ருஷி வாக்கியம் (106) – சம்ஸ்கிருதம் மத மொழி அல்ல! விஞ்ஞான மொழி!


நம் கலாச்சாரத்தில் தெய்வீக மொழியான சம்ஸ்கிருதம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளதைப் பார்க்கிறோம். ராமாயணம், மகாபாரதம் முதலான இதிகாசங்கள், மற்றும் அதற்கு முன்பிருந்தே உள்ள வேதங்கள், விஞ்ஞான சாஸ்திரங்கள் போன்றவையனைத்தும் சம்ஸ்கிருத மொழியிலேயே படைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. அதன் பிறகு வந்த புராண நூல்கள் கூட சம்ஸ்கிருதத்திலேயே எழுதப்பட்டுள்ளன.

சம்ஸ்கிருதத்தை ஒரு மத மொழியாகப் பலரும் பார்க்கிறார்கள். ஒரு விதத்தில் பார்த்தால் பாரத தேசம் இதன் பிரயோஜனமே தேவையில்லாத நிலைக்குச் சென்றுவிட்டது. இது ஒரு துரதிருஷ்டமான பரிணாமம். சம்ஸ்கிருதத்தை விரும்பிப் படித்தறிய முடிந்தால் பாரத தேசத்தின் பூர்வ வைபவங்களை மீண்டும் பெற முடியும்.

புராதன காலத்தில் கூட சம்ஸ்கிருத மொழி மட்டுமேயன்றி “பிராகிருத மொழி” கூட பழக்கத்தில் இருந்தது என்பது தெரிகிறது. ராமாயணம் நிகழ்ந்த காலத்தில் அனுமன் சீதாதேவியிடம் ‘பிராகிருத’ மொழியில் ராம கதையைக் கூறியதாக சுந்தர காண்டத்தில் காண்கிறோம்.

சம்ஸ்கிருத மொழி ஆரம்பத்திலிருந்தே சாஸ்திர மொழியாக அதாவது விஞ்ஞான மொழியாக பயன்படுத்தப்பட்டுள்ளது. சாஸ்திரங்களை எடுத்துரைப்பதற்குத் தோதான மொழியாக சம்ஸ்கிருதம் உள்ளது. ஏனென்றால் அதில் இருக்கும் வியாகரண சுத்தமான பதங்களும் உச்சரிப்புகளும் சிருஷ்டியில் உள்ள எந்த விஷயம் குறித்தும் சொல்வதற்கான சக்தியைக் கொண்டுள்ளன. அதனால் சமஸ்கிருத மொழிக்கென்று ஒரு கௌரவம் உள்ளது.

சம்ஸ்க்ருத மொழி அறிந்தவர்கள் பிராகிருத மொழியும் பேசினார்கள். அதேபோல் பிராகிருத மொழி அறிந்தவர்கள் சம்ஸ்கிருத மொழியும் பேசினார்கள். எப்போதுமே சம்ஸ்கிருத மொழி என்பது சாஸ்திர பாஷை. அதாவது விஞ்ஞான மொழி. சாஸ்திரம் என்றால் விஞ்ஞானம் என்று பொருள். இன்னும் கூறவேண்டுமானால், “தி லாங்வேஜ் ஆஃப் சயின்சஸ்” என்பது சம்ஸ்க்ருத மொழியின் விளக்கம்.

அதனால்தான் புராதன கலாசாரத்தில் சாஸ்திரங்கள் அனைத்தும் சம்ஸ்கிருத மொழியில் வெளிவந்தன. அதனால் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால் சம்ஸ்கிருதம் என்பதே விஞ்ஞான மொழி. மத மொழி அல்ல!

பிரபஞ்சத்திற்கு சம்ஸ்கிருதத்தை அளித்த சிறப்பு பாரத தேசத்திற்கே சொந்தம். உலகின் மேதாவிகள் பலரும் சம்ஸ்கிருத மொழியின் உயர்வை அறிந்து வருகிறார்கள். தற்போதுள்ள நவீன தொழில்நுட்பத்தில் கணினி மொழிக்குக் கூட சம்ஸ்கிருத மொழியே ஏற்றது என்று மேல்நாட்டு விஞ்ஞான ஆய்வாளர்கள் கூறுவதை நாம் அறிகிறோம். அதேபோல் ‘நாசா’ போன்ற விஞ்ஞான ஆய்வகங்களில் சம்ஸ்கிருதத்தை படித்தறிந்து வருகிறார்கள். அத்தனை சிறந்த மொழி சமஸ்கிருதம்.

ஆயின் விஞ்ஞான மொழி, சாஸ்திர பாஷை என்பதால் அதற்கென்று சில மரியாதைகள் உள்ளன. அதனால் இது பிற உலகியல் மொழிகளைப் போல கலப்படம் ஆகவில்லை. ஏனென்றால் சாஸ்திர மரியாதைகள் இருப்பதாலும் அதனை இவ்வாறுதான் உச்சரிக்க வேண்டும் என்ற வரைமுறை இருப்பதாலும் எப்படிப்பட்ட மாற்றமும் செய்யப்படாமல் ஒரு பரிபூரண மொழியாக இருகிறது. அதற்கு ஒரு சாஸ்வதமான அமரத்துவம்…. அழியாத்தன்மை கிடைத்துள்ளது. நிலைத்தன்மை கொண்டது.

சம்ஸ்கிருதத்தை அதிகம் பேர் பேசாததால் அதனை ‘இறந்த மொழி’ என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் சற்று சிந்தித்துப் பார்த்தால் பாரத தேசத்தின் மாநில மொழிகள் அனைத்திலும் சமஸ்கிருத சொற்களின் தாக்கம் பெருமளவில் உள்ளது. சம்ஸ்கிருதம் இன்றி எந்தச் சொல்லும் உருவாகவில்லை. அத்தகைய சிறப்பு சம்ஸ்கிருதத்துக்கு உண்டு.

அது மட்டுமல்ல. புராதன காலத்தில் கூட சம்ஸ்கிருத மொழிக்கு கௌரவமளித்தபடியே ‘பிராகிருத’ மொழியில் மக்கள் பேசி வந்ததை அறியமுடிகிறது. முக்கியமாக காளிதாசர் முதலான கவிஞர்கள் தாம் எழுதிய நாடகங்களில் சில கதாபாத்திரங்கள் சம்ஸ்கிருதத்தில் உரையாடுவதாகவும், சில கதாபாத்திரங்கள் ப்ராக்ருதம் பேசுவதாகவும் காட்டியுள்ளார். அதாவது விவகாரங்களை வெளிப்படுத்துவதற்கு ப்ராக்ருதம் பயன்படும் என்றும் சாஸ்திர விஞ்ஞானத்தையும் உயர்வான பரப்பிரம்மத்தைப் பற்றி கூறுவதற்கும் சமஸ்கிருத மொழி உபயோகப்படும் என்றும் அறிந்து கொள்ள முடிகிறது.

அதனால் சம்ஸ்கிருத மொழிக்கு ‘தேவபாஷை’ என்ற ஒரு பெயர் உள்ளது. இதன் மூலம் தேவதைகள் சம்ஸ்கிருதம் பேசுவார்கள் என்று அறியலாம். அல்லது சம்ஸ்கிருத பாஷை தெய்வீகத் தன்மை கொண்டது என்று அறியலாம். சம்ஸ்க்ருத பாஷைக்கு யோக சக்தி கூட உள்ளது. ஆழமாக ஆராய்ந்தால் இது புரியவரும். சம்ஸ்கிருத மொழியிலுள்ள செய்யுட்களை படித்து வந்தாலும், சம்ஸ்கிருத மொழி வாக்கியங்களை பிற மொழிகளோடு கலக்காமல் சுத்தமாக உச்சரித்து வந்தாலும் அந்த சப்தம் கேட்பதற்கு ஒரு சங்கீதம் போலவே இருக்கும்.

மேலும் சம்ஸ்கிருதம் என்ற சொல்லிலேயே “ஸம்ஸ்காரம் செய்யப்பட்ட” என்ற பொருள் கிடைக்கிறது. ‘சம்ஸ்காரம்’ என்றால் தூய்மைப்படுத்தப்பட்ட… பண்படுத்தப்பட்ட என்று பொருள். அதுமட்டுமல்ல இதன் மூலம் நாமும் சீர்திருத்தப்படுவோம். அதுவே சம்ஸ்கிருத மொழியின் பிரத்தியேக குணம்!

மகாகவி காளிதாசர் குமாரசம்பவத்தில் அற்புதமாக ஒரு சம்பவத்தை வர்ணிக்கிறார். சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்தபின் சரஸ்வதி தேவி அந்த புண்ணிய தம்பதிகளைத் துதி செய்தாள். சாட்சாத் மொழிகளின் அன்னையான சரஸ்வதி தேவி எவ்வாறு துதி செய்தாள் என்றால் சம்ஸ்கிருத மொழியில் சிவபெருமானையும் ப்ராக்ருத மொழியில் பார்வதி தேவியையும் துதி செய்தாள் என்கிறார். எத்தனை சமத்காரமாக கூறுகிறார் பாருங்கள்!

இந்தச் செய்யுளுக்கு ‘மல்லிநாதசூரி’ என்ற வியாக்கியானகர்த்தா மிக அழகாக விளக்க உரை எழுதியுள்ளார். பண்படுத்தப்பட்ட பவித்திரமான சம்ஸ்க்ருத வாக்கினால் சிவபெருமானைப் போற்றி, ப்ராக்ருத மொழியால் பார்வதி தேவியைப் போற்றினாள் என்று எழுதுகிறார்! சரஸ்வதி தேவியே இவ்விதம் கீர்த்தனை செய்கிறாள். அதனால் பிராகிருத மொழி குறைந்தது என்றோ சமஸ்கிருத மொழி உயர்ந்தது என்றோ கூறக்கூடாது. இரண்டுமே மொழிகளின் தாயாகிய சரஸ்வதியிடமிருந்து வந்துள்ளன. சிவன் உயர்ந்தவரா? பார்வதி உயர்ந்தவரா? இருவரும் சமமே!

ஆயினும் ஒரு மென்மை குணம் பிராகிருத மொழியில் உள்ளது. மென்மை பெண்களின் இயல்பு அல்லவா? அதனால்தான் பார்வதி தேவியை மிருதுவான பிராகிருத மொழியால் ஸ்தோத்திரம் செய்கிறாள் சரஸ்வதிதேவி.

இதே காரணத்தால்தான் சம்ஸ்கிருத நூல்களில் பெண் கதாபாத்திரங்கள் பிராகிருத மொழி பேசுவார்கள். பெண்கள் சம்ஸ்கிருதம் பேசக்கூடாது என்றல்ல! பெண்களிடம் இருக்கும் மென்மையும் சுகுமாரமான நளின இயல்பும் பிராக்ருத மொழியின் சரளமான எளிமைத் தன்மைக்கு பொருத்தமாக இருந்தது. இவையனைத்தும் பிராகிருத மொழியின் இலட்சணங்கள்! அதனால் அவற்றுக்கு பெண்மைத் தன்மையை சூட்டியுள்ளார்கள். மொழிகளின் இயல்பைப் புரிந்து கொண்டு காவியம் படைத்தார்கள்.

உலகியல் வாழ்க்கைக்கு பிராகிருத மொழி எத்தனை தேவையோ சாஸ்திர விஞ்ஞானத்திற்கும் பரமாத்மா பற்றிய ஞானத்திற்கும் சம்ஸ்கிருத மொழி அத்தனை தேவை! அதனால் இரண்டுமே நமக்குத் தேவை. இதனை ஒரு நியமமாகக் கொள்ள வேண்டும்.

பாரத தேசத்து மக்களாகிய நாம் தற்போது எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களோ அந்த மாநில மொழியை தாய்மொழியாக… வாழ்க்கை மொழியாக பயன்படுத்துகிறோம். அதோடுகூட உலகத்தோடு தொடர்பு கொள்வதற்கு ஆங்கில மொழியையும் கற்றுக் கொள்கிறோம். நல்லதுதான்!

அவற்றோடு கூட பரமாத்மாவோடு அனுபந்தம் கொள்வதற்கும் சாஸ்திர விஞ்ஞான ரகசியங்களை அறிவதற்கும் சம்ஸ்கிருத மொழியைப் படித்தறிவது மிக மிக அவசியம்! சிறுவயது முதல் முதுமை வரை இதன் தேவை உள்ளது என்பதை நினைவில் நிறுத்த வேண்டும். சம்ஸ்கிருத மொழித் தாய்க்கு வந்தனம்!

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...