தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பதால் கர்நாடகா மீது பாஜக.,வுக்கு பாசம்!

#

திருச்சி: தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பது தெரிந்ததால், கர்நாடகா மீது பாஜக.,வுக்கு பாசம் ஏற்பட்டிருக்கிறது என்று பேசினார் திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின்.

மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அதற்கு மத்திய அரசு துணை போவதாக குற்றம் சாட்டி, திமுக., கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும், கூட்டணியில்லாத தோழமைக் கட்சிகளின் தலைவர்களான வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சியில் நடைபெற்றது.

மேகதாது விவகாரத்தில் தேர்தலுக்காகவோ, அரசியலுக்காகவோ போராடவில்லை என்று இந்த திருச்சி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோது, திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார். மேலும்,  காவிரியை தடுக்கும் பணிகளில் கர்நாடக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது, மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்திற்கு நிச்சயம் தண்ணீர் வராது என்று எச்சரித்தார்.

தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என்பது தெரிந்ததால், கர்நாடகா மீது அவர்களுக்கு பாசம் ஏற்பட்டுள்ளது என்று கூறிய ஸ்டாலின், இயற்கை இடர்ப்பாட்டை ஏற்றுக்கொள்ளலாம், மேகதாது போன்ற செயற்கை இடர்ப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

மேகதாது பிரச்னைக்கு முழு காரணம் தமிழக அரசு தான் என்று கூறினார் ஸ்டாலின்.

மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, கஜா புயல் போன்ற பேரிடர் வேறு மாநிலத்தில் நிகழ்ந்திருந்தால், பிரதமர் நேரில் சென்று பார்த்திருக்கமாட்டாரா? என்று கேள்வி எழுப்பினார்.