காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 96) : அப்ரூவரான ஆட்டோ டிரைவர்!

Published:

godse apte - 2026

நண்பகல் நேரம்… ஆப்தேயும் நாதுராமும் டாடா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அலுவல கத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. அங்கிருந்து அந்த நிறுவனத்தின் வண்டியேறி, விமான நிலையம் சென்று விமானத்தில் டெல்லிக்கு பயணிக்க வேண்டும்.

அவர்கள் அது வரை 2000 ரூபாய் நிதி திரட்டியிருந்தார்கள்.இன்னும் இரண்டு பேரை பார்க்க வேண்டியிருந்தது. பணம் கொடுக்க ஒப்புக் கொண்டவர்கள் சற்று தாமதித்து வரச் சொல்லியிருந்தார்கள். அவர்களில் ஒருவர்.குர்லா புறநகர் பகுதியில் வசித்து வந்தவர். 400 ரூபாய் கொடுப்பதாகச் சொல்லியிருந்தார்.

இன்னொருவர் ஒரு மில் உரிமையாளர்.என்ன தொகை என்று குறிப்பிடாவிட்டாலும், ஒரு பெரிய தொகையை கொடுப்பார் என்று ஆப்தேயும், நாதுராமும் எதிர்பார்த் திருந்தார்கள். திகம்பர் பாட்கேவிற்கு 350 ரூபாய் செலவிற்கு கொடுத்த ஆப்தேயும், நாதுராமும், குர்லா நபரிடம் பிற்பகல் சென்று,அவர் கொடுப்பதாகச் சொன்ன 400 ரூபாயை வசூல் செய்யும்படி பாட்கேயிடம் சொன்னார்கள்.

நாதுராமும், ஆப்தேயும் மில் உரிமையாளரிடம் அவர்களே சென்றார்கள்.அவர் 1000 ரூபாய் கொடுத்தார்.  ஆனால் அந்த பணத்தை பெறுவதற்காகச் சென்றதால்,ஒரு மணி நேரம் கால தாமதமாகி விட்டது. ஆகவே டாக்ஸி டிரைவரை நேராக, 15 மைல் தொலைவிலிருந்த SANTA CRUZ விமான நிலையத்திற்கு செல்லச் சொன்னார்கள். விமானம் 2 மணிக்கு புறப்பட வேண்டியிருந்தது.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

வழிநெடுக,ஆப்தேயும்,நாதுராமும் பாட்கேயிற்கு உணர்ச்சியூட்டும் விதத்தில் பேசினார்கள். அன்று மாலை தவறாது பம்பாயிலிருந்து டெல்லிக்கு புறப்படும் FRONTIER MAIL ரெயிலில் டெல்லி வந்தடையும்படி கூறினார்கள்.

அடுத்த நாள் மாலை ரயில் டெல்லி வந்தடையும் போது,அவரை டெல்லி ரயில் நிலையத்தில் சந்திப்பதாகக் கூறினார்கள். ஒரு வேளை ஏதாவது காரணத்தால்,ரயில் நிலையத்தில் சந்திக்க முடியாமல் போனால்,பாட்கேயை நேரே டெல்லி ஹிந்து மகா சபா அலுவலகத்திற்குச் செல்லும்படியும்,அவர்கள் இருவரில் ஒருவர் அவருக்காக அங்கு நிச்சயம் காத்திருப்பதாகவும் சொன்னார்கள்.

அவர்களுடைய டாக்ஸி SANTA CRUZ விமான நிலையத்தை அடைந்த போது, அவர்களுடைய விமானம்,அங்கிருந்து ஒரு மைல் தள்ளியிருந்த கலினா விமான நிலையத்திலிருந்து புறப்படுவதாக அறிந்தார்கள். ஆப்தேயிற்கு விமானத்தை தவற விட்டுவிடுவோமோ எனும் கவலை தொற்றிக் கொண்டது.

டாக்ஸி டிரைவரை காற்றின் வேகத்தில் ஓட்டும்படி விரட்டிக் கொண்டே பயணித்தார்கள். கலினா விமான நிலையத்தை அடைந்தவுடன்,டாக்ஸி டிரைவருக்கு பணத்தை கொடுக்கும்படி பாட்கேயிடம் கத்திக் கொண்டே விமானத்தில் ஏற ஓடினார்கள்.

அவர்கள் அனைவரையும் டாக்ஸி டிரைவர் நினைவு வைத்திருக்க இந்த களேபரமெல்லாம் போதாதென்று, பாட்கே அதே வண்டியில் குர்லா சென்று,400 ரூபாய் பணத்தை வசூல் செய்துக் கொண்டு,தானும்,சங்கர் கிஷ்டய்யாவும் குர்லா ரயில் நிலையத்திற்குச் செல்லும் வரை அதே டாக்ஸியை பயன்படுத்தினார்.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

அப்போது மணி மாலை 3 மணியை கடந்து விட்டது. டாக்ஸியை காலை 7 மணிக்கு எடுத்திருந்தார்கள். டாக்ஸி மீட்டர் 55 ரூபாய் 10 அணா காட்டியது. அந்த டாக்ஸி டிரைவரின் அன்றாட வருமானம் சராசரியாக 30 ரூபாய்தான். திகம்பர் பாட்கே இன்னும் அந்த சாது வேஷத்திலேயே இருந்தார்.

டாக்ஸி டிரைவருக்கு பணத்தை கொடுத்து விட்டு அவரிடம் பணத்தை பெற்றுக் கொண்டதற்கு ரசீது கேட்டார் அவர். டாக்ஸி பயணத்திற்கு ரசீது கேட்கிறாரே என்று ஆச்சரியத்துடன் பார்த்தப்படி டிரைவரும் ரசீது கொடுத்தார்.

அந்த டாக்ஸி டிரைவரின் பெயர் AITAPPA KOTIAN. பின்னாளில் காந்தி கொலை வழக்கில்,அரசு தரப்பின் முக்கிய சாட்சி ஆனார்.

(தொடரும்)

#காந்திகொலையும்பின்னணியும்

– எழுத்து: யா.சு.கண்ணன்

Related articles

Recent articles

spot_img