
இந்தியாவுக்கு எதிராக போராட காஷ்மீரிகளுக்கு ஜிகாத் பயிற்சி அளித்தோம் என்று முஷாரப் கூறியுள்ளார் .
ஜிகாத் பயிற்சி அளித்து அவர்களை நாங்கள் ஹீரோக்கள் ஆகவே பார்த்தோம் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் அதிபரான முஷாரப் அளித்துள்ள ஒரு தேதி குறிப்பிடப்படாத பேட்டி அடங்கிய வீடியோ ஒன்று இப்போது வைரலாகி வருகிறது.
பாகிஸ்தான் அரசியல் தலைவர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் முஷாரப் கூறியுள்ளவை தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1979ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் மத தீவிரவாதத்தை நாங்கள் அறிமுகம் செய்தோம். அங்கிருந்து சோவியத் ரஷ்யாவை வெளியேற்றுவதற்காக பாகிஸ்தானுக்கு உதவுவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன் பிறகு உலகமெங்கும் உள்ள முஜாகிதீன்களை வரவழைத்து பாகிஸ்தானில் பயங்கரவாத பயிற்சி அளித்தோம். அவர்களுக்கு ஆயுதங்களை அளித்தோம். அவர்கள் எங்களுடைய ஹீரோக்கள். ஹக்கானி, ஒசாமா பின்லேடன் போன்றவர்கள் எங்களுடைய ஹீரோக்கள்.
ஆனால் அதன் பின்னர் உலக சூழ்நிலை மாறிவிட்டது. உலகம் இவர்களை வில்லன்களாகப் பார்க்கத் துவங்கியது. அதுபோல் காஷ்மீரில் இருந்து வந்த முஜாகிதீன்களை நாங்கள் வரவேற்றோம். அவர்களை ஹீரோக்கள் போல நடத்தினோம். அவர்களுக்கு பயிற்சியும் ஆதரவும் அளித்து அவர்களை முஜாஹிதீன்களாகப் பார்த்தோம். இந்திய ராணுவத்துக்கு எதிராக போராடுவதற்காக அவர்களுக்கு பயிற்சி அளித்தோம்.
அதன் பிறகு லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகள் உருவாகின… என்று கூறியுள்ளார் முஷாரப்.
ஜம்மு காஷ்மீரில் வன்முறையை தூண்ட பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் பயிற்சியும் உதவியும் அளித்து வருகிறது என்று இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் அதனை பாகிஸ்தான் மறுத்து வந்தது.
இப்போது, தாம் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக கூறியுள்ளது! தற்போது சர்ச்சையையும் இந்தியாவின் தரப்பில் உள்ள நியாயத்தையும் வலுவாக எடுத்துக் காட்டியுள்ளது!