கேரளத்தில் பந்த்: கேரளா செல்லும் பஸ்கள் செங்கோட்டை அருகே நிறுத்தம்

உள்ளூர் செய்திகள்

செங்கோட்டை கேரளத்தில் இன்று பாஜக சார்பில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்த மாநிலத்துக்குச் செல்லும் பஸ்கள் தமிழக எல்லையான செங்கோட்டை அருகே கோட்டைவாசல் பகுதியில் நிறுத்தப் பட்டது. கேரளாவில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டதில் நிதி மந்திரி மானி ஊழல் செய்திருப்பதாக பா.ஜனதா சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் நிதி மந்திரியை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பா.ஜனதா சார்பில் இன்று பந்த் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கேரளாவில் இன்று பா.ஜனதா சார்பில் பந்த் நடைபெற்றது. இதனால் கேரள மாநிலம் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கார், வேன், பஸ்கள் இயக்கப்படவில்லை. கேரளாவில் பந்த் நடைபெறுவதையொட்டி செங்கோட்டையில் இருந்து கொல்லம், கொட்டாரக்கரை, திருவனந்தபுரம், எர்ணாகுளம், பத்தனம்திட்டா ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்கள் இன்று நிறுத்தப்பட்டது. மேலும் தமிழகத்தில் இருந்து கேரளா சென்ற லாரிகள் புளியரை வாகன சோதனைச் சாவடி அருகே நிறுத்தப்பட்டது. தூத்துக்குடியில் இருந்து கேரளா சென்ற அரசு பஸ்கள் தமிழக எல்லையான செங்கோட்டை அருகேயுள்ள கோட்டைவாசல் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டன. பஸ்கள் ஓடாததால் செங்கோட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து கொல்லம், பத்தனம்திட்டா ஆகிய பகுதிகளுக்கு வேலைக்கு செல்லும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இன்று வேலைக்கு செல்லவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.