சென்னையில் குடியரசு தின விழா: கொடியேற்றினார் ஆளுநர் ரோசய்யா

Published:

குடியரசு தின விழா சென்னையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ரோசய்யா தேசியக் கொடி ஏற்றி வைத்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் தேசியக் கொடிக்கு மரியாதை செய்தனர். இதையடுத்து முப்படை வீரர்கள் மற்றும் பாதுகாப்புப் படை வாகனங்களின் கண்கவர் அணிவகுப்பு நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதக்கங்களை வழங்கினார். சிவகுமார், பழனிவேல்ராஜ் உள்ளிட்ட 5 பேருக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த துல்கருணை பாட்சாவிற்கு மத நல்லிணக்கப் பதக்கமும், மது ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்டதற்காக 4 பேருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கமும் வழங்கப்பட்டன. வேளாண் துறை சிறப்பு விருது, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த துரைசாமிக்கு வழங்கப்பட்டது. பிறகு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. கரகாட்டம், கும்மியாட்டம், தம்புரா நடனம், கோலாட்டம் என நடனமாடி மாணவ மாணவியர் அசத்தினர்.

Related articles

Recent articles

spot_img