ் காவல் நிலைய வளாகத்திலேயே திருப்பதி ரெட்டியிடம் கொடுத்துள்ளார். லஞ்சம் வாங்கிய உற்சாகத்தோடு ஸ்டேஷன் உள்ளே நுழைந்த கான்ஸ்டபிளை ஏஸிபி அதிகாரிகள் கையும் களவுமாகப் பிடித்தனர்.

கான்ஸ்டபிள் பல வருடங்களாகவே இதே போல் பணம் வசூல் செய்து வருவது தெரிய வந்துள்ளது. அதன் மூலம் அதிகாரிகள் கான்ஸ்டபிளை கைது செய்தனர்.

இதனிடையே இப்படி லஞ்சம் வாங்கி பழக்கப் பட்ட ஒரு கான்ஸ்டபிளை ‘உத்தம அவார்டு’க்கு தேர்வு செய்தது எப்படி என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இதே போல் தெலங்கானா மாநிலத்தில் தான், அண்மையில் லஞ்ச வழக்கில் சிக்கி கைதானார் கேசம்பேட்டை பெண் தாசில்தார் லாவண்யா. அவரும் கூட,  இதே போல் லஞ்ச முறைகேட்டில் சிக்கி கைதாகும் முன் ‘உத்தமமான தாசில்தார்’ விருது பெற்றிருந்தார். அவரும் எவ்வாறு இப்படி விருதுக்கு தேர்வு செய்யப் பட்டார் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் பெயருக்கு பொருத்தமாகத்தான் செயல்பட்டார் என்றும் கேலி கிண்டல்கள் சமூகத் தளங்களில் பகிரப்பட்டன… அவர் பெயருக்கு ஏற்ப ‘லஞ்ச லாவண்யா’ ஆகிவிட்டார் என்று!

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...