இந்திய அணியுடனான தோல்விக்குப் பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் அந்த நாட்டு மக்களைப் பார்த்து, எங்களை கேவலமாக திட்டாதீர்கள் ப்ளீஸ் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். பாகிஸ்தான் வேகப் பந்து வீச்சாளர் மொஹம்மத் ஆமீர் ரசிகர்களிடம் விடுத்த வேண்டுகோளில், வீரர்களைக் கேவலமாகத் திட்டாதீர்கள் என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான் அணி இந்த உலகக்கோப்பையில் மிக மோசமாக விளையாடியது. இதை அடுத்து அந்த அணியின் கேப்டன் சர்பராஸ் அகமது சக வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

உலகக் கோப்பைத் தொடரில் மிகவும் எதிர் பார்க்கப்பட்ட போட்டியான இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய அணி அபாரமாக ஆடி 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வெற்றி கொண்டது. இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பை ஆட்டங்களில் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்ற சாதனையை இந்தியா தக்க வைத்துள்ளது.

இதன் மூலம் தொடர்ந்து 7 முறையாக உலகக் கோப்பைப் போட்டிகளில் பாகிஸ்தானை வென்றுள்ளது இந்திய அணி. இந்த வெற்றியால் பாகிஸ்தான் அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்திய அணியுடனான தோல்வி மட்டுமல்லாமல் இந்த தொடர் முழுவதுமே மோசமாக விளையாடிய பாகிஸ்தான் 9 ஆவது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 4 போட்டிகளில் வென்றாலும் அந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெறுவது கடினம்தான் என்று கூறப் படுகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது பாகிஸ்தான் இணையதளம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் ‘இது போல மோசமாக விளையாடினால் மக்கள் நம்மை நாட்டுக்குள் விடமாட்டார்கள். மோசமான விளையாட்டைக் கைவிட்டு நாம் சிறப்பான ஆட்டத்தை விளையாட வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் பாகிஸ்தான் அணி மோசமாக தோல்வி அடைந்த போது நேரடியாக பாகிஸ்தானுக்கு செல்லாமல் வெளிநாடுகளில் தங்கி பின்னர் தாமதமாக ஒவ்வொருவராகத்தான் பாகிஸ்தான் திரும்பினர்.

இந்நிலையில் தற்போதும் அதே சூழல் எழுந்தால் பிரச்னை என்று குறிப்பிட்டுள்ளார் சர்ப்ராஸ். அதே நேரம் ஆல் ரவுண்டரான ஷோயப் மாலிக் குறிப்பிடுகையில், வீரர்களின் குடும்பங்களை தொடர் விமர்சனங்களில் இருந்து தள்ளி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளனர் பாகிஸ்தான் அணி வீரர்கள். முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் கூறுகையில், பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ஃப்ராஸ் அகமத் கேப்டன்ஸி ஒரு மூளைகெட்ட தனமாக உள்ளது என்று சாடியுள்ளார்.

ஷோயப் மாலிக் டக் அவுட் ஆன போது, இந்திய டென்னிஸ் வீராங்கனையும் ஷோயப்பின் மனைவியுமான சானியா மிர்ஸாவுடன் இரவில் வலம் வந்த வீடியோ புயல் போன்று சுழன்றடித்து வைரலானது. தொடர்ந்து மாலிக் ஒரு டிவீட் செய்தார். முன்னாள் வீரர்களான மொஹம்மத் யுசுப் உள்ளிட்டோர், ஷோயப் மாலிக் இந்த உலகக் கோப்பையுடன் ஓய்வு பெறுவது நல்லது என்று காட்டமுடன் விமர்சித்துள்ளனர்.

பாகிஸ்தான் தனது அடுத்த போட்டியில் ஜூன் 23 அன்று தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...