
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்த பெண்ணை அவரது வீட்டிற்கு அழைத்துச்செல்வதற்காக இரவு நேரத்தில் சுமார் 100 கி.மீ ஆட்டோ ஓட்டிச்சென்றுள்ளார் பெண் ஓட்டுநர் ஒருவர்.
மணிப்பூர் மாநிலம் காம்ஜோக் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் இம்பாலில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் கொரோனா வைரஸ் தொற்றுக்காக சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார். அவர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில், வேறு மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.
அதனை அடுத்து கால் டாக்ஸிக்கு அழைத்தபோதிலும், அவர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர் என்பதால் அவரை அழைத்துச்செல்ல யாரும் முன்வரவில்லை. இந்த நிலையில், அந்த வழியாக சென்றுகொண்டிருந்த பெண் ஆட்டோ ஓட்டுநரை உதவிக்கு அழைத்துள்ளார் அந்த பெண்.
பெண் ஆட்டோ ஓட்டுநரோ, அந்த பெண்ணிற்கு உதவி செய்ய ஒப்புக் கொண்டு இரவு நேரத்தில் சுமார் 100 கி.மீ ஆட்டோ ஓட்டி அவரது வீட்டிற்கு சென்றடைந்துள்ளார். பனி மூட்டம் காரணமாக 8 மணி நேரம் எடுத்துக் கொண்டதாகவும் அந்த பெண் ஆட்டோ ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் அம்மாநில முதல்வருக்கு தெரியவந்த பின்னர் பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு பல நிறுவனங்கள் சேர்ந்து அளித்த 1 லட்சத்து 10 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கியுள்ளார்.
அந்த பெண் ஆட்டோ ஓடுநரது பெயர் லாய்பி ஒய்னம் என தெரியவந்துள்ளது. கணவரை இழந்து இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் லாய்பி ஒய்னத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்டோ டிரைவர் என்ற ஆவணப்படமும் வெளியானது. அந்த ஆவணப்படம், 2015ம் ஆண்டு நடைபெற்ற தேசிய திரைப்பட விருது விழாவில் சிறந்த ஆவணப்படத்திற்கான விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
Glad to honour and hand over a cash reward of Rs.1,10,000 to Smt Laibi Oinam, a auto driver from Pangei who took the trouble to take the discharged girl from JNIMS covering 8 hours journey to Kamjong on midnight of May 31. She truly exemplifies hard work and “service above self.” pic.twitter.com/oFwgcx0Kyz
— N.Biren Singh (@NBirenSingh) June 11, 2020