tiruchendur
tiruchendur

பக்தர்கள் இல்லாமல் திருச்செந்தூர் விசாகத் திருவிழா: களையிழந்து காணப்பட்ட கோயில் வளாகம்

திருச்சீர் அலைவாய் என்றும் சீரலைவாய் என்றும் பெரிதும் போற்றப்படும், முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில், முருகப் பெருமானின் ஜன்ம நட்சத்திர விழாவான வைகாசி விசாகத் திருவிழா மிகப் புகழ் பெற்ற ஒன்று.

இங்கே வைகாசி விசாகத் திருவிழா வசந்த விழாவாக பத்து நாள்கள் நடைபெறும். இந்த வருட வைகாசி விசாகத் திருவிழா கடந்த மே 26-ஆம் தேதி தொடங்க வேண்டியது. ஆனால், கொரோனா பொது முடக்கம் காரணமாக விழா தொடங்கவில்லை.

இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் கோவில் வைகாசி விசாகத் திருவிழா, பக்தர்கள் எவரும் இன்றி சுரத்தில்லாமல் நடைபெற்றது. குறைந்த எண்ணிக்கையிலான அர்ச்சகர்கள் மற்ற கோயில் பணியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

விசாகத் திருவிழாவை முன்னிட்டு கோவில் நடை காலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 5.10 மணிக்கு சுப்ரபாத சேவையும் 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

காலை 9 மணிக்கு விசாகத் திருவிழாவை முன்னிட்டு மூலவருக்கும் சண்முகருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.

முருகப் பெருமானுக்கு நடைபெற்ற பூஜைகளைக் காண பக்தர் எவரும் அனுமதிக்கப்படவில்லை. திருச்செந்தூர் முருகன் கோவிலில் எந்தத் திருவிழா நடைபெற்றாலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரை மணல்வெளியில் கூடுவார்கள்.

விசாகத் திருவிழாவிற்கு ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக வந்து முடி காணிக்கை செலுத்தி கடலில் புனித நீராடி அங்கபிரதட்சிணம் செய்து நீண்ட வரிசையில் நின்று முருக தரிசனம் செய்வது வழக்கம்!

இந்த முறை, விசாகத் திருவிழா, ஊரடங்கு காரணமாக கடற்கரை மற்றும் கோயில் வளாகம் பக்தர்கள் ஓரிருவர் கூட இன்றி, வெறிச்சோடிக் காணப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending