தலைமறைவான நீதிபதி கர்ணனைக் கைது செய்ய வலை வீசித் தேடும் மேற்கு வங்க போலீஸ்!

Published:

சென்னை:

கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மேற்கு வங்க போலீசுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவு வெளியான தகவலை அடுத்து, கொல்கத்தாவில் இருந்த நீதிபதி கர்ணன் சென்னை வந்தார். சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்த அவர், உச்ச நீதிமன்ற உத்தரவு தொடர்பாக மூத்த வக்கீல்களுடன் செல்போன் மூலம் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். பின்னர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தனக்கு அநீதி இழைத்து விட்டதாக குடியரசுத் தலைவர், தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் உள்ளிட்டோருக்கு மனு அனுப்பினாராம்.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த மேற்கு வங்க போலீஸ் டி.ஜி.பி. சுரஜித்கர் புர்கயஷா மற்றும் போலீஸ் அதிகாரிகள் சுக்மால் காந்திதாஸ், ராஜ் கனோஜியா, ரன்பீர்குமார், சுதாகர் ஆகியோர் விமானம் மூலம் நேற்று சென்னை வந்தனர். பின்னர் மேற்கு வங்க டி.ஜி.பி., பகல் 12 மணிக்கு போலீஸ் கமி‌ஷனர் கரன்சின்காவை சந்தித்து சுமார் ½ மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

இதனிடையே தன்னை கைது செய்ய மேற்கு வங்க போலீசார் வருவதை அறிந்த நீதிபதி கர்ணன், சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து வெளியேற முடிவு செய்தார். அதன்படி நேற்று அதிகாலை 5 மணிக்கு அறையில் இருந்து வெளியேறிய அவர், வாக்கிங் சென்று விட்டு வருவதாக தனது பாதுகாவலர்களிடம் கூறினாராம். அதற்கு அவர்கள், தாங்களும் உடன் வருவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் மறுத்த நீதிபதி கர்ணன், தன்னுடன் யாரும் வர வேண்டாம் என்றும், தான் மட்டும் சென்று வருவதாகவும் கூறிச் சென்றுள்ளார். ஆனால் அதன் பின்னர் அவர் தன் அறைக்கு திரும்பி வரவில்லை. இந்நிலையில் அவர், தன்னுடன் தங்கி இருந்த மதுரையைச் சேர்ந்த வக்கீல் ஒருவருடன் காரில் தலைமறைவானது தெரியவந்தது.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

பரபரப்பான இந்தச் சூழலில், பாதுகாவலர்களை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய கர்ணன், தான் காளஹஸ்தி செல்வதாகக் கூறி உள்ளார். இருப்பினும் அவர் திரும்பவில்லை. இந்நிலையில் அவர் தமிழகத்தில் எங்காவது பதுங்கி இருந்தால் அவரை கைது செய்ய தேவையான உதவிகளை செய்யும்படி மேற்கு வங்க போலீஸ் அதிகாரிகள் சென்னை போலீஸ் கமி‌ஷனரிடம் கேட்டுக்கொண்டனர். அதன்படி மேற்கு வங்க போலீசாருக்கு உதவி செய்வதற்காக தமிழக போலீஸ் அதிகாரிகள் சிலரை கமி‌ஷனர் நியமித்துள்ளார்.

இந்நிலையில் நீதிபதி கர்ணனைத் தேடி வந்த மேற்கு வங்க போலீஸ் அதிகாரிகள் சென்னை எழும்பூரில் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரிகள் தங்கும் விடுதியில் ஆலோசனை நடத்தினர். தனது பாதுகாவலர்களிடம் காளஹஸ்தி செல்வதாக கூறிச் சென்ற நீதிபதி கர்ணன், உண்மையிலேயே காளஹஸ்திக்குதான் சென்றாரா? அல்லது போலீசாரின் கவனத்தை திசை திருப்ப தனது பாதுகாவலர்களிடம் காளஹஸ்தி செல்வதாக கூறி விட்டுச் சென்றாரா என விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் நீதிபதி கர்ணன், காளஹஸ்தி சென்றதாகத் தெரியவில்லை. இருப்பினும் காளஹஸ்திக்கும் மேற்கு வங்க தனிப்படை போலீசார் சென்றனர். அதேநேரம், தமிழகத்தில் நீதிபதி கர்ணனுக்கு நெருக்கமான நண்பர்கள், உறவினர்களின் வீடுகளை தமிழக போலீசார் உதவியுடன் மேற்கு வங்க போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

இந்நிலையில், நீதிபதி கர்ணன் கடலூர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்துக்கு சென்றிருக்கலாம் என்று கருதி அங்கேயும் தமிழக போலீசார் உதவியுடன் மேற்கு வங்க போலீசார் கண்காணித்து வருகின்றனர். இது உச்ச நீதிமன்ற உத்தரவு என்பதால், விரைந்து செயல்படுத்த வேண்டிய நிலை மேற்கு வங்க போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு வக்கீல்கள் சிலர், நீதிபதி கர்ணனை கைது செய்வதற்கு கண்டனம் தெரிவித்து கோ‌ஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related articles

Recent articles

spot_img