உலக நாடுகளையே இரண்டு ஆண்டுகளாக அலறவிட்டுக் கொண்டிருக்கிறது கொரோனா.
அதன் சமீபத்திய உருமாறிய வடிவம் தான் ஒமைக்ரான் எனும் மின்னல் வேக கொரோனா. இதுவரை உருமாறிய வகையில் மிகவும் அபாயகரமானதாகப் பார்க்கப்பட்டது டெல்டா.
இந்தியாவில் 2ஆம் அலையை அது தான் உருவாக்கியது. இன்னமும் இங்கே தான் நீடிக்கிறது. பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், சீனா போன்ற பல்வேறு நாடுகளுக்கும் சென்றது.
ஆனால் அதையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு அதிவேகமாகப் பரவுகிறது ஒமைக்ரான். ஒரே மாதத்தில் 100க்கும் மேற்பட்ட நாடுகள் பரவியுள்ளது . டெல்டா போல ஒமைக்ரான் ஆட்டிப் படைப்பதில்லை. வீட்டிலிருந்தபடியே அதிலிருந்து குணமடைந்துவிடலாம். ஆனால் விஷயம் அதுவல்ல.
இரட்டைக் குழல் துப்பாக்கியாக டெல்டாவும் ஒமைக்ரானும் சேர்ந்து பரவுகின்றன. இதனால் தொற்று எண்ணிக்கை எதிர்பாரா விதமாக உயர்கின்றன. அமெரிக்காவில் தினசரி 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர்.
பிரிட்டன், பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளின் நிலை மோசம் தான். இந்தியாவிலும் படிப்படியாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது கொரோனா பாதிப்பு. ஒமைக்ரான் பாதிப்பு ஆயிரத்தை நெருங்கிறது.
மொத்த பாதிப்பு மீண்டும் 10 ஆயிரத்தை கடந்து செல்கிறது. மும்பையில் 3ஆம் அலை தொடங்கிவிட்டது. சென்னையில் கடந்த 10 நாட்களில் படிப்படியாக ஏறிக் கொண்டிருக்கிறது.
இதனால் அங்கே கட்டுப்பாடுகளை கடுமையாக்க மத்திய சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது. நிலைமை இப்படியிருக்க உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் பகீர் செய்தியைக் கூறியிருக்கிறார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “டெல்டா, ஒமைக்ரானால் உலக நாடுகள் இரட்டை அச்சுறுத்தலில் உள்ளன. இரண்டும் சேர்ந்துகொண்டு பாதிப்பு எண்ணிக்கையை உச்சத்திற்கு கொண்டு செல்கின்றன.
இவை மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்கள் மற்றும் இறப்பவர்களின் எண்ணிக்கை உயர காரணமாகியுள்ளன.
இரண்டும் மிகப்பெரும் கொரோனா சுனாமியை ஏற்படுத்துகின்றன. ஏற்கெனவே சோர்வுற்ற சுகாதாரப் பணியாளர்களுக்கு அழுத்ததை கொடுக்கும். ஒட்டுமொத்த உலக சுகாதார கட்டமைப்பும் ஆட்டம் காணும்” என்றார்.