பொதுத்தேர்வு: மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தேர்வுத்துறை தந்த அதிர்ச்சி!

கல்வி தமிழகம் பொது தகவல்கள்
08 July27 exam time table - 2026

தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் ப்ளூ பிரிண்ட் இல்லாமல், எங்கிருந்து வேண்டுமானாலும் கேள்விகள் கேட்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஆண்டு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பாண்டிற்கான தேர்வு மார்ச் முதல் வாரம் தொடங்கவுள்ள நிலையில்,பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு அடுத்த வாரத்தில் செய்முறை தேர்வு நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளில் அரசு தேர்வுகள் இயக்ககம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. வழக்கமாக,எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்திற்கும் வினாத்தாள் கட்டமைப்பு (ப்ளூ பிரிண்ட்) வெளியிடப்படும்.

ஆனால்,புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர், அதுபோன்று எதுவும் வெளியாகவில்லை. இதனால்,எந்த அடிப்படையில் வினாத்தாள் அமையும் என தெரியாமல் ஆசிரியர்கள் குழப்பமடைந்தனர்.

இந்நிலையில், எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 என மூன்று வகுப்புகளுக்கும் ப்ளூபிரிண்ட் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் உஷாராணி, சிஇஓக்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏற்கனவே, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு,ப்ளூ பிரிண்ட் இல்லாத நிலையில்,புத்தகத்தின் உள்பகுதியில் இருந்தும்,பாடம் சார்ந்தும் வினாக்கள் கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

school - 2026

நடப்பாண்டு 10ம் வகுப்பிற்கும் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால்,அந்த மாணவர்களுக்கும் ப்ளூ பிரிண்ட் இல்லை.சென்ற ஆண்டு தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையிலேயே, 10ம் வகுப்பு மாணவர்கள் புத்தகம் முழுவதும் படித்து, புரிந்து கொண்டு வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில், ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க வேண்டும்.

மேலும்,ப்ளூபிரிண்ட் இல்லை என்பதால்,எந்த வினாக்கள்,எந்த பாடத்திலிருந்தும், எந்த வகையிலும்,கேட்கப்படலாம். மாதிரி வினாத்தாள் என்பது, வினாத்தாள் வடிவமைப்பான பகுதி மற்றும் பிரிவுகள்,மதிப்பெண் ஒதுக்கீடு பற்றி மாணவர்களும், ஆசிரியர்களும் அறிந்து கொள்வதற்காகவே.
மாறாக, மாதிரி வினாத்தாளில் கேட்கப்பட்டுள்ள பொருத்துக, கோடிட்ட இடங்களை நிரப்புக, தலைப்பு வினாக்கள், வரைபட வினாக்கள், வடிவியல் வினாக்கள் போன்று,கேட்கப்பட வேண்டிய கட்டாயமில்லை.

ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மதிப்பெண் ஒதுக்கீட்டில் மாற்றம் இருக்காது. அதேசமயம்,வினாக்கள் எந்த வடிவத்திலும் இருக்கும். ப்ளூபிரிண்ட் தேவையில்லை என்பது அரசின் கொள்கை முடிவாகும். எனவே,மாதிரி வினாத்தாளில் உள்ளபடி வினாக்கள் கேட்கப்படவில்லை என மாணவர்களும், ஆசிரியர்களும் உரிமை கோர முடியாது,என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுத்துறையின் இந்த அறிவிப்பால், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில்,”புதிய பாடத்திட்டத்தில்,ஏராளமான பகுதிகள் உள்ளன.

இவற்றை முழுமையாக படிப்பது என்பது 10ம் வகுப்பு மாணவர்களால் முடியாத காரியம். ஆனால்,எங்கிருந்து வேண்டுமானாலும் கேள்வி வரும் என்பது,அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

இதனால், சென்டம் எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை பலமடங்கு சரியும். அதேசமயம், மெல்ல கற்கும் மாணவர்களை பொறுத்தவரை 50 சதவீத பகுதிகளை மட்டுமே படிப்பார்கள். அவர்களை தேர்ச்சி பெற வைக்க, ப்ளூபிரிண்ட் தான் வழிகாட்டியாக இருக்கும்.

தற்போது ப்ளூபிரிண்ட் இல்லை என்றால், அவர்களால் தேர்ச்சி பெறமுடியாத நிலை ஏற்படும். எனவே, மெல்ல கற்கும் மாணவர்களை கருத்தில் கொண்டு,50 சதவீதம் ப்ளூபிரிண்ட் அடிப்படையிலும், 50 சதவீதம் பொதுவாகவும் கேட்கலாம்,” என்றனர்.

ப்ளூபிரிண்ட் ரத்தால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படும் என ஆசிரியர்கள் அச்சமடைந்துள்ளனர். அதேசமயம், எல்லாம் கம்ப்யூட்டர் ஜி பார்த்துக்கொள்வார்’என ஆசிரியர்கள் பரவலாக பேசி வருகின்றனர்.அதாவது,கடந்த ஆண்டு விடைத்தாள் மதிப்பீடு செய்யும் போதே,பல்வேறு பாடங்களில் மாணவர்கள் தேர்ச்சியடையவில்லை.

இதனால்,ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் சரியும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால்,ஆசிரியர்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக,வழக்கம்போலவே தேர்ச்சி விகிதம் அதிகரித்திருந்து. இதனால்,நடப்பாண்டு 10ம் வகுப்பிற்கு புதிய பாடத்திட்டம் என்பதை கருத்தில் கொண்டு,’கம்ப்யூட்டர் ஜி’ தேர்ச்சி விகிதத்தை பார்த்துக்கொள்வார் என ஆசிரியர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.