வீட்டினுள் பதுக்கி வைக்கப்பட்ட பட்டாசு வெடித்து விபத்து: முதியவர் சாவு

Published:

கோவை:

கோவையில் வீட்டினுள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை, செல்வபுரம் போலீஸ் எல்லைக்கு உள்பட்ட கெம்பட்டி காலனி, பேரூர் பிரதான சாலையில் உள்ள தனியார் தோட்டத்தில் வசித்து வருபவர் தேவி. இவரது மகன் நவீன் (வயது 19). இவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். தேவியின் வீடு இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. ஒரு பகுதியில் தேவியும் அவரது மகனும் வசித்துள்ளனர். மற்றொரு பகுதியில் தேவியின் தந்தை சண்முகம், சகோதரி துளசிமணி, கணவர் சிவக்குமார் வசித்து வந்தனர். சில நாள்களாக சண்முகத்தின் வீட்டுக்கு வெளியூரிலிருந்து புதிய நபர்கள் சிலர் சிவக்குமாருடன் வந்து சென்றுள்ளனர்.

முதியவர் ஒருவரை சண்முகத்தின் வீட்டுக்கு சிவக்குமார் வியாழக்கிழமை காலை அழைத்து வந்துள்ளார். இந்நிலையில், வியாழக்கிழமை காலை 11 மணிக்கு மேல் சண்முகம் வசித்த வீட்டில் பயங்கர சப்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சண்முகம் மற்றும் தேவி வசித்த வீட்டின் இரு பகுதிகளும் வெடித்து சிதறி தரைமட்டமாயின. வீட்டின் இரு பக்கங்களிலும் உள்ள வீடுகளின் பக்கவாட்டுச் சுவர்கள் இடிந்து சேதமடைந்தன.

சத்தம் கேட்டு அருகில் வசிப்போர் சென்று பார்த்தபோது, வெடி விபத்தில் சிக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்து கிடந்தார். அருகில் நாய் இறந்து கிடந்தது. மேலும் தேவியின் மகன் நவீன் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற, கோவை மாநகரக் காவல் துணை ஆணையர் ரம்யாபாரதி, உதவி ஆணையர் அனிதா உள்ளிட்ட போலீஸார் மற்றும் கோவை மேற்கு மண்டல தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இணை இயக்குநர் எம்.சாகுல் அமீது, கோவை கோட்ட அலுவலர் சந்திரன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் சம்பவ இடத்தில் சோதனை செய்தனர். மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டும் சோதனை நடைபெற்றது.

விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து, வெடி மருந்து, ரசாயன பொருள்கள், லாலா பட்டாசு எனப்படும் அதிக சப்தம் தரும் வெடிகள் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டன. அவை ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக சிவகுமார், துளசிமணி, சண்முகம், தேவி ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 304 (ஏ) (அலட்சியத்தால் மரணம் ஏற்படுத்துதல்), 286 (வெடிபொருளை வைத்து அலட்சியமாக நடந்து கொள்ளுதல்) மற்றும் வெடிமருந்து தடை சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சிவகுமார் தவிர மற்ற மூவரையும் போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சிவகுமார் தேடப்பட்டு வருகிறார்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்பனைக்காக அந்த வீட்டில் முறைகேடாக வெடிகளை சிவகுமார் வாங்கி வைத்திருந்துள்ளார். மேலும் அங்கு பட்டாசு தயாரிக்கும் போதே இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. முழு விவரங்கள் தலைமறைவாக உள்ள சிவகுமார் பிடிபடும்போதே தெரியும். இறந்தவர் யார் என்பதும் தெரியவில்லை. தொடர்ந்து விசாரிக்கப்படுகிறது என்றனர். சிவகுமார் மீது ஏற்கெனவே கடந்த 2011-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்து விற்பனை செய்தது தொடர்பாக செல்வபுரம் போலீஸில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img