சிரசை முழுக்க முயன்ற செங்கல்பட்டில்!

பஸ் இல்லை ரயில் இல்லை…போக்குவரத்து எதுவும் இல்லை. அங்கங்கே மாட்டிக் கொண்டவர்களுக்கு சாலையும் கைகொடுக்கவில்லை.

அந்த மாதிரியான நிலையில்… வீட்டின் பிள்ளை பெண்டுகளை வெளியில் தவிக்கவிட்டு, வீட்டில் தவித்துக் கொண்டிருந்த தாய்மார்களுக்கு ஆறுதல் சொல்வதே பெரும்பாடாகிவிட்டது. அப்போது நமக்கு முன்னிருந்த ஒரே வாய்ப்பு, மாட்டிக் கொண்டிருந்தவர்களை பத்திரமாக வீட்டுக்கு அழைத்துவருவது ஒன்றே!

டிச.2. மதியம் எதிர் ப்ளாட்டின் அபயக் குரல்! மாமல்லபுரத்தில் முதலாமாண்டு படிக்கும் பையனுக்கு ஹாஸ்டல் மூடப்பட்டதால், வெளியே தள்ளாத குறையாக அனுப்பிவிட்டார்களாம்! பையன் செங்கல்பட்டு பஸ்ஸ்டாண்டில் நின்று கொண்டு போன் அடிக்கிறான். கையில் இருந்ததோ வெறும் 20 ரூபாய்.

அந்த அம்மாவின் தவிப்பைப் புரிந்துகொண்டு, அதற்கு முந்தைய நாள் இரவு நடந்து வந்த களைப்பு இருந்தாலும், பைக்கை எடுத்துக் கொண்டு செங்கல்பட்டுக்கு கிளம்பிவிட்டேன்.

சீறிப் பாய்ந்திருந்த சிங்கப்பெருமாள் கோவில் ஏரி நீர், ஊருக்குள் பெரும் கபளீகரம் செய்திருந்தது. சாலையில் மண் குவியல். கம்பு கட்டைகள் சாலையின் நடுப்புற பிரிவில் நீட்டிக் கொண்டிருந்தன. சாலையை ஒட்டிச் சென்றால் காலையே வெட்டிவிடும் போலிருந்தது.

செங்கல்பட்டு ஏரி நீர் மதகு திறப்பதற்கு காத்திருக்கவில்லை. மேலேறியும் மதகுச் சுவரையும் கடந்து எல்லை தாண்டியிருந்தது. அருகே நின்றிருந்த இளைஞர்கள் வாழ்நாளில் முதல்முறையாக அதனை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.

அங்கிருந்து சென்னையில் இருந்து செங்கல்பட்டுக்கு நுழையும் சாலையில் புகுந்தால்… சாலை தடுக்கப்பட்டிருந்தது. சற்று தொலைவில்… ரயில் பாலத்தில் இருந்து இறங்கி வரும் சாலை கீழிறங்கி 8 அடிக்கு நீர் கடந்து சென்று கொண்டிருந்தது. வெள்ளத்தில் நீந்த இயலாமல் தத்தளித்த ஒரு நாயை இளைஞர்கள் இருவர் இழுத்து, கக்கத்தில் இடுக்கிக் கொண்டு கரை சேர்த்தார்கள்.

அடுத்த வழி… காஞ்சி – செங்கல்பட்டு சாலை. விரைந்தேன். அங்கும் தடுப்பு. சாலையில் 4 அடி ஆழ பள்ளம் வெட்டி, நீர் கடந்து போக வழி ஏற்படுத்தியிருந்தார்கள். அப்புறம் பார்த்தால்… காஞ்சி செல்லும் சாலையில் பாலத்தை தொட்டுக் கொண்டு தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்தது. பாலத்துக்கு மேல் சலசலத்துச் சென்ற நீரில் கால்களை நனைத்தபடி, அடித்துச் செல்லும் நீரின் பிரமாண்ட ஓசையை காதில் வாங்கிக் கொண்டேன். சற்று தொலைவில், ஆற்று நீரில் வீடுகளின் பெரும் பகுதி முங்கிக் கிடந்தது. புறவழிச் சாலையின் மேம்பாலத்தில் நின்று பார்த்தபோது, பாலாற்றுக்கு விரைந்தோடும் வகையில் வெள்ள நீர் முட்டி மோதி சுழித்துக் கொண்டு சென்றது.

சாலையில் பாய்ந்தோடிய நீரை நடுத்தடுப்புச் சுவர் அணைபோல் நின்று அரவணைத்ததால்… ஜேசிபி இயந்திரம் மூலம் அந்த அணைச் சுவரை அடித்து நொறுக்கி உடைத்துக் கொண்டிருந்தார்கள். அடுத்த நொடி… நீர்த்தேக்கத்தில் இருந்து விடுபடும் நீராய் சாலையின் மறு பகுதிக்கு அது பாய்ந்தோடியது.

பின் எனக்கு இருந்த அடுத்த வாய்ப்பு – மதுராந்தகத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு வித்யாசாகர் கல்லூரி வழியே செல்லும் சாலைதான்! அதன் வழியே ஊருக்குள் நுழைந்தால்… செங்கல்பட்டு ஏரியின் நீர் ஊருக்குள் நானும் இருப்பேன் என்று அடம்பிடித்து அங்கங்கே இரண்டு மூன்று அடிக்கு தேங்கியிருந்தது.

இதில் வண்டியை ஓட்டிச் சென்றால் நீர் புகுந்து, ஊர் திரும்ப வழியிருக்காது என்பது புரிந்ததால்… ஓரமாக பைக்கை நிறுத்தி நடந்து சென்று ஒருவழியாக அந்தப் பையன் இருக்கும் இடத்தை அடைந்து, அழைத்து வந்தேன். அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்சு.. அந்த அம்மாவின் முகத்தில்!

அதே நாளின் அடுத்த பயணம் கூடுவாஞ்சேரியை நோக்கி…!

பின் குறிப்பு: இந்தப் படங்கள் -செங்கல்பட்டின் அன்றைய நிலையைப் படம்பிடிப்பவை!