மாநில வளர்ச்சி, மக்களின் முன்னேற்றம்: யோகிக்கு கிடைத்த நம்பிக்கை வெற்றி!

Published:

yogi - 2026
yogi and twitter 1

சாதி அரசியல் புரையோடிப்போயுள்ள உத்தரப் பிரதேச மாநிலத்தில், உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு உ.பி., மக்கள் நம்பிக்கையுடன் கூடிய அங்கீகாரத்தை மீண்டும் அளித்துள்ளதைக் காட்டுகிறது.  

உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ளது பாஜக.,! காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகளின் கோட்டைகளாகக் கருதப்படும் ரேபரேலி, அமேதி, மெயின்புரி என அத்தனையும் இப்போது பாஜக.,வின் வசமாகிவிட்டது. மக்களை எத்தனை காலத்துக்கு பொய்களையும் குடும்பப் பெருமையும் கூறி அறியாமையில் வைத்திருக்க முடியும் என்ற கேள்விகளை காங்கிரஸுக்கு மக்கள் தங்கள் வாக்குகளின் மூலம் தட்டிக் கேட்டுள்ளனர். 

உத்தரப் பிரதேச மாநிலத்தில்,  அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. உ.பி.யில் சாதி ரீதியாகக் கட்சிகளை உருவாக்கி வளர்த்து அவ்வப்போது ஆண்டு வந்த அனைத்துக் கட்சிகளும் மீண்டும் உ.பி.யைப் பிடிக்க ஒருவாறு அலைந்து வருகின்றன. அதன் வெளிப்பாடாக, ஆளும் பாஜக அரசு மீது மக்களுக்கு கடும் அதிருப்தி இருப்பது போல் ஊடக பலத்தில் ஒரு மாயையை உருவாக்கவே முயன்றுள்ளன என்பதை, இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியிருக்கின்றன. 

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

உள்ளாட்சி அமைப்புகளில் ஒன்றான மாவட்ட தலைவர் எனப்படும் ஜில்லா பஞ்சாயத்து தலைவர் தேர்தல்கள் நடத்தப்பட்டன. மொத்தம் 75 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. சட்டசபைத் தேர்தலை குறிவைத்துள்ளதால், இந்தத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடவில்லை.

பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் களத்தில் நின்றன. சில இடங்களில் காங்கிரஸும் சமாஜ்வாதி கட்சியும் பொதுவேட்பாளர்களை நிறுத்தின. ஆனால் பாஜகவும் அதன் கூட்டணி கட்சியும் மொத்தம் 67 இடங்களைக் கைப்பற்றி உள்ளன. சமாஜ்வாதி கட்சிக்கு 5 இடங்கள்தான் கிடைத்தன. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை.

சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம்சிங் யாதவின் சொந்த லோக்சபா தொகுதி மெயின்புரி. கடந்த 30 ஆண்டுகளாக ஜில்லா பஞ்சாயத்து தலைவர் பதவி சமாஜ்வாதி கட்சி வசம்தான் இருந்தது. ஆனால் இம்முறை சமாஜ்வாதி கட்சியின் கோட்டையான மெயின்புரியை பாஜக., கைப்பற்றிவிட்டது.

காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதிகள் என கூறப்படும் அமேதி, ரேபரேலி ஆகிய தொகுதிகளும்  இப்போது பாஜக வசமாகிவிட்டன. இத்தனைக்கும் அமேதியில் சமாஜ்வாதி கட்சிக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தாமல் ஆதரவு தெரிவித்தது. ஆனாலும் சமாஜ்வாதி கட்சியால் பாஜக.,வுக்கு எதிராக வெற்றி பெற முடியாமல் போய் விட்டது. சமாஜ்வாதி கட்சி வலிமையாக இருக்கக் கூடிய கன்னோஜ், ஃபிரோசாபாத் ஆகிய இடங்களிலும் கூட பாஜக., வெற்றி பெற்றுள்ளது.    

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!
yogi
yogi

குடும்பப் பாரம்பரியம், வாரிசு என்றெல்லாம் சொல்லிக் கொண்டு மக்களை வெகு காலத்துக்கு அடிமைகளாகவே வைத்திருக்க முடியாது என்று காட்டும் வகையில், இந்திராவின் பேத்தி, சோனியாவின் மகள் பிரியங்காவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவே காங்கிரஸ்காரர்களும் பெருமூச்சு விடுகின்றனர்.

என்னதான் அதிரடி முடிவுகள் எடுத்தாலும், ஓட்டு அரசியலைக் குறிவைத்து இயங்காமல் நேர்மையாக ஆட்சி செய்தாலும், மக்கள் அதனை விரும்பி ஆதரவு அளிப்பார்கள் என்பதற்கு, யோகி ஆதித்யநாத் ஓர் உதாரணத்தைக் காட்டி விட்டார். கொரோனா போன்ற இந்தப் பேரிடர்க் காலமான கடினமான கால கட்டத்திலும் கூட,  மாநில வளர்ச்சியும், மக்களின் முன்னேற்றமுமே ஆட்சி செய்பவர்களுக்கு நம்பிக்கை அளித்து, ஆளும் அங்கீகாரத்தைக் கொடுக்கும் என்பதைக் காட்டி, தாங்கள் அறிவு உள்ளவர்கள் என்று அழுத்தந்திருத்தமாகச் சொல்லியிருக்கின்றனர் உ.பி., மக்கள்!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img