நெல்லை: நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் நிகழும் முறைகேடுகள் குறித்து கவனத்துக்குக் கொண்டு வந்து, முறைகேடுகளை சீர்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி, அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பு, அக்.15 முதல் தொடர் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தது.

ஏபிவிபி., விடுத்த கோரிக்கைகள்…
• வருகைப் பதிவு அபராதக் கட்டணம் ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.500 அறிவித்ததை ரத்து செய்ய வேண்டும்
• வருகைப் பதிவு தொடர்பான புதிய கட்டுப்பாடுகளை சரி செய்ய வேண்டும்
• இதுவரை தமிழில் தேர்வெழுதிய இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் மீண்டும் தமிழில் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும்.
• செனட், சிண்டிகேட் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மான நகலை பல்கலைக்கழக இணைய தளத்தில் வெளியிட வேண்டும்
• மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியன கட்டண (common fees structure) முறையை அமல்படுத்த வேண்டும்
• ONE SUBJECT ONE TEACHER என்ற பல்கலைக்கழக விதிமுறையை உடனே அனைத்து கல்லூரிகளிலும் நடைமுறைப் படுத்த வேண்டும்
• திருமாவளவனின் ஆய்வுக் கட்டுரையை ரத்து செய்ய வேண்டும்… உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி, கன்னியாகுமரி தூத்துக்குடி மாவட்டங்களில் அக்டோபர் 15 முதல் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது!
– என்று ஏபிவிபி மாநில இணைச் செயலாளர் எம்.பிரித்விராஜன் வெளியிட்டள அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மாணவர் அமைப்பின் பிரதிநிதிகளை அழைத்த நெல்லை பல்கலை துணைவேந்தர், இது குறித்துப் பேச வருமாறு கூறியிருந்தார்.

அதன்படி, நெல்லை பல்கலைக் கழக துணை வேந்தர் பாஸ்கரனை ஏபிவிபி மாணவர் அமைப்பின் மாநில இணைச் செயலாளர் பிரித்விராஜன் உள்ளிட்ட மாணவர் குழுவினர் சந்தித்து, கோரிக்கை மனுவை அளித்தனர்.

அப்போது, மாணவர்களின் கோரிக்கையைப் பரிசீலிப்பதாகக் கூறிய துணைவேந்தர், வருகைப் பதிவு அபராதத் தொகை கட்டணத்தைக் குறைத்துக் கொள்வதாக உறுதி அளித்தார். மேலும், ஒரு பாடம் ஓர் ஆசிரியர் – என்ற முறையை பல்கலை.,யின் அனைத்து உறுப்புக் கல்லூரிகளிலும் நடைமுறைப் படுத்த ஆவன செய்வதாகவும், இதனை நடைமுறைப் படுத்தாத கல்லூரிகள் மற்றும் பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் தெரிவித்தார்.

ஏபிவிபி அமைப்பு கூறியிருந்த கோரிக்கைகளில், திருமாவளவன் குறித்த அம்சத்தைத் தவிர மற்ற அனைத்தையும் பரிசீலிப்பதாகக் கூறினார். மேலும், திருமாவளவன் குறித்த ஆய்வு நூல் வந்த பின்னர் அது குறித்து பேசலாம், அதற்கு முன் தேவையற்ற சர்ச்சைகள் வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட துணை வேந்தர், உடனே பல்கலைக் கழக பதிவாளரிடம் சுற்றறிக்கை அனுப்பவும் ஏற்பாடு செய்தார்.

அதன்படி, சுற்றறிக்கை அனைத்து உறுப்புக் கல்லூரிகளுக்கும் அனுப்பப் பட்டுள்ளது. அதில், வருகைப் பதிவு அபராதத் தொகை ரூ.500 என்று அறிவிக்கப் பட்டதில் இருந்து ரூ.200 ஆகக் குறைக்கப் பட்டுள்ளது. இது, நவ.2018ல் இருந்து நடைமுறைப் படுத்தப் படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கை அறிவிப்பு, ஏபிவிபி., மாணவர் அமைப்பின் தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...