
அரசு பஸ்களில் இன்ஜின் பேனட் மீது பெண்களை அமர வைத்துக் கொண்டு வண்டி ஓட்டக்கூடாது என்று போக்குவரத்து கழகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு பேருந்துகளில் பஸ் இன்ஜின் பேனட் மீது பெண் பயணிகளை அமர வைக்க கூடாது என்று போக்குவரத்து கழகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் இயங்கும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் பல நேரங்களில் அமர இருக்கை கிடைக்காத பயணிகள் டிரைவர் சீட் அருகே உள்ள இன்ஜின் பேனட் மீது அமர்ந்து பயணம் செய்கின்றனர். இவ்வாறு பயணிப்பவர்களில் ஆண்களை விட, பெண்களே அதிகளவில் இன்ஜின் பேனட்டில் அமர்ந்து பயணம் மேற்கொள்கின்றனர். இவ்வாறு பயணம் மேற்கொள்ளும் பயணிகளிடம் டிரைவர்களும் பேசிக்கொண்டே வாகனத்தை இயக்குகின்றனர். இதன் காரணமாக சில நேரங்களில் விபத்துகளும் நேர்வதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. எனவே இத்தகைய சந்தர்ப்பங்களால் நேரும் விபத்துக்களை தவிர்க்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவில் … ஓட்டுநர் இருக்கைக்கு அருகே அமைந்துள்ள இன்ஜின் பேனட் மீது பெண்களை அமர வைக்கக் கூடாது. ஓட்டுநர்கள், பெண்களிடம் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்குவதாக புகார் வந்துள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து புகார் வரும் பட்சத்தில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சென்னை, விழுப்புரம், சேலம், திருச்சி, மதுரை, கோவை, கும்பகோணம், திருநெல்வேலி என்று 8 கோட்டங்களாக செயல்பட்டு வருகிறது. இவற்றில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றைத் தவிர அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் மூலமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. பெரும்பாலும், அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் தான் இது போன்றுகூட்டம் அதிகம் உள்ள நேரங்களில் பயணிகளை இஞ்சின் மீது அமரவைக்கின்றனர். ஆனால் விரைவுப் பேருந்துகளில் இது போன்று வாய்ப்பு ஏற்படுவதில்லை.