இந்திய வரலாற்றிலேயே அண்மைக் காலத்தில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட விஷயம், சிம்பு தனது கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்யுங்க என்று சொன்னது! அதுவும் அண்டா அண்டாவாக என்று பகிரங்கமாக வீடியோ பதிவில் சொன்னதுதான் நாட்டின் மிக முக்கியப் பிரச்னையாக வலைத்தளங்களில் அலசப் பட்டது.

சிம்பு ஆசைப்பட்டு கேட்டுவிட்டார், விரும்பிக் கேட்டுவிட்டார், அதுவும் வெட்கத்தை விட்டு கேட்டுவிட்டார். அதுவும் பொதுமக்களிடமா கேட்டார்? தனது ரசிகர்களிடம்தானே கேட்டார்…! அதைப்போய் ஏதோ தேசவிரோதச் செயலில் ஈடுபட்டது போன்ற குதிகுதிப்புடன் குய்யோ முறையோ என்று கூவலாமா என்று அங்கலாய்த்தார்கள், சிம்பு ஏதோ விரல் சூப்பும் சின்னப் பையன், அவனைப் போய் வம்புக்கு இழுக்குறீங்களே என்று நினைத்துக் கேட்டவர்கள்!

சிம்பு சீமானுடன் சேர்ந்துவிட்டானுல்ல… இப்படித்தான் பேசுவான் என்று சிம்புவை ஐயோ பாவம் சின்னப் பையன், அவனை இப்படியெல்லாம் சீரழித்தது சீமான் என்ற கயவன் தான் என்று கருத்துகளைத் தெரிவித்தார்கள் சிலர்.

இப்படியாக நாட்டின் மிக முக்கியமான தீராப் பிரச்னை ஓடிக் கொண்டிருந்த போது, சீமான் தனது சிஷ்யப் புள்ள சிம்புவை சூப்பர் ஹீரோ என்று உச்சி குளிர்ந்து புளகாங்கிதம் அடைந்து ஆஸ்கர் நாயகன் அளவுக்கு ஏற்றி வைத்தார்! அவனை வைத்து மூணு ஹிட் ஹாட்ரிக்கா கொடுக்குறேன் பார் என்று ஹெஹ்ஹேஹ்ஹே என்று மிக மிக சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு கடுகடுப்புடன் சொல்லித் தீர்த்தார்.

சிம்பு ஏதோ சீரியஸாகத்தான் பாலபிஷேகம் எல்லாம் செய்யச் சொல்கிறார் போலிருக்கிறது என்று சீரியஸாகிவிட்ட பால் முகவர்கள் சங்கம், வழக்கம் போல் பால்மாறாமல் காவல்துறையில் போய், புகார் மனு அளித்தது. காரணம், சிம்பு பால் பால் என்று அண்டாவைக் காட்டிச் சொன்னதால்! அமலா பால் கருத்து சொல்லியிருந்தால் கூட அது தங்களைப் பாதிக்கும் விஷயம்தான் என்று சீரியஸாகிவிடும் பால் முகவர் சங்கத்தின் புகாரால் சிம்பு கடுப்பானாரோ இல்லியோ, சீமான் கடுப்பாகிவிட்டார்.

முப்பாட்டன் முருகனுக்கும் அப்பத்தா ஆண்டாளுக்கும் அடிக்கடி பூசை செய்து தனக்குத்தானே கற்பூரம் காட்டிக் கொண்டு திருட்டி சுத்திப் போட்டுக் கொள்கிற சீமானுக்கு இப்போது ரோசம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது. ஹா.. ஹா என்று சிரிக்கத் தூண்டும் ட்ரிக்கை வைத்து சினிமா கொடுப்பதால்தான் அதற்கு ஹாட்ரிக் என்று பெயர் வைத்தான் என்று அற்புதக் கருத்தை அழகாக சிரிக்கும் வகையில் சொல்லி தும்பிகளை நெம்பி விட்டு கைத்தட்டல் வாங்க வா தொறந்து வழிந்து நிற்கும் சீமானுக்கு, தனது தும்பி சிம்புவை வம்புக்கு அழைத்தவர்களை சும்மா விடுவதா என்று கோபம் கொப்புளிக்க, சரக்கடித்த செவந்த கண்ணை கோபத்தால் செவந்த கண்ணைப் போல் காட்டி, முட்டியைத் தூக்கி வானத்தைக் காட்டி, மடித்து விட்ட கைச் சட்டை மடிப்பு கீழே கவிழாத வகையில் கையை இறுக்கக் காட்டி.. என்று காட்டிக் காட்டி… பேட்டி கொடுக்கிற சீமான் இன்றும் பேட்டியைக் கொடுத்தார்… முட்டிக் கை தூக்கியபடி!

நெல்லைச் சீமைக்கு வந்திருந்த சீமான், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போது, சிம்பு ஏன் தன் கட்டவுட்டுக்கு பாலபிஷேகம் செய்யச் சொன்னார் என்பதற்கு வெளக்கம் கொடுக்கும் வகையில் ஒரு பொன்மொழியை உதிர்த்தார்.

சிம்பு பாலாபிசேகம் செய்யுங்கள் என்று சொன்னது விரக்தியின் வெளிப்பாடு என்று, ஏன் அவருக்கு விரக்தி வந்தது என்பதை கவனியுங்கள் என்று ஐயோ பாவம் ரேஞ்சுக்கு அசடு வழியவிட்டார்.

அண்மைக் காலமாக விஜயகாந்தை வாரிச் சுருட்டி, விஜயை ஆகா ஓஹோ என்று சொன்ன அதே வாயால், விஜய்யை வாரிச்சுருட்டி கக்கத்தில் மாட்டிக் கொண்டு விஜய் ரசிகர்களிடம் படாத பாடு பட்டதால், இப்போது, அஜித் ரசிகர்களைக் குளிர வைக்கும் வகையில் ஒரு வார்த்தையை அவிழ்த்து விட்டார்.

அஜித் அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொல்வது தீர்கமான முடிவு என்று கூறிய சீமான், அஜித்தின் முடிவு மிகச் சரியானது பாராட்டுதலுக்கு உரியது… என்று பெருமூச்சு விட்டபடி சொன்னார்.

ஆக… சினிமாவில் இருந்து அரசியலுக்கு யார் வந்தாலும், அது வரவேற்கத்தக்க தல்ல என்பதால், ஆக… போட்டி அரசியல் தனக்குப் பிடிக்காது என்பதால், ஆக… தான் மட்டுமே சினிமா அரசியல்வாதியாகி தும்பிகளுடன் வம்பு செய்து கொண்டிருப்பதால், ஆக… மற்ற எவருமே ஆகாவாரிதான் என்று முத்தாய்ப்பாக முடித்தார் சீமான்!

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...