மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் உள்ள பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவா அமைப்புக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. இது இந்தியா மேற்கொண்ட சர்வதேச நெருக்கடிக்கு பாகிஸ்தான் அரசு பணிந்ததைக் காட்டுவதாகக் கூறப் படுகிறது. இது இந்தியாவுக்குக் கிடைத்த முதல் வெற்றியாகக் கருதப் படுகிறது.

2008 நவ.26ஆம் தேதியை இந்தியர்கள் எவரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அரபிக் கடல் வழியாக மும்பைக்குள் ஊடுருவிய பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் பத்து பேர், பல இடங்களில் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி 18 போலீசார் உட்பட 166 பேரைக் கொன்றனர். இந்தத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவா என்ற அமைப்பு. இந்தத் தாக்குதல் குறித்த ஆதாரங்களை இந்தியா பாகிஸ்தானிடம் வழங்கிய போதும், இதுவரை அந்த அமைப்பின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.

இந்நிலையில் காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு, பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ மொஹம்மத் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. ஆயினும், இந்தியாவிடம் இந்த அமைப்புதான் இதைச் செய்தது என்ற ஆதாரங்களைத் தரும்படி பாகிஸ்தான் இந்தியாவைக் கேட்டுக் கொண்டது. ஆனால், அதற்கான ஆதாரங்களைத் தரமுடியாது என்று இந்தியா மறுத்துவிட்டது. இந்தத் தாக்குதலை தாங்கள் தான் செய்தோம் என்று ஜெய்ஷ் இ மொஹம்மத் கூறிய நிலையில், ஆதாரங்களைத் தருமாறு பாகிஸ்தான் இந்தியாவிடம் கேட்டது நகைப்புக்குரியது என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இதை அடுத்து, அந்த அமைப்பை தனது மண்ணில் இருந்து சுதந்திரமாக செயல்படும்படி செய்து, உதவிகள் புரிந்து வரும் பாகிஸ்தான் அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலக நாடுகளை பிரதமர் மோடி வலியுறுத்தினார். இதனால் சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்கு நெருக்கடி முற்றியது. மேலும், இது போன்ற பயங்கரவாத அமைப்புகள் தங்களது மண்ணில் இருந்து செயல்படுவதை பாகிஸ்தான் உடனடியாகத் தடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானை உலக நாடுகள் நெருக்கின.

இதை அடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் தேசிய பாதுகாப்புக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் ஜமாத் உத் தவா அமைப்புக்கு தடை விதிக்கவும், அந்த அமைப்பின் அறக்கட்டளையான பலாஹ்-இ- இன்சானியாத் ஃபௌண்டேஷனுக்கு தடை விதிக்கவும் முடிவு செய்யப் பட்டது.

இருப்பினும் ஜெய்ஷ் இ மொஹம்மத் அமைப்புக்கான தடை குறித்து எந்தத் தகவலும் இல்லை.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...