

காரியாபட்டி அருகே டூ வீலரில் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் மீது கிரஷர் ஜல்லி ஏற்றிக்கொண்டு வந்த லாரி மோதிய விபத்தில் மாணவி கால் பறி போன சோகம் – பொதுமக்கள் மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டதை தொடர்ந்து வட்டாச்சியர் கல்குவாரிக்கு பூட்டி சீல் வைத்தார்
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கீழஉப்பிலிகுண்டு கிராமத்தைச் சேர்ந்தவ ஆதிநாராயணன் மகன் வர்கீஸ் நவீன் (16), லட்சுமணன் மகள் லாவண்யா ( 15) இரண்டு மாணவர்கள் காரியாபட்டி அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை 2 பேரும் இருசக்கர வாகனத்தில் கீழஉப்பிலிகுண்டு கிராமத்தில் இருந்து ஆவியூர் பஸ்ஸ்டாப்பிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் இருந்து கிரஷர் ஜல்லிகற்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி எதிர்பாராத விதமாக இரண்டு மாணவர்கள் மீது மோதியதில் மாணவர்களுக்கு கால் முறிவு ஏற்பட்டு படுகாயமடைந்தனர் .
தகவலறிந்த காரியாபட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்து வருகின்றார். மேலும் காயமடைந்த மாணவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட நிலையில் அவருடைய கால் முற்றிலுமாக சேதம் அடைந்து உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .
இதனால் ஆத்திரமடைந்த கீழ உப்பிலிக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் அப்பகுதியில் செயல்பட்டு வரும் கிரசரை உடனடியாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் இருபுறமும் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கும் மேலாக வாகனங்கள் அணிவகுந்து நின்றது.மேலும் சம்பவ இடத்தில் காரியாபட்டி வட்டாட்சியர் விஜயலட்சுமி, அருப்புக்கோட்டை ஏ எஸ் பி காரட் கரூன் உத்தராவ், ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தையின் முடிவில் கல்குவாரி மூடப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்து உடனடியாக அந்த கல்குவாரியை மூடியதை அடுத்து போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.