
கட்டுரை: பி.எஸ். நரேந்திரன்
இந்திய, கத்தாரிய பிரச்சினை சிக்கலானது….
இந்திய, கத்தாரிய பிரச்சினை சிக்கலானது. இதன் பின்னனியில் இந்தியாவிற்கு எதிரான, இந்தியாவின் வளர்ச்சியில் வயிறெரிகிற அத்தனை நாடுகளும் இணைந்திருக்கிறார்கள் என்பதினைப் புரிந்து கொள்வது அவசியம். சீனா, கனடா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் ஈரானும் இணைந்திருக்கிறது. அதற்கெல்லாம் மேலாக அமெரிக்காவிலிருக்கும் இந்திய எதிர்ப்புக் குழுவும் அதில் உண்டு. கனடாவுடனான பிரச்சினையும், கத்தார் துவக்கியிருக்கும் பிரச்சினையும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை. அதில் உள்நாட்டு துரோகிகளும் ஒன்றிணைந்திருக்கிறார்கள். அவர்களின் ஒரே நோக்கம் எப்படியாவது மோடியைப் பதவியிலிருந்து நீக்குவது. இந்தியாவின் வளர்ச்சியைத் தடுப்பது போன்றவைதான்.
வளைகுடா பணக்கார இஸ்லாமிய நாடுகள் தீவிரவாதிகளை ஆதரிப்பது குறைந்துவிட்ட அதேவேளையில் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு அடைகலமும் கொடுத்து, அவர்களுக்குத் தேவையான பணத்தையும் கத்தார் அள்ளிக் கொடுக்கிறது. இன்றைக்கு இஸ்ரேலில் நடக்கும் பிரச்சினையிலும் கத்தாரின் பங்கு மிக அதிகம். இஸ்ரேலில் படுகொலைகள் புரிந்த ஹமாஸ் அமைப்பிற்கு கத்தார் பல பில்லியன் டாலர்களைக் கொடுத்திருக்கிறது. இது அத்தனையையும் கத்தார் வெளிப்படையாகவே செய்கிறது. அதனை எந்த நாடும், அமெரிக்கா உட்பட, தட்டிக் கேட்கப் போவதில்லை என்பது கத்தாருக்கு நன்றாகவே தெரியும். ஏனென்றால் கத்தாரில்தான் அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவதளம் அமைந்திருக்கிறது. அமெரிக்கா வாயைத் திறந்தால் கத்தார் அவர்களை அங்கிருந்து வெளியேற்றிவிட்டு சீனாவை உட்காரவைத்துவிடும்.
உலக நாடுகள் சின்னஞ்சிறிய கத்தாரை எதிர்க்க அஞ்சுவதற்குக் காரணம் கத்தாரில் நிறைந்துகிடைக்கும் இயற்கை எரிவாயுதான். இன்றைய உலகிற்குத் தேவையான 70 சதவீத இயற்கை எரிவாயுவை கத்தார்தான் ஏற்றுமதி செய்கிறது. அந்த எரிவாயு ஏற்றுமதி நின்றுபோனால் பல நாடுகளில், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் வாழுவதே சிரமமான காரியமாக முடிந்துவிடும். கடுமையான குளிர்காலங்களையும், உறைபனிக் காலங்களையும் கொண்ட ஐரோப்பிய நாடுகள் தங்களின் வீடுகளையும், அலுவலகங்களையும் இயற்கை எரிவாயுவின் உதவியால் சூடுபடுத்திக் கொண்டாகவேண்டும், இல்லாவிட்டால் விறைத்துச் செத்துப்போவார்கள்.
உக்ரேனிய, ரஷ்யப் போர் துவங்குவதற்கு முன்னால் ஐரோப்பா தனக்குத் தேவையான இயற்கை எரிவாயுவின் பெரும்பகுதியை ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்து கொண்டிருந்தது. கடலின் அடியில் போடப்பட்ட ராட்சத குழாய்களின் மூலமாக எரிவாயுவை ரஷ்யா ஐரோப்பிய நாடுகளுக்கு சப்ளை செய்து கொண்டிருந்தது. அந்தக் குழாய்களை “யாரோ(!)” வெடிவைத்துத் தகர்த்துவிட்டார்கள். எனவே ஐரோப்பாவிற்குக் கத்தாரை விட்டால் வேறு வழியில்லை. கத்தார் என்ன செய்தாலும் ஐரோப்பாவிலிருந்து ஒரு முக்கல் முனகல் கூட எழும்பாது.
அதற்கும் மேலாக நேற்றுவரையில் தாங்கள் சொல்வதனைக் கேட்டு வாய்மூடிக் கிடந்த இந்தியாவின் வளர்ச்சி அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற, வெள்ளையின வெறிகொண்ட ஆங்கிலோ சாக்ஸன் நாடுகளை எரிச்சலடைய வைத்திருக்கிறது. இந்தியாவிற்குப் பலவழிகளிலும் தொல்லை கொடுக்க இந்த நாடுகள் முயன்றுகொண்டே இருக்கின்றன. எனவே கத்தார், இந்திய மோதலைத் தூண்டிவிட்டுக் கொண்டும் இருக்கிறார்கள்.
இந்தியாக்குத் தேவையான இயற்கை எரிவாயுவில் 40 சதவீதம் கத்தாரில் இருந்துமட்டுமே இறக்குமதி செய்யப்படுகிறது. கத்தாரின் போக்கு பிடிக்காத இந்தியா அதனைக் குறைக்க பலவழிகளிலும் முயன்று கொண்டிருக்கிறது. சமீபத்தில் தான்ஸானியா போன்ற நாடுகளில் இருந்து இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் ஒப்பந்தம் ஒன்றை இந்தியா செய்திருக்கிறது. இதன் மூலமாக கத்தாரிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிற இயற்கை வாயுவின் அளவு 20 சதவீதமாகக் குறையும் என்பதால் கத்தார் எரிச்சலில் இருக்கிறது. அனேகமாக அடுத்த பத்தாண்டுகளில் எரிவாயுவிற்காக கத்தாரை சார்ந்திருப்பதனை முற்றிலுமாக இந்தியா நிறுத்திவிடுவதற்கான வாய்ப்பிருக்கிறது.
வெறும் 60 இலட்சம் மக்கள்தொகை கொண்ட கத்தாரிடம் இயற்கை எரிவாயு ஏற்றுமதி மூலமாகப் பல நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் குவிந்துகிடக்கிறது. அதன் தினப்படி வருமானமே பல மில்லியன் டாலர்கள் என்கிற நிலையில் கத்தாரிகளின் தலைக்கனம் புரிந்துகொள்ளக் கூடியதுதான். இதன் காரணமாகவே சாதாரண கத்தாரி தலைக்கனம் கொண்டவனாக இருக்கிறான். சாதாரண கத்தாரியே அப்படியென்றால் அவனை ஆள்பவனின் தலைக்கனம் எப்படி இருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
கத்தாரிகளினுடன் எனக்கே கசப்பான அனுபவங்கள் உண்டு. கத்தார் ஏர்லைன்ஸில் பயணம் செய்கைகள் அவர்களுடன் மோதிய அனுபவத்தை ஆங்கிலத்தில் பதிவு செய்தது நினைவுக்கு வருகிறது (The retards of Qatar Airways). வேலைவெட்டி இல்லாதவர்கள் அதனைத் தேடிப்படிக்கலாம்!
இப்போது வெடித்திருக்கும் முன்னாள் இந்திய கப்பல்படையினரின் பிரச்சினைக்கு வருவோம்.
கத்தாரின் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த முன்னால் கப்பல்படையினர் 8 பேர்கள் தங்களை உளவு பார்த்ததாகவும், அதன் காரணமாக அவர்களுக்கு மரண தண்டனை அளிப்பதாகவும் கத்தார் அரசு சொல்லியிருக்கிறது. அது முற்றிலும் பொய்யானது என்பதனை அந்த விவரங்களைப் படிக்கிற எவராலாலும் எளிதாகப் புரிந்துகொள்ள இயலும். முதலில் அந்த 8 இந்திய கப்பல்படையினரும் கத்தாரில் பணிபுரியவில்லை. அவர்கள் மேற்படி நிறுவனத்திற்காக சிங்கப்பூரில் இருந்து வேலை செய்து கொண்டிருந்தார்கள். திடீரென அவர்களைக் கத்தாருக்கு வரவழைத்துக் கைது செய்திருக்கிறார்கள் என்று பார்க்கையில் இது எத்தனைபெரிய ஃப்ராடுத்தனம் என்பது புரியும்.
அதன் பின்னனியில் பாகிஸ்தானியர்கள் இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. வளைகுடா நாடுகள் அனைத்திலும் பாகிஸ்தானிய முன்னால் ராணுவத்தினரும், ஐ.எஸ்.ஐ.யும் நிறைந்து கிடக்கிறார்கள். சவூதி அரச குடும்பத்துப் பாதுகாவலர்களும் பாகிஸ்தானிகள்தான். கத்தாரின் அத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கையாள்பவர்களும் பாகிஸ்தானிகள்தான். அதுவேதான் பிற வளைகுடா நாடுகளிலும். எனவே இந்தியக் கப்பல்படையினர் கைதில் பாகிஸ்தானியர்களின் தூண்டுதல் இருக்கிறது. இதுபோலவே கனடாவிலும் முன்னாள் பாகிஸ்தானிய ராணுவத்தினர் குவிந்து கிடக்கிறார்கள். கனடாவை மறைமுகமாக ஆட்டுவிப்பதும், காலிஸ்தானிகளை வளர்த்துவிடுவதும் அவர்கள்தான்.
இப்படிப் பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்து இந்திய கப்பல்படையினரைக் கத்தாரிகள் கொல்வார்களா? அப்படிக் கொன்றால் என்ன நடக்கும்?
எனக்கென்னவோ கத்தாரிகள் அப்படிச் செய்யமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். அப்படிச் செய்தால் அதுவொரு மாபெரும் வரலாற்றுத் தவறாக இருக்கும். தேசப்பற்றுள்ள எந்த இந்தியனும், இந்திய ஆட்சியாளனும் இதனை மன்னிக்கவே மாட்டான் என்பது கத்தாரிகளுக்கும் நன்றாகவே தெரியும். இந்தியா இஸ்ரேலிகளுக்கு அளிக்கும் ஆதரவை விலக்கிக் கொள்ளவேண்டும், பிற நாடுகளில் இருந்து இயற்கை எரிவாயு வாங்குவதனை செய்யக்கூடாது என மறைமுகமாக மிரட்டுவதற்காக கத்தாரிகள் இதனைச் செய்கிறார்கள் என்று எண்ண இடமிருக்கிறது. முன்பே சொன்ன சீன, பாகிஸ்தானிய, கனேடிய, அமெரிக்க நாடுகளும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
இந்தியாவின் வேண்டுகோளை உதாசீனப்படுத்திவிட்டு கத்தாரிகள் மேற்படி இந்தியர்களைக் கொன்றால் என்ன நடக்கும்?
கத்தார் தனது அன்றாடச் செயல்பாடுகளுக்காக, உணவுக்காக இந்தியாவை எதிர்பார்த்து இருக்கும் ஒரு நாடு. அவர்களிடம் பணம் இருக்கலாம். ஆனால் தின்பதற்குச் சோறு வெளியில் இருந்துதான் வந்தாகவேண்டும். அதுவும் இந்தியாவிலிருந்துதான் வந்தாகவேண்டும் என்பதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கத்தாரிகளுக்குத் தேவையான அரிசியும், கோதுமையும், காய்கறிகளும், இறைச்சியும் இந்தியாவிலிருந்தே இறக்குமதியாகிறது. அதை நிறுத்தினால் கத்தாரி கதற ஆரம்பித்துவிடுவான். இன்றைய நிலைமையில் வேறெந்த நாட்டிலிருந்தும் இத்தகைய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வது கடினம். சீனாவிலும் உணவுக்குப் பற்றாக்குறை, பாகிஸ்தானோ பட்டினி கிடக்கிறது, அமெரிக்காவுக்கும் இந்தியாதான் அரிசி கொடுத்தாக வேண்டும் என்கிற நிலைமையில் கத்தாரிகளின் அன்றாடப் பிழைப்பு நாறிவிடும்.
அதற்கும் மேலாக கத்தாரில் 6 இலட்சம் இந்தியர்கள் பணிபுரிகிறார்கள். கத்தாரின் ஒவ்வொரு அலுவலகமும் இந்தியர்களை நம்பி இருக்கிறது. ஏறக்குறைய 500 இந்திய நிறுவனங்கள் கத்தாரில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் அனைவரும் இந்தியாவிற்குத் திரும்பினால் கத்தாரின் நிலை என்னவாகும் என்பதை நீங்களே யோசித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.