
ஸ்ரீசிருங்கேரி ஆசார்யர்களின் வித்யையும் விநயமும்- பகுதி-18
– மீ.விசுவநாதன் –
கவிஞர் சுந்தர்ஜி ப்ரகாஷ் அவர்கள் ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதரின் “நிர்வாண ஷட்கம்” என்ற ஸ்லோகத்தையும், தன்னறிவுக்கு எட்டியபடி எழுதிய எளிய உரையையும் மிகுந்த விநயமுடன் சமீபத்தில் (13.05.2020 ) முகநூலில் பகிர்ந்து கொண்டார். என்னுள்ளம் மிகவும் ஆனந்தம் கொண்டது. மீண்டும் மீண்டும் அந்த ஸ்லோகங்களைப் படித்துக் கொண்டும், அதை வலைத்தளத்தில் ஒரு இசைப்பண்டிதர் மதுரமாக இசைப்பதையும் கேட்டுக் கேட்டு ஆனந்தித்து வருகிறேன்.
தனது குருநாதர் ஸ்ரீ கோவிந்த பகவத்பாதரை நர்மதை நதிக்கரையில் முதலில் தரிசனம் செய்கிறார் ஸ்ரீ சங்கரர். ” நீ யார்?” என்று குருநாதர் கேட்க, எட்டு வயதான ஸ்ரீ சங்கரன் மிகுந்த விநயமுடன் அதற்குக் கூறிய பதிலே “நிர்வாண ஷட்கம்” என்ற ஸ்லோகம்.
ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் தனது எட்டாவது வயதில் என்போன்ற அக்ஞானிகளுக்கும் அதுபோன்ற அத்வைத நிலை எட்ட வேண்டும் என்ற கருணையினால் தனது குருவிடம் பணிவோடு “தான் யார்?” என்று உரைத்த உயர்ந்த விளக்கம்.
இதில் ஆழ்ந்து போகப் போக, புத்தி, அகங்காரம், சித்தம் எல்லாம் ஒடுங்கி ஏதோ ஒரு ஜன்மத்தில் ஸ்ரீ சங்கரர் சொன்ன பாவம் ஒவ்வொரு மனிதப் பிறப்புக்கும் நிச்சயம் கிட்டும் என்பதை சிருங்கேரி குருநாதர்கள் ஒவ்வொருவரும் தவறாமல் தங்களது பக்தர்களுக்கு உபதேசித்தும், வாழ்ந்து காட்டியும் வருகிறார்கள்.

ஸ்ரீ ஆதிசங்கரரின் நிர்வாண ஷட்கம்
1.
மனோ புத்யஹங்கார சித்தா நினாஹம்,
ந ச ச்ரோத்ர ஜிஹ்வே, ந ச க்ராண நேத்ரே,
ந ச வ்யோம பூமிர், ந தேஜோ ந வாயு:
சிதானந்த ரூப சிவோஹம்! சிவோஹம்!
மனம் புத்தி ஆணவச் சித்தங்கள் இல்லை; இரு
கண்ணில்லை; செவி, நாக்கு நாசியும் இல்லை;
வானில்லை மண்ணில்லை; வளி ஒளியும் இல்லை;
சிதானந்த ரூபம் சிவோஹம்! சிவோஹம்!
2.
ந ச ப்ராண சங்க்யோ, ந வை பஞ்சவாயு:
ந வா சப்த தாதுர், ந வா பஞ்சகோசா:
ந வாக் பாணி பாதம், ந சோப ஸ்தபாயு:
சிதானந்த ரூப: சிவோஹம்! சிவோஹம்!
உயிர் மூச்சு மில்லை; ஐங் காற்றும் இல்லை;
எழு தாதும் இல்லை; ஐம் போர்வை இல்லை;
கை கால்கள் இல்லை; சினை வினையும் இல்லை;
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!
3.
ந மே த்வேஷ ராகௌ, ந மே லோப மோஹௌ,
மதோ நைவ, மே நைவ மாத்ஸர்ய பாவ:
ந தர்மோ ந சார்த்தோ, ந காமோ ந மோக்ஷ:
சிதானந்த ரூப சிவோஹம்! சிவோஹம்!
வெறுப்பில்லை விருப்பில்லை; மையல் பற்றில்லை;
சிறு கர்வம் இல்லை; அழுக்காறும் இல்லை;
அறம் பொருள் நல்லின்ப, வீடு பேறில்லை;
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!
4.
ந புண்யம் ந பாபம், ந சௌக்யம் ந துக்கம்!
ந மந்த்ரோ ந தீர்த்தம், ந வேதா ந யக்ஞா:
அஹம் போஜனம் நைவ, போஜ்யம் ந போக்தா,
சிதானந்த ரூப சிவோஹம்! சிவோஹம்!
வினை வேட்கை இன்பங்கள், துன்பங்கள் இல்லை;
மறை வேத தீர்த்தங்கள், வேள்விகள் இல்லை;
உணவில்லை, உணவாக்கி உண்பவரும் இல்லை!
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!
5.
ந ம்ருத்யுர் ந சங்கா, ந மே ஜாதி பேத:
பிதா நைவ, மே நைவ மாதா, ந ஜன்மா
ந பந்துர் ந மித்ரம், குருர் நைவ சிஷ்ய:
சிதானந்த ரூப சிவோஹம்! சிவோஹம்!
மரணங்கள் ஐயங்கள், உயர்வு தாழ்வில்லை;
தந்தை தாயில்லை; தரும் பிறப்பில்லை;
உற்றார்கள் சுற்றார்கள், குரு சீடர் இல்லை;
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!
6.
அஹம் நிர்விகல்போ, நிராகார ரூபோ,
விபுத் வாச்ச, சர்வத்ர, சர்வேந்த்ரி யாணாம்
நசா சங்கடம் நைவ, முக்திர் ந மேயா
சிதானந்த ரூப: சிவோஹம்! சிவோஹம்!
மாற்றங்கள் இல்லை; பல தோற்றங்கள் இல்லை;
எங்கெங்கும் எல்லாமும், எதனுள்ளும் இவனே;
தளையில்லை; தடையில்லை; வீடுபேறில்லை;
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!
ஐங் காற்று
ப்ராணன் – உள்ளே இழுக்கும் காற்று
அபானன் – அழுக்குகளை வெளியேற்றும் காற்று;
சமானன் – செரிக்கும் காற்று;
உதானன் – உறுப்புகளை இயக்கும் காற்று;
வ்யானன் – செய்கைகளை இயக்கும் காற்று.
ஏழு தாதுக்கள்
ரசம், ரத்தம், மாமிசம், கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, விந்து.
ஐந்து போர்வைகள்
அன்னமய கோசம் – உணவால் ஆனது
ப்ராண மய கோசம் – காற்றால் ஆனது;
மனோ மய கோசம் – மனதால் ஆனது
விஞ்ஞான மய கோசம் – அனுபவத்தால் ஆனது
ஆனந்த மய கோசம் – இன்பத்தால் ஆனது
“ஸ்ரீ குரு கிருபா விலாஸம்”
ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதீ மகாஸ்வாமிகள் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் 34ஆவது பீடாதிபதியாக விளங்கிய ஜீவன் முக்தர். சித்த புருஷர். அவரை நேரில் தரிசனம் செய்தவர்கள் பாக்கியவான்கள். அப்படி ஒரு பக்தர் “குருபாதஹிருதயன்” என்பவர். அவர் ஸ்ரீ மகாசன்னிதானம் அவர்களை தரிசனம் செய்த பொழுது தனக்கு அருளிய உபதேச விபரங்களை “ஸ்ரீ குருகிருபா விலாஸம்” என்ற புத்தகத்தின் மூன்றாம் பாகத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். அதிலிருந்து ஒரு சிறிய பகுதியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
என் பையனையும், என்னையும் பார்த்து, உபதேசம்:
“இவனுக்கு அன்ன வஸ்திரம் அளித்து வித்யாப்யாஸம் முதலியன செயவிக்கிறாய் அல்லவா? இவன் உன்புத்திரன் என்ற வாஞ்சையை மறந்து விட்டு சிவேஸ்வரனே உன் பூஜையைப் பெற்றுக் கொள்ள உன் புத்திரனாக வந்திருக்கிறான் என்ற பாவத்தை விருத்தி செய்து கொள்வது தான் உசிதம். புத்திர வாஞ்சை பந்தத்தை ஏற்படுத்தும், ஈஸ்வர ஸ்வரூபம் என்ற எண்ணமோ விடுதலையையும், சிரேயஸ்யையும் கொடுக்கும்.”

ஸ்ர்வாத்மபாவதில் இருந்து அருளிய உபதேசம் அல்லவா இது. பிறகு என்னைத் தனியே அழைத்துச் சொன்னதாவது,” பரமத கண்டனம் தவறு; ஒருபோதும் செய்யாதே. அது ஆத்ம குணத்திற்கு விரோதம்”. சில மாதங்களுக்கு முன் ஒரு கிருஸ்தவ குருவுடன் நான் வாதாடியது என் ஞாபகத்திற்கு வந்தது. என் மனம் திருந்தியது. மற்றும் அவர்கள் சொன்னதாவது: ” அத்வைத ஞானம் கடினம். பல சமயங்கள் வெளிப்படையாக போதிக்காது. ஈஸ்வர கைங்கரியம், சரணாகதி, ப்ரபக்தி முதலியவைகள் மேலான சாதனங்கள். இவைகளை மட்டும் பல சமயங்கள் போதிக்கின்றன.” பிறகு ஆச்சர்யகரமான சில போதனைகளைச் செய்தார்கள்.
” நாம் பேசும் பாஷையில் – ஆங்கிலத்தில் கூட – அத்வைத பாவம் விளங்குகிறது. I (நான்) என்ற ஆங்கிலப் பதத்தை எடுத்துக் கொள். என்னை I (நான்) என்று சொல்கிறேன். நீ என்னை YOU (நீ) என்று சொல்கிறாய். அங்குள்ள ஒருவன் என்னை HE (அவன்) என்று சொல்கிறான். நான் I தான்; HE, YOU அல்ல. HE (அவன்), YOU (நீ) என்பது நாமபேதம். உள்ள வஸ்து I (நான்) தான். இவ்விதமே நான் என்னை I என்று சொல்வது போலவே, நீயும் உன்னை I என்றுதான் சொல்வாய். அவனும் தன்னை I என்றுதான் சொல்வான். எல்லோரும் I தான். HE, YOU என்று வியவகரிப்பதெல்லாம் நாமரூப பேதமே. I அதாவது ஆத்மா ஒன்றுதான். எல்லோரும் அந்த ஒரே ஆத்மாதான். I ஆகிய நான், ஒருவனுக்கு HE ஆகவும், மற்றொருவனுக்கு YOU ஆகவும் காட்சி அளிக்கிறேன். மற்றொரு விதமாயும் பார்க்கவும். WE (நாங்கள்) என்ற பன்மைச் சொல் என்ன? I (நான்) + I + I என்று சொல்லலாமா? முடியவே மடியாது. I (நான்) + YOU (நீ) + HE (அவன்) முதலியவை சேர்ந்தால் தான் WE (நாங்கள்) என்ற பன்மை வரும். Iக்கு பன்மை கிடையாது. ஆத்மாவுக்குப் பன்மை கிடையாது. ஆத்மா விளங்கும் நாமரூபங்களுக்குத்தான் பன்மை. இவை தோற்றங்களே. உண்மை I என்பதே. அது ஆத்மாவே.”
என்ன அற்புதமான உபதேசம். ஆழ்ந்த சமாதி நிஷ்டையில் இருந்து வந்த குருநாதர் பேசியதல்லவா ! இதை வாசிக்கும் நேயர்களுக்கு ஒரு பிரார்த்தனை. ஸ்ரீ மகாசன்னிதானம் உங்கள் ஒவ்வொருவரின் முன்னின்று பேசுவதுபோல் பாவனை செய்து கொள்ளுங்கள். என்னை மறந்து விடுங்கள். நான் நிமித்த மாத்திரம்.
(ஸ்ரீ குருகிருபா விலாஸம் மூன்றாம் பாகம் புத்தகத்தில் இருந்து பகிரப்பட்டது)
(வித்யையும் விநயமும் தொடரும் – )


