ஸ்ரீசிருங்கேரி ஆசார்யர்களின் வித்யையும் விநயமும் (பகுதி-19)

sringeri bharathi theerthar

ஸ்ரீ சிருங்கேரி ஆசார்யர்களின் வித்யையும் , விநயமும்
– மீ.விசுவநாதன்-

ஸ்ரீ ஆசார்யர்களை அவர் ஞானி, ஜீவன் முக்தர், உலகத்தை மறந்து ஈஸ்வரனுடன் ஒன்றியிருப்பவர், நடப்பது அனைத்தையும் சாட்ச்சியாக மட்டும் பார்த்துக் கொண்டிருப்பவர் என்றெல்லாம் பக்தர்களும் அறிஞர்களும் நிறைய வர்ணித்திருக்கிறார்கள்.

அதெல்லாம் இருக்க “ஆத்மானம் மானுஷம் மன்யே” என்று வால்மீகி முனிவர் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியை வர்ணித்திருப்பது போல ஸ்ரீ ஆசார்யாளும் ஒரு ஒரு சமயத்தில் முற்றிலும் மனுஷ்யராகவே இருந்திருக்கிறார் என்பதற்கும், ஆபத்காலத்தில் எப்படி இன்னொருவரைக் காப்பாற்றுவதற்காக ஓர் உணர்ச்சியுள்ள மனிதராகவே செயல்பட்டிருக்கிறார் என்பதற்கும் கூட ஓர் உண்மைக் கதை இருக்கிறது.

வித்யாரண்யபுரம் சியாமா பட்டரைப் பற்றி ஏற்கெனவே சொல்லப்பட்டது. அவர் ஸ்ரீ ஆசாயர்களின் கூடவே இருந்து தினசர்யைகளில் அவருக்கு உதவுவதற்காக நியமிக்கப் பட்டிருந்த இரு ஊழியர்களில் ஒருவர். அவரது வீடு வித்யாரண்யபுரம் கிராமத்தில் இருந்தது. நரசிம்மவனத்தை வளைத்துக் கொண்டு ஓடும் துங்கா நதியின் மேல்புறத்தில் அந்த கிராமம் இருக்கிறது.

மழைக் காலத்திலும் அதற்குப் பிறகு சில மாதங்களும் நதியில் நீர் அதிகமாகவே ஓடிகொண்டிருக்கும். அதைக் கடந்து நரசிம்மவனத்தை அடைய முதலில் ஒற்றையடிப் பாதை வழியாகவும் வயல் வரப்புகளைக் கடந்தும் சிருங்கேரிக்கு வரவேண்டும். அங்கு மடத்தின் வளாகத்தில் உள்ள ஸ்னான கட்டத்தை அடைந்து அங்கிருந்து சிறு தோணியின் உதவியோடு நதியைக் கடந்து நரசிம்மவனத்தை அடைய வேண்டும். வேறு பாதை கிடையாது.

அன்று ஒரு நாள் சியாமா பட்டருக்கு வீட்டை விட்டு பணிக்குச் செல்ல சற்று கால தாமதமாகி விட்டது. நதியிலும் பிரவாகமாக நீர் ஓடிக் கொண்டிருந்தது. அவர் மடத்தின் படித்துறைக்கு வந்து பார்த்தபோது அங்கு வழக்கமாக இருக்கும் இரு தோணிகளில் ஒன்றைக் கூடக் காணவில்லை. படித்துறையும் வெறிச்சென்று இருந்தது.

“குருக்கள் காத்துக் கொண்டிருப்பாரே” என்று பரபாப்புடன் இங்கும் அங்கும் ஓடிப் பார்த்தார். குரல் கொடுத்தும் பார்த்தார்.

அந்த சமயத்தில் எதிர்க் கரையில் சற்றுக் கீழே இருந்த சந்தியாவந்தன மண்டபத்திற்கு ஸ்ரீ ஆசார்யர்கள் மற்றொரு ஊழியருடன் வந்து விட்டதைப் பார்த்து விட்டார். அவ்வளவுதான். ஒருகணமும் யோசனை செய்யாமல் நதியில் குதித்து நீந்தத் தொடங்கி விட்டார்.

தெற்கே இருந்து கிழக்கே திரும்பும் நீரின் வேகமும் அதில் சுழல்களும் அதிகமாகவே இருந்தன. எப்படியோ நதியின் மத்திய பாகம்வரை நீந்திச் சென்று விட்டால் பிரவாகத்தோடு மிதந்துபோய் சந்தியா வந்தன மண்டபத்தை அடைந்து விடலாம் என்ற குருட்டுத் தைரியம்.

ஆனால் பிரவாகம் அவரை சந்தியாவந்தன மண்டபத்திற்கு வெகு முன்னாலேயே எதிர்க்கரைக்கு அருகில் கொண்டு தள்ளி விட்டது. அங்கு கரை மிகவும் உயரத்தில் இருந்ததால் அதை எட்டிப் பிடிக்க முடியாமல் திணறத் தொடங்கினார்.

அவர் நதியில் குதித்ததில் இருந்து அவரையே மிகவும் கவலையுடன் கவனித்துக் கொண்டிருந்த ஸ்ரீ ஆசார்யர்கள் பதறிப் போய்விட்டார். தம்முடன் வந்த இன்னொரு ஊழியரைப் பார்த்து தம்மையே மறந்தவர் போல உரத்த குரலில் கத்தினார்.

“ஏய்..அதோ பார்! சியாமா வெள்ளத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறான். அவன் உயிருக்கே ஆபத்து. வேகமாக ஓடு. உன் இடுப்பு வேஷ்டியை அவிழ்த்து நன்றாக முறுக்கி அவனிடம் போடு. அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளச் சொல்லு. உன் பக்கத்து நுனியை நீயும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அவனை கரைக்குச் சேர்த்துவிடு. சீக்கிரம் ஓடுடா, ஓடு, ஜாக்கிரதை, ஜாக்கிரதை!” என்று கத்தினார்.

அதுவரை திக்ப்ரமையுடன் நின்று கொண்டிருந்த அந்த ஊழியர் உடனே செயல்பட்டார். சியாமா பட்டரை இப்படி ஒரு நீர்க் கண்டத்தில் இருந்து காப்பாற்றினார் ஸ்ரீ ஆசார்யர்கள்.

இந்த சம்பவம் நடந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு அதே சந்தியாவந்தன மண்டபத்திற்கு அருகேதான் ஸ்ரீ ஆசார்யர்கள் (ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதீ மகாஸ்வாமிகள்) நதியின் பிரவாகத்தில் தம் பூத உடலைத் திரஸ்கரித்தார். தம்மைக் காப்பாற்றுவதற்காக அவர் யாரையும் அறைகூவி அழைக்கவில்லை.

ஒரு ஜீவன் முக்த புருஷர் விதேஹமுக்தி அடையும் போது எப்படித் தோன்றுவார் என்பதை ஸ்ரீ மகாபாரதத்தில் சாந்தி பர்வத்தில் ஸ்ரீ வியாஸர் வர்ணித்துள்ளார்.

“த்ருமம் யதா வாப்யுதகே பதந்தம்
உத்ஸ்ருஜ்ய பக்ஷீ நிபதத்யஸக்த:
ததா ஹ்யசௌ ஸுகது:கே விஹாய
முத்த: பராத்யர்த்தாம் கதிமேத்யலிங்க: “

“ஒரு மரம் ஆற்று வெள்ளத்தில் விழுகிறது. அதில் கூடு கட்டி வசித்து வந்த பறவை அந்த மரத்தின் மேல் எந்தப் பற்றையும் வைக்காமல் மேலே கிளம்பி ஆகாயத்தில் பறந்து சென்று விடுகிறது. அதுபோல முத்த புருஷரும் சுகத்தையும் துக்கத்தையும் திரஸ்கரித்து விட்டு எந்த விதமான அடையாளமும் இல்லாமல் கைவல்யத்தை அடைகிறார்.”

(சிருங்கேரி ஆசார்யர்களிடம் மிகுந்த பக்தியும், வாழும் காலத்தில் மிகுந்த அடக்கமும், எளிமையும் கொண்டு அனைவரிடமும் அன்புடனும் பழகியவர், ஸ்ரீ சேவாசக்ரா, ஸ்ரீ வித்யா தீர்த்த பௌண்டேஷன் போன்ற அமைப்புகளின் அறங்காவலராகவும் இருந்து செயல் பட்டவர், “ரிசர்வ் பேங்க்” அலுவலத்தில் பணி செய்து ஓய்வு பெற்றவர் ஸ்ரீ K. நாராயணஸ்வாமி அவர்கள்.

தனது கடேசிக் காலத்தில் சிருங்கேரியில் வித்யாரண்யபுரத்தில் வசித்து வந்தார். “சிருங்கேரியில் சங்கரர்” என்ற அருமையான ஆய்வுக் கட்டுரைத் தொடரை அம்மன் தரிசனம் மாத இதழில் எழுதி, இரண்டு பாகங்கள் கொண்ட புத்தகங்களாகப் பதிப்பித்து ஜகத்குரு ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகளின் திருவடிகளில் சமர்ப்பணம் செய்தார்.

ஸ்ரீ குருகிருபா விலாஸம் என்ற தலைப்பில் அவர் பதிவு செய்திருக்கும் கட்டுரைகளில் இருந்து பகிரப்பட்டது.)

(ஸ்ரீ குருகிருபா விலாஸம் மூன்றாம் பாகம் புத்தகத்தில் இருந்து பகிரப்பட்டது)


sringeri
sringeri

“சிருங்கேரி ஆச்சார்யர்களின் சீடர் ஸ்ரீமான் ஆதிலெஷ்மணன்”

மனத்துள் குல குருநாதரின் பாதங்களைப் பணிந்து கொண்டே லௌகிக வாழ்க்கையில் ஈடுபடுவோருக்கு அந்த குருநாதரின் துணையும், அருளும் எப்போதும் இருந்து கொண்டிருக்கும்.

அப்படி வாழ்ந்தவர் சிருங்கேரி ஸ்ரீ ஆச்சார்யர்களின் சிறந்ததோர் குருபக்தரான ஸ்ரீமான் ஆதிலெஷ்மணன் அவர்கள். பிறந்த ஊர் (முந்தைய) நெல்லை மாவட்டம் சாம்பவர்வடகரை. தன் இறுதிக் காலத்தில் தென்காசியில் இருந்தார். வேலை நிமித்தமாக மும்பையில் இருந்தார். தென்காசிச் சாரலும், குற்றால அருவியும், தென்பொதிகை அழகும் அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

“பம்பாய் தமிழ்ச் சங்கத்தின்” தலைவராகவும், “காட்பரி நிறுவனத்தின்” உயர் அதிகாரியாகவும் சிறந்த முறையில் பணியாற்றிய பெருந்தகை. திறமை மிக்க நிர்வாகி. தமிழ் அறிஞர். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த எத்துணையோ பேர்களுக்கு அவர் பணிபுரியும் நிறுவனத்திலும், அவருக்குத் தெரிந்த நிறுவனங்களிலும் வேலை வாங்கிக் கொடுத்து, எந்தப் பிரதி பலனையும் எதிர்பாராத புண்ணியவான். அடியேனுக்கும் அவர்தான் வேலை வாங்கிக் கொடுத்து நல்வழி காட்டியவர்.

அவரது தமிழ் ஆர்வத்தின் காரணமாக அவர்மீது அடியேனுக்கும், அடியேன்மீது அவருக்கும் ஒரு ஆழ்ந்த அன்பு இருந்து கொண்டே இருந்தது. அவர் தனது தமிழ்ப் பற்றை வெளிக் காட்டிக் கொண்டதைப் போல இறைபக்தி, குருபக்தியை எல்லாம் வெளிக் காட்டிக் கொண்டதில்லை. ஆனால் சிறந்த ஆன்மிக வாதி. சிருங்கேரி ஸ்ரீ ஆசார்யர்களின் பணிவான சீடர்.

1986ஆம் வருடம் சென்னை, இராஜா அண்ணாமலைபுரத்தில் ஸ்ரீமான் வைத்திய சுப்பிரமணிய ஐயர் அவர்களுடைய இல்லமான “நவசுஜா”வில் ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யா மகாஸ்வாமிகளின் வர்த்தந்தி உற்சவம் மிகச் சிறப்பகாகக் கொண்டாடப் பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலைமகள் பத்திரிக்கையின் ஆசிரியர், வாகீச கலாநிதி ஸ்ரீமான் கி.வா.ஜகந்நாதன் அவர்கள் அற்புதமான கவிமலரை வாசித்தளித்தார்கள். ஸ்ரீமான் ஆதிலெஷ்மணன் அவர்கள், கவித்துவமான வரவேற்புரை ஆற்றினார்கள். மற்றும் பல பிரமுகர்கள் அன்று உரையாற்றினர்.

அன்றைய இரவு ஸ்ரீ சாரதா ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் பூஜையின் ஆரத்தி முடிந்த பொழுது,”பக்தர்கள் அனைவரும் அவரவர் இடங்களிலேயே இருங்கள். ஸ்ரீ சாரதாம்பாள் குங்குமப் பிரசாதமும், கற்பூர ஆரத்தியும் உங்களின் இருப்பிடத்தையே தேடி வந்து அருள் பாலிக்கும்” என்று அழகு தமிழில் அவர் ஒலிபெருக்கியில் சொன்னது இன்றும் எனது செவிகளில் ஒலித்துக் கொண்டிருப்பதை உணர்கிறேன்.

1989ஆம் வருடம் செப்டம்பர் மாதத்தில் ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த மகாஸ்வாமிகள் முக்தி அடைந்த செய்தியை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். மறுநாள் மனைவியிடம் சொல்லிக் கொண்டு கையில் கொஞ்சம் ரூபாய் (நானூற்றி ஐம்பது)யுடன் வேன், பஸ் என்று பிடித்து சிருங்கேரிக்குச் சென்றேன்.

காலை பத்து மணிக்கு மேல், பஸ் விட்டு இறங்கி ஒரு சிறு கைப்பையுடன் ஓடியபடி சிருங்கேரி ஸ்ரீ மடத்தில் நுழைந்த போது,” விஸ்வநாதா….விஸ்வநாதா இங்க வா” என்ற குரலைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். ஸ்ரீமான் ஆதிலெஷ்மண மாமா, மடத்தின் இடதுபுறத்தில் இருக்கும் “சங்கர கிருபா” விடுதியில் அவர் தங்கியிருக்கும் அறையின் முன்பாக நின்று கொண்டிருந்தார். “இப்பத்தான் வரையா” என்றார். “ஆம்” என்றேன்.

முக்தி அடைந்த ஸ்ரீ ஆசார்யாளின் இறுதிச் சடங்குகள் முடிந்த அன்று இரவில் ஸ்ரீ சாரதா ஸ்ரீ சந்திர மௌலீஸ்வரர் பூஜையை ஆசார்யாளே (ஜகத்குரு ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகள்) எப்பொழுதும் போல சரியாக எட்டு மணிக்குத் துவங்கி நடத்தி வைத்தது பக்தர்களுக்கு ஆறுதலாக இருந்தது என்றும், “ஸ்ரீ சன்னிதானம் ஒரு சிறந்த துறவி. இனிமேல் அவர் நமக்கெல்லாம் துணையாக இருந்து வழிகாட்டுவார். நீ அவரை விடாமல் பிடித்துக் கொள்” என்று தனது கண்களில் நீர் பெருக அடியேனிடம் வருத்தமுடனும், நம்பிக்கையுடனும் சொன்னார்.

“மாமா…அம்மாவோட சஷ்டியப்த்த பூர்த்தியை சிருங்கேரியில் நம்ம ஆசார்யாள் சந்நிதியில் நடத்தணும்னு பிராத்தனை பண்ணிண்டேன். இப்ப எப்படி அத ஆசார்யாளிடம் கேட்கறதுன்னு தெரியலையே” என்று அழுதபடி அவரிடம் சொன்னேன்.

” விஸ்வநாதா….கவலைப் படாதே…நமக்கு ஆசார்யாள்தான் நண்பன், உறவு, ஆபத்ஸகாயர், குரு எல்லாம். அப்படித்தான் நான் இன்னிவரை நினைச்சுண்டு இருக்கேன். அதத்தான் ஒனக்கும் சொல்றேன். நீ..இன்னிக்கு சாயந்திரம் ஆசார்யாள தரிசனம் பண்ணு. அவர்கிட்ட ஒன்னோட விருப்பத்தச் சொல்லு…நிச்சயம் ஸ்ரீ சன்னிதானம் உனக்கு ஆசீர்வாதம் பண்ணுவர் ” என்றார். மேலும் தான் அன்று மதியம் மங்களூர் சென்று அங்கிருந்து விமானம் மூலமாக பம்பாய் செல்லப் போவதாகக் கூறி,” நீ இந்த சங்கர கிருபாவிலே தங்கிக்கோ … நான் ஊருக்குப் புறபடும்போது மேனேஜர் கிட்டச் சொல்லிடறேன் ” என்று மிகுந்த கனிவோடு கூறினார்.

sringeri
sringeri

துங்கா நதிக்குச் சென்று குளித்து விட்டு மாத்யான்னிஹம் செய்து, ஸ்ரீ தோரண கணபதி, ஸ்ரீ சங்கரர் ஸ்ரீ சாரதாம்பாள் தரிசனம் செய்து மதிய உணவுக்குப் பின் அறையில் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டேன். மாலை ஐந்து மணிக்குக் குளித்து விட்டு நரசிம்மவனத்திற்கு ஆசார்யாள் தரிசனத்திற்குச் சென்றேன். ஸ்ரீ சச்சிதானந்த விலாசத்தில் ஸ்ரீ சன்னிதானம் அவர்களை சில பிரமுகர்கள் தரிசனம் செய்து விட்டு வந்து கொண்டிருந்தார்கள். மாலை மணி ஆறு இருக்கும். ஸ்ரீ சன்னிதானம் அவர்களின் அறையின் முன்வாசலில் நின்று கொண்டிருந்தேன். வேறு ஒருவரும் அப்பொழுது அங்கிருக்க வில்லை. ஸ்ரீ மகாசன்னிதானத்திற்கு உதவியாளராக இருந்த ஸ்ரீமான் மஹாபலா அவர்கள் வெளியில் வந்து,” நீங்கள் யாரு? ஆசார்யாள் இப்ப ஸ்னானத்திற்குப் புறப்படப் போறார்” என்றார். ” என் பேர் விஸ்வநாதன்.. ஆசார்யாளை தர்சனம் பண்ண வந்தேன்” என்றேன். எங்களின் இந்த உரையாடலைக் கேட்ட ஸ்ரீ சன்னிதானம் அவர்கள்,” கவிஞர் விஸ்வநாதனா…உள்ள வரச்சொல்லு” என்று அழைத்தார்.

ஸ்ரீ சன்னிதானம் அவர்களை நமஸ்கரித்தேன். “ஆசார்யாள் எனக்கு என்ன சொல்லணும்னே தெரியலே..” என்றவுடன், ” பரவால்லேப்பா…எல்லாம் ஈஸ்வர சங்கல்ப்பம்….உனக்கு என்ன வேணும்? என்றார். “எங்க அம்மாவுக்கு சஷ்டியப்பத பூர்த்திய ஆசார்யாள் சந்நிதியில் பண்ணனும்னு ஆசை. உங்க கிட்ட எப்படிக் கேட்கணும்னு தயங்கினேன்.. ஆதிலெஷ்மண மாமாதான் இன்னிக்கு சாயந்திரம் ஆசார்யாளை தரிசனம் பண்ணு. உன்னோடு விருப்பத்த தைரியமா அவர்கிட்டச் சொல்லு” என்று வழிசொன்னார் என்றேன்.

“ஒங்க அம்மா சஷ்டியப்த்த பூர்த்தி எப்ப வரது” என்று கேட்டார். வரும் “ஐப்பசி” மாதம் என்றேன்.

“ஒங்களோடு ஆசைப்படியே சிருங்கேரியில் பண்ணலாம். ஆசார்யாள் இங்கேதான் இருப்பேன். நாளைக்கு நீங்க பேஷ்கார் ஆபீஸ்ல போய்ச் சொல்லுக்கோ. கவலைப்படாமல் போயிட்டு வாங்கோ” என்று ஆசிதந்தார்.

குருநாதர் ஸித்தி அடைந்த சிலதினங்களில், ஒரு எளிய சீடனின் விருப்பத்தைப் பூர்த்தி செய்த ஜகத்குரு ஸ்ரீ பாரதீ தீர்த்த ஸ்ரீ சன்னிதானம் அவர்களின் பெருங் கருணையையும், அதற்கு வழிகாட்டிய ஸ்ரீமான் ஆதிலெஷ்மண மாமாவின் அன்பையும் நினைத்து மனத்தால் நன்றியோடு நமஸ்கரித்தேன். அந்த நிமிடத்தின் உள்ள உணர்வுகளை உள்ளபடியே விவரிக்க அடியேனுக்குப் பக்குவமும் இல்லை, படிப்பும் இல்லை.

மும்பையில், செம்பூரில் ஸ்ரீ சாரதாம்பாள் ஆலயமும், சிருங்கேரி மடமும் நிர்மாணிக்கும் குழுவில் ஸ்ரீமான் ஆதிலெஷ்மண மாமாவின் பங்கும் கணிசமானது. அதேபோல் தனது நண்பர் ஸ்ரீமான் TAJ நடராஜ ஐயருடனும், கிராம ஜனங்களுடனும் சேர்ந்து தென்காசியில் இருக்கும் “ஸ்ரீ ரெட்டைப் பிள்ளையார்” கோவிலுக்கும் ஜகத்குரு ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகளின் திருக்கரங்களினால் கும்பாபிஷேகமும் செய்து வைத்து மகிழ்ந்தார்.

பணியில் இருந்து ஓய்வு பெற்றபின்பு சிலகாலம் மும்பையில் இருந்தார். பின்பு 1991ஆம் வருடம் தனக்குப் பிடித்த தென்காசியில் தனக்கு மனைவி திருமதி. சரஸ்வதி அம்மாளுடன் சில மாதங்கள் இருந்தார். திடீர் உடல் நலக்குறைவால் 01.08.1991ஆம் நாளில் குருநாதரின் திருவடி நிழலை அடைந்தார். மறுநாள் தென்காசிக்குச் சென்று அவரது குடும்பத்தினர்களைச் சந்தித்து எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டேன்.

புறப்படும் நேரம் அவரது அண்ணனின் மூத்த மகன் என்னிடம்,” சித்தப்பா இரண்டு தினங்கள் முன்புதான் சிருங்கேரி ஆசார்யாளுக்கு சாதுர்மாஸ்ய பிக்ஷா வந்தனத்திற்கும், ஸ்ரீ சாரதாம்பாளுக்கும் காணிக்கையாக ஒரு காசோலை எழுதி அனுப்பிவைத்தார். நேரில் செல்ல வேண்டும் என்று விரும்பினார். திடீர் உடல்நலக் குறைவால் முடியால் போனது” என்று சொன்னார்.

குருநாதரின் மேன்மைகளை உணரத்தான் முடியும். வெளியில் சொல்ல வார்த்தைகளுக்கு வலிமை கிடையாது.

“குருவின் அருளெனும் அமுதக் கடலின் ஒருதுளியாகவே சீடரும் கலந்து விடுவர். அப்படியோர் அமுதத்துளியே ஸ்ரீமான் ஆதிலெஷ்மண மாமா.”

(வித்யையும் விநயமும் தொடரும்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

Topics

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories